இன்று அவர் நினைவு நாள்.

இன்று அவர் நினைவு நாள்.  
அழகியசிங்கர்

ஆத்மாநாமை நான் முதன் முதலாக நண்பர் வைத்தியுடன்தான் சந்தித்தேன்.  என்னை ஆத்மாநாமிற்கு அறிமுகப்படுத்தினார் வைத்தி. ழ வெளியீடாக வந்திருந்த காகிதத்தில் ஒரு கோடு, அவரவர் கை மணல், சூரியனுக்குப் பின் பக்கம் என்ற மூன்று கவிதைத் தொகுதிகளை வாங்கினேன்.  காகிதத்தில் ஒரு கோடு என்ற புத்தகத்தில் ஆத்மாநாமின் கையெழுத்தைப் போடும்படி கேட்டுக்கொண்டேன்.

அன்று ஆத்மாநாம் நான் வைத்தி மூவரும் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம்.  அதன்பின்,  சாந்தி தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றோம்.  ஆனால் ஒன்றும் வாங்கவில்லை.  ஏன் அங்கு சென்றோம் என்பது புரியாத புதிர்.  அவருடைய நிஜம் என்ற கவிதையைப் பற்றி விஜாரித்தேன். அவர் பதில் சொன்னது ஞாபகத்தில் இல்லை.
அந்தக் கவிதை இதோ:
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்
இரண்டாவது முறையாக நான் ஆத்மாநாமை இலக்குக் கூட்டத்தில் சந்தித்தேன்.  ஒன்றும் பேசவில்லை.  ஆனால் அவர் கையில் ழ என்ற பத்திரிகையை வைத்துக் கொண்டிருந்தார். அப் பத்திரிகையை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.    
மூன்றாவதாக நான் ஆதமாநமை ஞாநியின் திருமண வைபத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த பரீக்ஷா நாடகத்தில் சந்தித்தேன்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆத்மாநாமிடம் நகுலனைப் பற்றி கேட்டேன்.  ‘அவர் முக்கியமான எழுத்தாளர்,  எளிதில் புரியாது,’  என்றார் ஆத்மாநாம்.  என்னிடம் பேசிக்கொண்டு இருந்தவர், விமலாதித்த மாமல்லன் இருக்கும் இடத்திற்கு எழுந்து போய்விட்டார். மாமல்லனிடம் ஆத்மாநாம் கொடுத்தப் புத்தகத்தை வாங்கச் சென்று விட்டார்.

நான்காவது முறையாக ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் ஆத்மாநாமைச் சந்தித்தேன்.  நானும் அவரும் கைக் குலுக்கிக் கொண்டோம். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

ஐந்தாவதாக அவர் தற்கொலை பற்றிய செய்தியை அறிந்தேன்.  அவருடைய நண்பர்கள் இரங்கல் கூட்டமொன்றை நடத்தினார்கள்.   நானும் கலந்து கொண்டேன்.  உருக்கமான இரங்கல் கூட்டம் அது. முதன் முதலில் தற்கொலை செய்துகொண்ட கவிஞன் ஆத்மாநாமாகத்தான் இருக்க வேண்டும்.

இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமிள், வெளியேற்றம் என்ற ஆத்மாநாம் கவிதையைப் படித்துவிட்டு கேவி அழுதார். நம்ப முடியாமல் இருந்தது.  இன்று ஆத்மாநாம் நினைவு நாள்.  என் நண்பர் வைத்தி, வளைந்த மீசைக்கொண்ட நண்பரை இனி பார்க்க முடியாது என்று ஆத்மாநாம் பற்றி எழுதிய கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன