பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்…………….
அழகியசிங்கர்
தளம 14வது இதழில் இருந்து பொன் குமாரின் பூனையைப் பற்றி எழுதிய கவிதையை அளித்துள்ளேன். தளம் பத்திரிகை பாரவி என்ற தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் தொடர்ந்து நடந்து வருகிறது. அவருக்கு என் வாழ்த்துகள். எந்தச் சிறுபத்திரிகை என்றாலும் தனிப்பட்ட படைப்பாளியின் முயற்சியின் பேரிலேயே நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கூட்டாக நடத்த வேண்டுமென்று நினைத்தால் சிறுபத்திரிகை நின்றுவிடும். அதற்கு உதாரணமாக கசடதபற, பிரஞ்ஞை போன்ற பத்திரிகைகளைக் குறிப்பிடலாம். சிறப்பாக தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் நடந்த பத்திரிகை சி சு செல்லப்பாவின் எழுத்து. 120 இதழ்கள் வரை வந்துள்ளன. தளம் இப்படி பாரவி என்ற தனிப்பட்வரின் முயற்சியில் 14 இதழ்கள் வரை கொண்டு வர முடிந்துள்ளது. இதே அவர் கூட்டாக சிலரை சேர்த்தால் இது சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். ஏன் நானே என் தனிப்பட்ட முயற்சியால் விருட்சம் பத்திரிகையின் 99வது இதழ்கள் வரை கொண்டு வந்துள்ளேன். 100வது வரும் இந்தத் தருணத்தில் என்னால் தளம் மாதிரி ஒரு இதழை அத்தனைப் பக்கங்களுடன் கொண்டு வர சாத்தியமே இல்லை.
காலைச் சுற்றிய பூனை
பொன் குமார்
ஒரு குழந்தை வளர்ப்பதற்கு
ஒப்பானது
ஒரு பூனை வளர்ப்பது
வீட்டுக்குள்
எங்குச் சென்றாலும்
காலைச் சுற்றிச் சுற்றியே
வரும்.
தூங்கும்போது
வயிற்றினடியில்
வந்து படுத்துக் கொள்ளும்
உட்கார்ந்திருந்தாலோ
மடியில்
அடைக்கலமாகி விடும்
எப்பகுதியில் இருந்தாலும்
மியாவ் என்றால் போதும்
ஒரு நொடிக்குள் முன்னிற்கும்
பூனை இருப்பதால்
எட்டிப் பார்ப்பதே இல்லை
எலிகள்
பழகி விட்டதால்
பாலினைத் தீண்டாத பண்பு
பாரட்டத் தக்கது.
அணுக்கும் பூனைக்கும்
அடையாளம் மீசை.
ஆண் என்பதால்
அடர்த்தியாகவே இருந்தது
ஆசையாகவும் இருந்தது
குடும்ப அட்டையில்
இடம் பெறும் அளவிற்கு
ஒன்றியது
ஒரு வாரமாக காணவில்லை
ஒரு பெண் பூனை
உலவியதாக தகவல்