அழகியசிங்கர்
டாம் டைக்வேர் எடுத்த ரன் லோலா ரன் என்ற படம் சற்று வித்தியாசமானது. இது ஒரு சுவாரசியமான படமும் கூட. படம் முழுவதும் லோலா என்பவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள். லோலாவின் ஓட்டத்தை ஒட்டி இந்தப் படத்தை எடுத்துள்ளார். ஓட்டத்துடன் காலத்தையும் கட்டிப் போடுகிறார்.
லோலாவின் காதலன் மானி அவளுக்குப் போன் செய்கிறான். அவளை போனில் திட்டுகிறான். குறிப்பிட்ட நேரத்திற்கு லோலா அவனைச் சந்திக்காமல் சென்றதால், மானி சோதனை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க கடத்தல் தொழிலில் கிடைத்த வைரங்களை ஓரிடத்தில் ஒப்படைத்து பணத்துடன் வருகிறான். அவன் எதிர்பார்த்த இடத்தில் லோலா சரியான நேரத்தில் வராததால் பை நிறைய பணத்துடன் ரயிலில் பயணம் செய்ய நேரிடுகிறது. சோதனை அதிகாரிகளைப் பார்த்தபோது, எடுத்துக்கொண்டு வந்த பணப்பை ரயிலில் ஒரு மூலையில் வைத்துவிட்டு இறங்கி ஓட வேண்டியிருந்தது. அவனுடன் அந்தச் சமயத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு தாடிக்காரர் பணப்பையை எடுத்துக் கொண்டு விடுகிறார்.
அந்தப் பணப் பையில் இருந்த பணத்தை திருப்பி கடத்தல்காரர்களிடம் கொடுக்காமல் இருந்தால், அவன் உயிருக்கே ஆபத்து. லோலா அவனை சந்திக்க முடியாமல் போனதற்கு அவள் ஓட்டி வந்த பைக்கை யாரோ எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக சொல்கிறாள். இன்னும் 20 நிமிடத்தில் 12 மணி அடிப்பதற்குள் ஒரு லட்சம் பணம் கொண்டு வரும்படி அவளிடம் இரைஞ்சுகிறான். லோலா தன் காதலனை காப்பாற்ற தன் அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறாள். காதலனோ 20 நிமிடத்தில் அவன் இருக்குமிடத்திற்கு பணத்துடன் வரச் சொல்கிறான். அப்படி வராவிட்டால் எதிரிலுள்ள கடைக்குச் சென்று கொள்ளை அடிக்கப் போவதாக அழுதுகொண்டே சொல்கிறான். லோலா தான் எப்படியும் வந்து விடுவதாக சொல்கிறாள்.
லோலா காதலனை சந்திக்கவும், பணத்தை அப்பாவிடம் பெறவும் ஓடுகிறாள். ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவள் அப்பா அலுவலகத்தில் தன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவளை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இந்தத் தருணத்தில் லோலா உள்ளே நுழைகிறாள். இந்தப் படத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கியமானதாகப் படுகிறது. லோலா வேகமாக ஓடிக்கொண்டு வரும்போது, ஒரு சைக்கிள் விற்பனை செய்ய விரும்புவனைப் பார்க்கிறாள். அவன் சைக்கிள் வேண்டுமா என்று கேட்கிறான். அது திருட்டு சைக்கிள் வேண்டாம் என்று குறிப்பிடுகிறாள் லோலா. அவள் காதலனின் பணத்தை எடுத்துக்கொண்டு போகிறவனை வழியில் பார்க்கிறாள். அவன் அவளைக் கடந்து செல்கிறான். பின் அவள் அப்பாவின் அலுவலகத்தில் அவள் நுழையும்போது, அவள் எதிரில் வரும் ஒருவளுடன் கிட்டத்தட்ட மோதுவது போல் ஓடுகிறாள். இந்த இடத்தில் அப்படி மேதினால் என்ன நிலைக்குத் தள்ளப் படுவோம் என்று கற்பனையில் அவள் நிலையை படத்தில் காட்டுகிறார்கள்.
பின் அப்பா அறைக்குள் நுழைந்தபோது, அவர் காதலி, இவள்தான் உங்கள் மகளா என்று கூறியபடி வெளியே போய் விடுகிறாள். லோலா அப்பாவிடம் பணம் கேட்கிறாள். அவர் தரமறுக்கிறார். அவளை திட்டி வெளியே அழைத்துப் போய் விட்டுவிட்டு இனிமேல் வீட்டிற்கே வரப் போவதில்லை என்கிறார்.
செய்வதறியாது திகைக்கிறாள் லோலா. அலுவலக வாசலில் ஒரு வயதானவள் எதிர் படுகிறாள். அவளிடம் நேரம் கேட்கிறாள். 12 மணி அடிக்க மூன்று நிமிடங்கள்தான் இருக்கிறது. லோலா அங்கிருந்து வேகமாக மானியைப் பார்க்க அவசரம் அவசரமாக ஓடுகிறாள். 12 அடித்தவுடன், மானி எதிர் உள்ள கடைக்குச் சென்று கொள்ளை அடிக்க துப்பாக்கியை எடுத்து சத்தம் போடுகிறான். லோலாவும் அவனுடன் சேர்ந்து சத்தம் போடுகிறாள். வெளியே வரும்போது போலீசு அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. மானி கொள்ளை அடித்தப் பணத்தை தூக்கி எறிகிறான். போலீசு சுட லோலா அடிப்பட்டு கீழே விழுகிறாள். மானியுடன் இருந்த காதலை எண்ணிப் பார்க்கிறாள். ஒரு நிமிடம் மனதிற்குள் நினைத்துப் பார்க்கிறாள். üநான் சாகக் கூடாது,ý என்று.
ஒரு நிமிடம் முன்னதாக வந்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசனை போகிறது. திரும்பவும் லோலாஓடி வருகிறாள். அதே நிகழ்ச்சிகளை சந்திக்கிறாள். பணத்தைத் திருடிய தாடிக்காரன் கடந்து போகிறான். சைக்கிள் காரன் கடந்து போகிறான். ஆம்புலன்ஸ் வண்டி கடந்து போகிறது. கன்னியாஸ்திரிகள் கடந்து போகிறார்கள். அப்பா அலுவலகத்தில் நுழைகிறாள். அவள் அப்பா அவளைப் பற்றியும் அவள் அம்மாவைப் பற்றியும் மட்டமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் அவருடைய காதலியுடன். உள்ளே நுழைந்த லோலா அப்பாவிடம் பணம் கேட்கிறாள். அவர் பணம் தர மறுக்கிறார். அந்த அறையில் உள்ள எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறாள். பின் வெளியே வந்து வாசலில் காவல் காரனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து அப்பாவை மிரட்டி ஒருலட்சம் பணத்தைத் தயார் செய்து லோலா அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடுகிறாள்.
காதலனை சரியாக 12 மணிக்கு சந்திக்கிறாள். அவன் பெயரைக் கூப்பிட்டு
கத்துகிறாள். அவனைப் பார்ப்பதற்குள் மனதில் அவளை அவன் பார்க்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறாள். அவன் அவளைப் பார்த்து அவளை நோக்கி திரும்பி வருகிறான். வேகமாக வரும் ஆம்புலன்ஸ் வண்டி அவன் மீதுமோதி அவனை கீழே சாய்த்து விடுகிறது. ஆனால் அவன் சாக விரும்பவில்லை. திரும்பவும் நிகழ்ச்சிகள் பின்னோக்கிப் போகின்றன.
லோலா திரும்பவும் வீட்டிலிருந்து கிளம்பி ஓடி வருகிறாள். இப்போது சம்பவங்கள் ஒவ்வொன்றும் வேறு விதமாக மாறி விடுகின்றன. சைக்கிள்காரன் தாடிக்காரனை ஒரு சின்ன தெரு ஓர ரெஸ்டரான்டில் சந்தித்து அவன் சைக்கிளை விற்கிறான். சைக்கிளில் தாடிக்காரன் வருகிறான். அப்பாவை சந்திக்கசச் செல்லும் லோலா அவரைச் சந்திக்க முடியவில்லை. அதன் முன் அப்பாவுடன் இருக்கும் அவருடைய மேலதிகாரியான மேயரைச் சந்திக்கிறாள். லோலாவின் அப்பா மேயருடன் அவர் காரில் போகும்போது எதிரில் ஒரு காரில் மோதி விடுகிறார்கள். அவர்கள் இருவரும் காரிலேயே இறந்து விடுகிறார்கள்.
செய்வதறியாத லோலா வேகமாக ஓடி வரும்போது, ஒரு டிராக்டர் மீது மோதிக் கொள்ள இருக்கிறாள். டிராக்டர் ஓட்டி வண்டியை அவள் மீது மோதாமல் அவளைத் திட்டுகிறான். அந்த வண்டி இருக்குமிடத்திலிருந்து எதிரில் காசினோ இருக்கிறது. அங்கு செல்கிறாள். அவள் கையில் உள்ள பணத்தை வைத்து சூதாட்டம் ஆடி ஒரு லட்சம் சம்பாதிக்கிறாள். அதை ஒரு பையில் போட்டு அந்த இடத்தை விட்டு ஓடி வருகிறாள். திரும்பவும் அவள்ஓடி வரும்போது சிவப்பு நிற ஆம்புலன்ஸ் வருகிறது ஒரு பெரிய கண்ணாடி பலர் தூக்கிப் பிடித்தபடி நடு ரோடில் நடந்து வருகிறார்கள். ஆம்புலன்ஸ் அவர்கள் மீது மோதாமல் நிற்கிறது. ஓடி வந்து கொண்டிருந்த லோலாவும் அந்த ஆம்புலன்ஸில் ஏறிக் கொள்கிறாள். ஆம்புலன்ஸில் ஒரு இதய நோயாளி. சாகும் நிலையில் இருக்கும் அவனை, லோலா அவன் கையைப் பிடித்தபடி நான் இருக்கிறேன் என்கிறாள். அவனுடைய இதயத் துடிப்பு சீராகி அவன் சரியாகிவிடுகிறான். லோலா அவள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி அவள் காதலனை சத்தம்போட்டு கூப்பிடுகிறாள்.
அவள் காதலன் மானி டெலிபோன் பூத்திலிருந்து வெளியே வரும்போது பணத்தைத் திருடிய தாடிக்காரனை சைக்கிளில் செல்வதைப் பார்க்கிறான். அவனை துப்பாக்கியால் மிரட்டி அந்தப் பணப்பையைப் பறித்துக் கொள்கிறான். பின் வேகமான பணத்தை கொடுத்துவிட்டு லோலாவைப் பார்க்க வருகிறான். லோலாவும் அவனும் சந்தித்துக் கொள்கிறார்கள். üஎல்லாம் முடிந்து விட்டது,ý என்கிறான் காதலன். பின் அவள் கையில் வைத்திருக்கும் பை என்ன என்கிறான் மானி. அவள் சிரிக்கிறாள். படம் இத்துடன் முடிந்து விடுகிறது.
ஒரே சம்பவம் மூன்று முறை வெவ்வேறு விதமாக காட்டியிருக்கிறார்கள். ஒருமுறை லோலா சுட்டுக் கொள்ளப் படுகிறாள். ஒருமுறை மானி விபத்தில் சிக்கி இறந்து விடுகிறான். மூன்றாவது முறை அவள் அப்பா விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.
காலத்தையும் விதவிதமான சம்பவங்களையும் வைத்து இந்தப் படம் ரொம்ப பிரமாதமாக எடுக்கப் பட்டிருக்கிறது. திறமையான தொழில் நுட்பங்களையும், கிராபிக்ஸ்ஸ÷ம் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மாதிரி மாறிவிடக் கூடியது என்பதை டாம் டைக்வர் என்ற ஜெர்மானிய டைரக்டர் 1998லேயே இப்படத்தை எடுத்துள்ளார். இன்றும் இப் படத்தைப் பார்க்க பிரமிப்பாக உள்ளது.