அழகியசிங்கர்
குமரகுருபரன் என்ற கவிஞர் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்தது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. உண்மையில் எனக்கு அவர் யார் என்று தெரியாது. சமீபத்தில் எழுதுபவர்களில் பல படைப்பாளிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பலருடைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருகிறேன். குறிப்பாக கவிதைத் தொகுதிகளை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன். யார் இந்த குமரகுருபரன் அவர் எப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவார் என்றெல்லாம் தெரியாது. அவருக்கு இயல் விருது கிடைத்த செய்தியை அறிந்தபோது அவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தேன். யூ ட்யூப்பில் அவருடைய புத்தக வெளியீட்டு விழா நடந்த விபரம் அறிந்து பார்த்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் இந்திரன் பேசியதையும் பார்த்தேன். இப்போது இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது. முன்பு அதெல்லாம் கூட சாத்தியம் இல்லை. இப்படித்தான் சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. நான் படித்த காஸ்டினேடா புத்தகங்களில் üமரணம்தான் உன் எதிரிý என்ற வாக்கியம் இன்னும் கூட என்னால் மறக்க முடியாதது. இதை விவரிக்கிறபோது சூழ்நிலை எப்படியெல்லாம் சுழன்று போய்க் கொண்டிருக்கிறது என்று அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும். மரணம் எப்படி ஒருவரை சூழ்ந்துகொண்டு நெருக்கம் கொடுக்கிறது என்பதை விவரித்தபடி சென்று கொண்டிருக்கும். மரணத்தின் முன் நாமெல்லாம் பகடைக் காய்கள்தான். ஒன்றும் செய்ய முடியாது.
‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது’ என்பது அவருடைய கவிதைத் தொகுதியின் தலைப்பு. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று தூண்டுகிற தலைப்பு.
இத் தருணத்தில் சங்கர ராம சுபபிரமணியன் 1998ல் விருட்சத்தில் எழுதிய கவிதைகளை இங்கு அளிக்கிறேன்.
மரணம் பற்றிய இரண்டு குறிப்புகள்
1. ஏதோ ஒரு
சமனற்ற நிலையில்
காகத்தின் இறக்கை
பட்டும்
என் மரணம்
நிகழக்கூடும்.
2. சாவை
கை விரித்து, நாதுருத்தி
சிறுமி நிகழ்த்தி
காட்டியது இன்னும்
பயமுறுத்துகிறது.