அழகியசிங்கர்
பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர். தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார். அவர்களும்.
வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து. ýýஏன் நீங்கள் இப்போதெல்லாம் வெளியே வருவதில்லை.
அழ கியசிங்கர் : அப்பாதான…
மோஹினி : இப்போது எப்படி இருக்கிறார்?
அழகியசிங்கர் : அப்படியேதான் இருக்கிறார். என்ன சில நாட்கள் இரவில் சத்தம் போட்டு கூப்பிடுவார். சில நாட்கள் அவர் இருப்பதே தெரியாது.
ஜெகன் : கஷ்டம்தான்.
மோஹினி : உங்களுக்கு வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை அல்லவா?
அழகியசிங்கர் : ஆமாம். நான் வெளியூர் சென்று ஒரு வருடம கூட ஆகிவிடும் போல் தோன்றுகிறது. எந்தக் கூட்டத்திற்கும் சென்றாலும் என்னால் 3 மணி நேரம 4 மணிநேரம் என்று இருக்க முடியாது.
ஜெகன் : எதிர்பாராதவிதமாக நடந்த புததகக் காட்சியைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அழகியசிங்கர் : புததகக் காட்சியின்போது உண்டான உஷ்ணத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு உதவி செய்த நண்பருக்கும் என் வயதுதான். அவரை நினைத்து எனக்கு ஆச்சரியம்.
மோஹினி : உங்கள் வயதில் புத்தகக் காட்சி நடத்துபவர்க்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
ஜெகன் : புத்தகமும் விற்க முடியவில்லை என்றால் இன்னும் ஏமாற்றமாக இருக்கும்.
அழகியசிங்கர் : அடிப்படை வசதி கொஞ்சம் குறைவுதான். முதியவர்கள் ஸ்டாலைப் பார்க்க புத்தகக் காட்சிக்குள்ளேயே ஒரு மூவிங் வண்டி வைத்திருக்க வேண்டும்.
மோஹினி : சனி ஞாயிறுகளில் காலையிலிருந்து ஒருவர்ஸ்டாலைப் பார்த்துக் கொள்வது என்பது கஷ்டம்தான்.
அழகியசிங்கர் : எனக்கு உதவி செய்த நண்பர் அதைத் தண்டனையாக நினைக்கவில்லை. அதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவருக்கு என் நன்றி எப்போதும் உண்டு.
ஜெகன் : அவர் பெயரை சொல்ல மாட்டீரா?
அழகியசிங்கர் : அவர் பெயரை அடிக்கடி சொல்வதுண்டு. சொல்கிறேன். கிருபானந்தன்தான் அவர் பெயர்.
மோஹினி : புத்தகக் காட்சி என்பதே ஒரு வியாபாரம். கோடிக்கணக்கில் புத்தகங்கள் விற்கும் வியாபாரம்.
ஜெகன் : இந்த முறை குஷ்பு வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் வந்து அசத்தி விட்டார்கள் போலிருக்கிறது.
மோஹினி : அப்படியெல்லாம் அழைத்து வந்து புத்தகம் விற்க டிரிக் செய்கிறார்கள்.
அழகியசிங்கர் : புத்தகம் என்பது அறிவு சம்பந்தமான விஷயம். அதை எடுத்துப் படிக்க வேண்டும். சோப்பு வியாபாரத்திற்கு விளம்பரம் செய்வது போல் செய்யக் கூடாது.
மோஹினி : வேற வழி இல்லை என்றுதான் தோன்றுகிறது. புத்தகத்தை எப்படித்தான் விற்பது?
ஜெகன் : உண்மைதான். நீங்கள் என்னன்ன புத்தகங்கள் வாங்கினீர்கள்?
அழகியசிங்கர் : விலை மலிவாகக் கிடைத்த ஆங்கிலப் புத்தகங்கள்.
ஜெகன் : கவிதைப் புத்தகம் விற்றிருக்காதே?
அழகியசிங்கர் : நான் கொண்டு வந்த நான்கு புத்தகங்களில் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைப் புத்தகம்தான் அதிகம் விற்றது.
ஜெகன் : எத்தனைப் பிரதிகள்?
அழகியசிங்கர் : தயவுசெய்து கேட்காதீர்கள். எத்தனைப் பிரதிகள் என்பதை சொல்ல விரும்பவில்லை.
மோஹினி : நீங்கள் சொல்லாமல் இருந்தால், எத்தனைப் பிரதிகள் என்று எல்லோருக்கும் கேட்கத் தோன்றும்.
அழகியசிங்கர் : சொல்ல விரும்பவில்லை. இந்தப் புத்தகக் காட்சியினால் முதல் முறையாக விருட்சம் புத்தகங்கள் அதிகமாக விற்றது. இனிமேலும் அது தொடர வேண்டும்.
இந்தப் புத்தகக் காட்சியின்போது நடந்த ஒரு சோக நிகழ்ச்சியையும் பகிர்நது கொள்ள விரும்புகிறேன். என் எழுத்தாள நண்பர் ஐராவதம் மனைவியும் இந்த மாதம் மூன்றாம் தேதி இறந்து விட்டார். ஐராவதம் இறந்து 2 ஆண்டுகள் ஓடி விட்டன.
மோஹினி, ஜெகன் : அவருடைய ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.