புத்தகக் காட்சி கற்றுத் தரும் பாடம்

அழகியசிங்கர்

ஒவ்வொரு முறையும் சென்னைப் புத்தகக் காட்சி எனக்கு பாடம் கற்றுத் தர தவறுவதில்லை.  இந்த முறையும். என் நோக்கம் புத்தகங்களைப் பதிப்பித்து லாபம் சம்பாதிப்பது அல்ல.  அப்படியே அதுமாதிரியான நோக்கம் இருந்தாலும் அது நிறைவேறப் போவதுமில்லை. என்னை விட பல பேர்கள் இதில் கில்லாடியாக இருக்கிறார்கள். விருட்சம் வெளியீடாக நான் கொண்டு வருவது ஐம்பது அறுபது தலைப்புகளில் அடஙகிவிடும்.  அதில் பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள்.  
கிட்டத்தட்ட 800 கடைகள் கொண்ட இந்தப் புத்தக ஸ்டால்களைப் பார்க்குமபோது ஆச்சரியமாக இருக்கிறது.   பல இடங்களை முழுதாகப் பார்க்க முடியவில்லை.  எல்லோரும் விதம் விதமாய் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள்.  என் மனம் துள்ளாமல் இல்லை. 
நான் வெளியிட்டுள்ள கொஞ்சமாகக் கொண்டு வந்துள்ள புத்தகங்களை ஒரு டேபிள் முழுவதும் நிரப்பிவிட்டு மற்ற பதிப்பாளர்களின் புத்தகங்களையும் அடுக்கி வைத்துள்ளேன்.  
புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை எனக்கு யார் யாரோ உதவி செய்திருக்கிறார்கள்.  இன்னும் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.   முதன் முதலாக ஆரம்பித்தபோது என் உறவினர் ஒருவர் உதவி செய்திருக்கிறார்.  என் அலுவலக நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். எனக்கு புத்தகங்களை அடுக்குவதில் கூட எந்தவித சாமர்த்தியமும் இல்லை  
புத்தக ஸ்டாலில் அமர்ந்து கொண்டு யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்த பின் யாரும் வராமல் போவதுபோல சங்கடம் வேற எதுவுமில்லை.  
நான் பப்பாசி உறுப்பினராக இல்லாதபோது ஒரு ஆண்டில் நடந்த புத்தகக் காட்சியின்போது எல்லாப் புத்தகங்களையும் ஒரு சாக்கில் போட்டுக்கொண்டு தெரிந்தவர்கள் கடைகளில் புத்தகங்களை விற்கக் கொடுப்பேன். ஒன்றும் விற்காது.  பின் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு போய் விடுவேன்.   கடைகளில் விற்று பணம் வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். 
ஒரு முறை தீ விபத்தில் நகுலனின் இரு நீண்ட கவிதைகள் புத்தகமும், உமாபதியின் வெளியிலிருந்து வந்தவன் புத்தகமும் போய்விட்டன.  
நான் உறுப்பினராக சேர்ந்தபிறகு அலுவலகத்தில் இருந்துகொண்டு புத்தகக் காட்சியை நடத்துவது என்பது தடுமாற்றமாகவே இருந்தது.   இது பெரிய பொறுப்பு.  நான் பக்கத்தில் இல்லாமல் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போது பரபரப்பாக இருக்கும்.  பின் எல்லாம் சரியாகிப் போய்விடும்.  ஒவ்வொரு ஆண்டும் விற்பனை ஒவ்வொரு விதமாக இருக்கும்.  ஒரு லட்சத்தைத் தொடுவது என்பது சாதாரண விஷயமாகத் தோன்றாது.  ஒரு ஆண்டில் என் புத்தகக் காட்சியின் விற்பனை ரூ25000 மட்டுமே. 13 நாட்கள் அதற்கு நான் பட்ட சிரமங்கள் ரொம்ப அதிகம்.  
இன்னொரு முறை மயிலாடுதுறையிலிருந்து சென்னை வந்த என் பெண் குடும்பம் விபத்தில் சிக்கியது.   புத்தகக் காட்சியை நடத்திக் கொண்டிருந்த நான்,  புத்தகக் காட்சிக்கு போக முடியவில்லை.  என் நெருங்கிய நண்பர்கள் புத்தகக் கடையைப் பார்த்துக் கொண்டார்கள்.  அன்று எதுவுமே விற்கவில்லை. 
சென்னையைத் தவிர வெளியூர்களில் நடக்கும் புத்தகக் காட்சிகளுக்கு என்னால் போக முடியவில்லை.  அலுவலகத்திலிருந்து பதவி மூப்பு அடைந்து வந்தபிறகு நான் ஒருவனே எல்லாவற்றையும் சமாளிப்பேன் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன்.  ஆனால் அது எந்த அளவிற்கு பொய்யான கற்பனை என்று தோன்றியது.  
ஒவ்வொரு முறை என் அப்பா புத்தகக் காட்சியில் எந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் புத்தகம் விற்கிறது என்று கேட்டுவிட்டு  தூங்குவார். நானும் உற்சாகமாக சொல்வேன்.  அந்தத் தொகை அதிகம் இருக்காது என்றாலும்.
இந்த முறை அப்பாவிற்கு உடம்பு சரியில்லை.  ஒரு அறையில் படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  அவருக்கு 94 வயது.  கடந்த பல மாதங்களாக ராகவன் காலனியை விட்டு வெளியூர் எங்கும் நான் செல்வதில்லை.  இந்தத் தருணத்தில் என் மனைவி புத்தகக் காட்சியில் பங்கு பெற வேண்டாமென்று தடுத்தாள்.  நான் அவள் பேச்சைக் கேட்கவில்லை.  ஆனால் என்னால் முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை.  அப்பா ராத்திரி முழுவதும் கத்துவார்.  என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். என் தூக்கம் ராத்திரி கெட்டு விடுகிறது.  அதனால் நான் புத்தகக் காட்சிக்குப் போவது தடுமாற்றமாக இருக்கும்.  தீவுத் திடலில் இப்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் காட்சி எதிர்பாராத சிரமமாக உள்ளது.  வெயிலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னால் மழைப் பெய்து கொட்டு கொட்டென்று கொட்டியது.  என் ஸ்டாலுக்கு எதிரிலுள்ள ஸ்டால்களில் உள்ள புத்தகங்கள் வீணாகி விட்டன.  மழையின் வேகத்தைப் பார்த்து நானும் பயந்தபடியே உட்கார்ந்தேன்.  அந்த சமயத்தில் கிருபாகரன் இல்லை. புத்தகக் காட்சி கட்டமைப்புக்கு எதாவது ஆபத்து ஏற்படுமோ என்றெல்லாம் தோன்றியது.  ஆனால் ஒன்றும் ஆகவில்லை.
இந்த முறை இலக்கியத்தில் ஆர்வமுள்ள கிருபாகரன் என்ற 62 வயது இளைஞர்தான் (என் வயதும் அதேதான்) எனக்கு உதவி செய்கிறார்.  அவர் கொடுக்கும் உற்சாகம் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.  போன சனி ஞாயிறுகளில் மலைச்சாமி என்ற இளைஞரும் உதவி செய்தார்.   
நான் சில தினங்களுக்கு முன்னால் முகநூலில் எழுதியதைப் படித்து கிருபானந்தம் அவர் கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.  இதோ இங்கே:
நான் : என் புத்தக ஸ்டாலில் புத்தகங்களைக் கொண்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
கிருபா : சற்று மிகை.  கடைசி என்றாலும் சுமார் பத்து கடைகள் இருக்கும் தூரத்தில் ஒரு வாயில் வரை வேனை கொண்டு சென்று அங்கிருந்து உதவியாளர் இரண்டு பெட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கி வநது வைத்தார்.  மற்ற பெட்டிகளை ட்ராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து விட்டார்.
நான் : ஏனென்றால் என் ஸ்டால் இருக்கும் வரிசை ரொம்ப நீளமானது.  அதில் கடைசீ..
கிருபா : கடைசி என்பது சரி.  எல்லா வரிசைகளும் ஒரே நீளம்தான்.
நான் : புத்தகம் வைக்க பெரிய மேஜைகளைத் தேட வேண்டியிருந்தது.  ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக நிதானமாகத்தான் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருந்தது.  
கிருபா : இநதச் சிரமம்கூட இல்லாமல் புத்தகங்கள் தானே மேசைகளைத் தேடி எடுத்துவந்து தங்களை அடுக்கிக் கொண்டால் நாமெல்லோரும் பயந்து ஓடிவிடுவோம்.
நான் : எனக்கு உதவிசெய்யும் கிருபானந்தன் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மடமடவென்று புத்தகங்கள் எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விடுகிறார்.
கிருபா : மிகச் சரி.  அப்போது நீங்கள் அலட்டிக் கொள்கிறீர்கள் என்ற ஒப்புதல் வாக்குமூலம.
நான் : நாங்கள் இருந்த பக்கத்தில் காற்றே இல்லை.  ஒரு பேனிலிருந்து வரும் காற்றை நம்பி ப்ளாஸ்டிக் நாற்காலியை நகர்த்த வேண்டியிருந்தது.
கிருபா :. அரங்கத்தில் புத்தகக் கட்டுகளை தூக்கி வந்த பணியாளர்கள் நாமிருக்குமிடத்தில் உள்ள மின் விசிறியின் கீழ் வந்து காற்று வாங்குமளவிற்கு காற்று இருந்தது.
நான் : கிருபாவிற்கும் எனக்கும் ஒரே வயது.  அவர் சமாளித்துக் கொண்டு இருந்தார்.
கிருபா : சமாளித்துக் கொண்டிருந்தார் என்பது சரியல்ல.  இந்த அளவுகூட முயற்சியில்லாமல் ஒரு வேலை நடக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.
நீங்களே சொல்லுங்கள் சென்னைப் புத்தகக் காட்சி கிருபானந்தன் மூலம் எனக்குப் பாடம் கற்றுத் தருகிறதா இல்லையா? 
  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன