வம்சி முதல் விருட்சம் வரை….

அழகியசிங்கர் 

நேற்று சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கி விட்டது.  இம் முறை தீவுத் திடலில்.  கிட்டத்தட்ட மாலை 4 மணிக்குத்தான் சென்றேன்.  புத்தகக் கட்டுகளை எடுத்துக்கொண்டு என் ஸ்டாலில் கொண்டு போவதற்குள் படாதபாடு பட வேண்டியிருந்தது.  ஏனென்றால் என் ஸ்டால் இருக்கும் வரிசை ரொம்ப நீளமானது. அதில் கடைசீ.
புத்தகம் வைக்க பெரிய மேஜைகளைத் தேட வேண்டியிருந்தது. ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக நிதானமாகத்தான் எல்லாவற்றையும் வைக்க வேண்டியிருந்தது.  எனக்கு உதவி செய்யும் கிருபானந்தன் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மடமடவென்று புத்தகங்கள் எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டார்.  நாங்கள் இருந்த பக்கத்தில் காற்றே இல்லை.   ஒரு பேனிலிருந்து வரும் காற்றை நம்பி ப்ளாஸ்டிக் நாற்காலியை நகர்த்த வேண்டியிருந்தது.  பில்  போட சரியான மேஜை கிடைக்கவில்லை. குப்குப்பென்று வியர்த்தது.  என்னால் நிற்கவே முடியவில்லை.  உட்கார்ந்தே இருக்க வேண்டுமென்று தோன்றியது.  
நேற்று என்னை யாராவது பார்த்தால் பெரிய நோயில் அடிப்பட்டவன் போல் இருக்கிறான் என்று நினைத்துக்கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.  தீவுத்திடலில் பரவிய வெப்பத்தை முழுதாக உணர்ந்தேன்.  
என் வரிசையில் முதலில் வம்சி என்ற கடை இருந்தது.  எனக்கு ஆச்சரியம்.  அதைத் தாண்டி மெதுவாக நடந்து (என்னால் மெதுவாகத்தான் நடந்து வர முடியும்.  வேகமாக ஓட முடியாது) வரும்போது காலச்சுவடு கடை இருந்தது.  நமக்கு உறுதுணையாக இரண்டு கடைகள் என்று நினைத்தேன். 
இன்னும் தாண்டி வந்தேன்.  கிழக்கு கடையும் காட்சி அளித்தது.  சரிதான் நல்லதுதான் என்று நினைத்தேன்.  இன்னும் தள்ளி நடந்து வந்தேன்.  உயிர்மை கடை இருந்தது.  ஆச்சரியமாகி விட்டது.  இன்னும் தள்ளி நடந்தேன்.   சந்தியா பதிப்பகம் கடை இருந்தது.  ஒரே வரிசையிலா என்ற பிரமிப்பு என் மனதிலிருந்து ஓயவில்லை. புலம் என்ற கடையும கண்ணில் பட்டது. இன்னும் சந்று தூரத்தில் நிழல் பத்திரிகை ஆசிரியர் நடத்தும் முன்றில் கடை.
  அவ்வளவுதான் எல்லாம் இலக்கியச் சந்திப்பு நிகழ்த்தும் கடைகளாக இருந்தன.  இறுதியில் விருட்சம் கடை.  எல்லாக் கடைகளிலும் கூட்டங்கள் வரும்.  அந்தக் கூட்டங்களிலிருந்து ஒருசிலராவது விருட்சம் கடைக்கு வராமல் இருக்க மாட்டார்கள்.  நிழல் ஆசிரியர் திருநாவுக்கரரிடம் கேட்டேன். ஒரு சின்ன படம் எடுக்க ஐந்தாயிரம் போதுமா?  
‘டிசம்பர் மாதம் நடத்தும் வகுப்புக்கு வாருங்கள்.  எல்லாம் சொல்லித் தருகிறோம்,’ என்றார்.
இந்தப் புத்தகக் காட்சியில் வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை. கூவம் அருகில் ஓடுவதால், அதன் வாசனையை வர்ணிக்க விரும்பவில்லை. நான் ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தேன்.  என்னால் நிற்கவே முடியவில்லை என்பதோடல்லாம்,  இன்னும் சிறிது நேரம் நின்றிருந்தால், தலைச் சுற்றி விழுந்து விடுவேன் போல் தோன்றியது.   வலு குறைவான நாற்காலியில் உட்கார்ந்தேன்.  கிருபாவிற்கும் எனக்கும் ஒரே வயது.  அவர் சாமாளித்துக் கொண்டு இருந்தார்.  அவருடைய உதவி பெரிய உதவி.  சனி ஞாயிறுகளில் காலையிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் கதி கலங்குகிறது.
அதனால்தான் கேட்கிறேன்.  யாராவது இளைஞர் கிடைப்பாரா?  ஒருவர் மட்டும் இருந்தால் போதும்.  ஒருசில மணி நேரம் சமாளித்தால் போதும்.  முழு நேரமும் வேண்டாம்.நன்கொடை அளிக்கப்படும். என்னை தொடர்பு கொள்ளுங்கள்.  9444113295.  ஸ்டால் எண் 594.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன