அழகியசிங்கர்
தீயுறைத் தூக்கம் என்ற கவிதைத் தொகுதிக்குப் பிறகு நான் கொண்டு வந்துள்ள இன்னொரு கவிதைத் தொகுதி அழுக்கு சாக்ஸ் என்ற பெருந்தேவியின் தொகுப்பு. பெருந்தேவி வித்தியாசமான பெண் கவிஞர் என்பதோடல்லாமல் மற்ற பெண் கவிஞர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். நான் ஆண் கவிஞர் பெண் கவிஞர் என்றெல்லாம் பிரித்துச் சொல்ல விரும்பவில்லை.
பெருந்தேவி கவிதையின் முக்கியமான சாரம் என்று நான் கருதுவது, அவருடைய நவீன போக்குக்கொண்ட உள்அழகுக் கொண்ட கவிதைகள். கவிதையிலிருந்து பெரும்பாலோர் உரைநடை வடிவத்திற்கு மாறி விட்டார்கள். க நா சு உருவாக்கிய உரைநடைக் கவிதைகள்தான் எழுதுகிற சாத்தியமாய் இருக்கிற சூழ்நிலையில் பெருந்தேவி கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எழுதிச் செல்கிறார். இவருடைய முதல் தொகுதியான தீயுறைத் தூக்கம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளின் சாயல் இந்தத் தொகுதியிலும் உண்டு.
ஒவ்வொரு முறையும் கவிதையை எடுத்துப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், பத்திரப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இத் தொகுப்பைப் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
இன்று மதியம் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பேசும்போது, கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன் என்று கூறினேன். அவர் தரவேண்டாம். விற்பனை ஆகாது என்று சொல்லி மறுத்துவிட்டார். அதேபோல் ஒரு பெரிய பதிப்பாளர் அவருடைய பதிப்பகத்தில் எப்போதும் கவிதைகளுக்கு இடமில்லை என்று பெருமிதமாகக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் கவிதை என்றால் பிடிக்காதாம். அதேபோல் அவர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் பிடிக்காதாம். ஆனால் நவீனவிருட்சம் ஆரம்பத்திலிருந்து கவிதைப் புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் பத்திரிகை. ஏனென்றால் நானும் கவிதை எழுதுவதை விரும்புவேன். நான் அலுவலகம் போகும் காலத்தில் கூட மின்சார வண்டியில் கவிதைகளை வாசித்துக் கொண்டு போவேன்.
விருட்சம் வெளியீடாக முதல் புத்தகம் ரா ஸ்ரீனிவாஸன் கவிதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டேன். மொத்தம் 500 பிரதிகள் அச்சடித்திருந்தேன். அதில் வெளியான பெரும்பாலான கவிதைகள் வாசிக்க தூண்டும் அற்புதமான மொழி நடையில் எழுதப்பட்ட கவிதைகள். ஆனால் அதன் விற்பனை?
அந்தக் காலத்தில் ராயப்பேட்டையில் இருந்த க்ரியா அலுவலகத்தில் ஒரு புத்தகம் இருக்கும். சி மணியின் üவரும் போகும்ý என்ற தொகுப்பு. அற்புதமான முறையில் அச்சடிக்கப்பட்டிருக்கும். நான் ஒவ்வொரு முறையும் க்ரியாவிற்குப் போகும்போது என்னைப் பார்த்து வரவேற்பது, வரும் போகும் என்ற சி மணியின் தொகுப்புதான். அது அங்கேதான் இருக்கும் எங்கும் போகாது என்று நினைத்துக்கொள்வேன்.
நானே முன்பு சொன்னதுபோல் விஸிட்டிங் கார்டுதான் கவிதைத் தொகுதி, விஸிட்டிங் கார்டிற்குப் பதில் கவிதைத் தொகுதியைக் கொடுத்து விடலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் இப்போது அப்படி சொல்வதை நான் மறுக்கிறேன். யாராவது ஒரு ரூபாய் கொடுத்து வாங்குவதாக இருந்தால்தான் என்னிடம் உள்ள கவிதைத் தொகுதியை வாங்க முடியும்.
ஒருவர் கவிதைத் தொகுதியை ரசிப்பவராக இருந்தால், தலைகாணி புத்தகத்தில் நீங்கள் தெரிந்து கொள்வதைவிட கவிதைகள் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துக்கொண்டு போய்விடும். சுலபமாக எடுத்துப் படிப்பதும் கவிதைப் புத்தகம்தான். மனசிலிருந்து படிப்பதுதான் கவிதைப் புத்தகம்.
மூன்றாண்டுகளுக்கு முன் நான் அலுவலகத்தில் இருந்து பதவி மூப்பு அடையும் தறுவாயில் என் கவிதைத் தொகுப்பு ஒன்றை கொண்டு வந்தேன். வினோதமான பறவை என்பது தொகுப்பின் பெயர். மொத்தம் 64 கவிதைகள் கொண்ட தொகுப்பு. 90 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தின் விலை ரூ 60 தான். நான் தெரியாமல் 300 பிரதிகள் அச்சடித்து விட்டேன். அதேபோல் ரோஜா நிறச் சட்டை என்ற என் சிறுகதைத் தொகுயையும்அச்சடித்திருந்தேன். அப்போது என் அறுபதாவது வயதை முன்னிட்டு அச்சடித்திருந்தேன். என் சிறுகதைத் தொகுதியைப் பற்றி எனக்கும் சிறிதும் கவலை இல்லை. ஆனால் கவிதைத் தொகுதியைப் பற்றி எனக்கு பெரிய சந்தேகம். அதனால் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் எழுதினேன். என் கவிதைத் தொகுதியை வாங்கிக் கொள்ளும்படி. அறுபது ரூபாய் புத்தகத்தை முப்பது ரூபாயிக்குத் தருவதாகவும் ஒவ்வொருவரும் ஒரு பிரதி வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருந்தேன். நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நான் எழுதிய விண்ணப்பக் கடிதம் தரையில் கிடந்தது. சில குப்பைத் தொட்டியில் அடைக்கலம் புகுந்து கொண்டது. யாரும் வாங்கவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த இரண்டு பெண்மணிகள்தான் கவிதைப் புத்தகத்தை வாங்கினார்கள். ஆனால் முன்பு என் எழுத்தாள நண்பர் எனக்கு அறிவுரை கூறி உள்ளார். யாரிடமும் நீங்கள் எழுதுபவர் என்பதைச் சொல்லிக் கொள்ளாதீர்கள். ஏன் என்றால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாவது எழுத்தாளர்கள்தான்.
அலுவலகத்தில் பணிபுரிகிற ஒருவர் கவிதைப் புத்தகம் கொண்டு வந்துள்ளார். அவருடைய புத்தகம் ஒன்றை முப்பது ரூபாயிக்கு ஏன் வாங்கக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு வரவில்லையே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் பக்கம் எல்லா நியாயமும் இருப்பதாகப்பட்டது. என் மீதுதான் தவறு என்றும் தோன்றியது. ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமாய் ஒரு விண்ணப்பத்தை வைத்தோம் என்று கூட நினைத்தேன்.
புத்தகக் கண்காட்சியிலும் என் கவிதைப் புத்தகத்தை யாராவது வாங்கினால் நான் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்குவேன். ஆனால் எதிர்பாராதவிதமாய் போன ஆண்டு டிஸம்பர் மாதம் வெள்ளம்வந்து என் கவிதைப்புத்தகம் முழுவதும் வீணாய்ப் போய்விட்டது. வெள்ளத்தில் நனைந்த புத்தகங்களை இன்னும் ஜன்னல் பக்கத்தில் வைத்திருக்கிறேன். பேப்பர் கடையில் கட்டாக போடவும் எனக்கு மனசு வரவில்லை. தினமும் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஏக்கத்தோடு அப் புத்தகக் கட்டை பார்த்தபடியே சென்று கொண்டிருக்கிறேன்.
ஆனால் இப்போது கவிதைப் புத்தகம் அச்சிட புதிய அணுகுமுறையை கையாளுகிறேன். கவிதைப் புத்தகம் விஸிட்டிங் கார்டு இல்லை. நீங்கள் வாங்கினால் வாங்குங்கள் வாங்காவிட்டால் போங்கள் என்ற கொள்கைப் பிடிப்போடு இருக்கிறேன். என்றாவது ஒருநாள் யாராவது ஒருவர் கவிதைப் புத்தகத்தை வாங்காமல் இருக்க மாட்டார்கள்.
பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற கவிதைத் தொகுதி பிரமிக்கும்படி அச்சாகி உள்ளது. அதில் வந்துள்ள அழுக்கு சாக்ஸ் என்ற கவிதையை உங்கள் வாசிப்புக்கு விடுகிறேன்.
அதன் ஜோடியைக் காணோம்
டிரையர் தின்றிருக்கும்
இயந்திரத்தின் பசிக்கு வரலாறுண்டு
இல்லாவிட்டால்
காக்கா தூக்கிக்கிட்டுப் போயிருக்கும்
என்கிற சொலவடையில்
தன்னிருப்பை உறுதிசெய்ய
காகம் தூக்கிக்கொண்டு போயிருக்கும்
ஒருவேளை சாக்ஸ் அணிந்த காகத்தைப் பார்த்தால்
எனக்குத் தெரிவியுங்கள்
சாக்ஸின் விவரம் சாக்ஸ்
காகத்தின் விவரம் ஒருவருக்குக் கருப்பாக
இன்னொருவருக்கு மஞ்சளாகத் தெரியும்
கண்ணைப் பொறுத்தது
ஒருவரும் இன்னொருவரும் பார்த்தால்
என் சாக்ûஸத் திருப்பிக்கொடுத்துவிட்டு
வைத்துக்கொள்ளுங்கள்
நிறம் பற்றிய உங்கள் சண்டையை