செல்வராஜ் ஜெகதீசன்
“நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?”
“மொத்தமா உன் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல எத்தனை பேர் தேறும்” என்றான் ரமேஷ்.
ரமேஷ் எப்போதும் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இப்படி எதையாவது கேட்பான். அப்போது சரவணன் பேசிக்கொண்டிருந்தான். வெளியூரில் வேலை. ஏதோ விடுமுறையில் வந்திருந்தான்.
“உன்னையும் (என்னைக்காட்டி) இவனையும் விட்டா இன்னும் ஒரு ரெண்டு பேர் தேறும்…நான் அதிகமா யார் கிட்டயும் அவ்வளவா வச்சிக்கிறதில்ல..”என்றான் சரவணன்.
“நல்லா யோசிச்சுப் பாரு.. அது மட்டும்தான் காரணமா…” என்ற ரமேஷிடம்
“இப்போ என்ன சொல்ல வர?”…என்றான் சரவணன்.
“கடந்த அரைமணி நேரமா நீதான் பேசிக்கிட்டிருக்க…நாங்க வெறுமனே கேட்டுக்கிட்டுதான் இருக்கோம்…இதுவே உன் பிரண்ட்ஸ் சர்க்கிள் கம்மியா இருக்கக் காரணமா இருக்கலாம். நீ கொஞ்சம் அதிகமா பேசற..”
நன்றாக யோசித்திருப்பான் போலிருக்கிறது. இப்போதெல்லாம் பேசும்போது இடையிடையே “நான் கொஞ்சம் அதிகம் பேசுறனா?” என்பதை சேர்த்திருந்தான்.
பேச்சு என்னவோ அதே அளவுதான்.
o