இன்று உலகப் புத்தக தினம்

அழகியசிங்கர் 
இன்று புத்தக தினம்.  புத்தகம் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறலாம். ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம இருந்தால் மட்டும் புத்தகம் படிக்க முடியும். பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர் மூவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுதான் ஒரு புத்தகம்.  ஒரு தரமான புத்தகத்தைக் கொண்டு வர ஒரு பதிப்பாளர் முன் வர வேண்டும், ஒரு தரமான எழுத்தை எழுத ஒரு எழுத்தாளர் முன் வர வேண்டும், அதை வாசிக்க ஒரு வாசகனும் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு புத்தகம் வாசிப்பவன் புத்தகத்தை எடுத்துப் படிக்க பலவிதத் தடைகளை கடக்க வேண்டிய நிலையில் உள்ளான்.  என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் புத்தகம் படிப்பார்கள். என் தந்தை எனக்குத் தெரிந்து புத்தகமே படிக்க மாட்டார்.  அவர் தினசரி தாள்களையே இப்போதுதான் படிக்கிறார்.  ஆனால் படித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். என் மனைவி, ‘லட்சுமி’ என்ற எழுத்தாளர் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பார்.  ஆனால் இப்போதெல்லாம் அவருக்கு டிவியில் பொழுது போய் விடுகிறது. 
என் சகோதரன் முன்பெல்லாம் தமிழ் புத்தகம் படிக்க ஆர்வம் காட்டுவான்.  இப்போது சுத்தமாக இல்லை.  அவன் படிப்பது வணிகம் சம்பந்தமான புத்தகம். சில டானிக் புத்தகங்களையும் படிப்பான்.  என் பெண் படிப்பது கல்கியின் பொன்னியின் செல்வன்.  அதுவும் இப்போதுதான் படிக்கத் தொடங்குகிறாள்.
ஆனால் எல்லோருக்கும் புத்தகம் படிக்க வேண்டுமென்ற பெரிய ஆர்வம் இல்லை. நான் மட்டும் என் வீட்டில் விதிவிலக்கு.  அதனால் அதிகமாக திட்டும் வாங்குபவனும் கூட.  எப்போது பார்த்தாலும் புத்தகத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பவன்.  
என் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கிப் படிப்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பே புத்தகத்தைத் துறக்க ஆரம்பித்து விட்டார்.  அவர் சேகரித்தப் புத்தகங்களை அவரே சொந்த செலவு செய்து நூல் நிலையத்திற்கு அனுப்பி விட்டார்.  பெரிய வீடும் வசதியும் இருந்தும் அவரால் ஏன் புத்தகத்தைப் பாதுகாக்க விரும்பவில்லை என்பது தெரியவில்லை.  ஒரு காலத்தில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். இப்போது எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  இன்னும் சிலர் இருக்கிறார்கள்.  புத்தகத்திற்காக ஒரு செலவும் செய்ய மாட்டார்கள்.   இலக்கியக் கூட்டம் நடக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக் சென்டருக்கு அடிக்கடி செல்வேன். 
அவர்கள் அளிக்கும் விருந்தில் சுடச்சுட கிச்சடி நன்றாக இருக்கும். எழுத்தாளர்கள் பேசுவதைக் கேட்பதற்குமுன் கிச்சடி நினைவு வந்து அங்கு ஓடி விடுவேன்.  ஆனால் கூட்டம் முழுவதும் இருந்து கேட்பேன்.  திரும்பி வீடு வரும்போது அங்குப் பேசப்படும் புத்தகத்தை வாங்காமல் இருக்க  தோன்றாது. 
ஆனால் அங்கு வாங்கும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வருவதற்குள் யாராவது என்னிடமிருந்து படிக்க வாங்கிக்கொண்டு விடுவார்கள்.  பின் எனக்குக் கிடைக்காது.  அதனால் டாக் சென்டரில்  எந்தப் புததகமும் வாங்க மாட்டேன்.  மேலும்  புத்தகங்களை யாருக்கும் தெரியாமல்தான் வாங்குவேன்.  என் மனைவி முன்பெல்லாம் அலுவலகம் போய்க் கொண்டிருப்பார்.  அவர் போனபிறகுதான் புத்தகம் வாங்குவேன். யாருக்கும் தெரியாமல் வீட்டில் ஒரு இடத்தில் கொண்டு வந்து வைத்துவிடுவேன்.
யாராவது என்னைப் பார்க்க வருகிறார்கள் என்றால் என்னிடம் எதுவும் புத்தகம் கேட்கக்கூடாது என்று மனதிற்குள் வேண்டிக்கொள்வேன்.  
சமீபத்தில் ஒருவர் எனக்குப் போன் செய்தார்.  ‘ஜானகிராமன் புத்தகங்கள் வேண்டும்,’ என்று கேட்டார்.  அவர் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை.
நான் சொன்னேன் : ‘நியூ புக் லேண்ட்ஸில புத்தகம் கிடைக்கும். போய் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்…இல்லாவிட்டால் நான் உஙகளுக்கு வாங்கித் தருகிறேன்,’ என்றேன்.
என்னைப் பொறுத்தவரை பலருக்கு புத்தகத்தை வாங்கிப் படிக்கும் வழக்கம் இல்லை.  அவர்கள் தேவையான அளவிற்கு பணம் வைத்திருந்தாலும், புத்தகம் வாங்குவது கிடையாது.  ஏன்?  இரண்டு பேர்கள் சரவணா பவன் ஓட்டலில் காப்பி சாப்பிட்டால், ஒரு விருட்சம் ஆண்டுச் சந்தா அளவிற்கு பணத்தை ஓட்டல்காரர்கள் வசூல் செய்து விடுவார்கள்.  ஆனால் காப்பிதான் சாப்பிடுவார்கள் தவிர, சந்தா கட்டி பத்திரிகையை வளர்க்க உதவி செய்ய மாட்டார்கள்.  ஏன்? 
புத்தகம் ஒரு தொந்தரவான விஷயம்.  படிப்பது இன்னொரு தொந்தரவான விஷயம்.  புத்தகமே படிக்காத பல குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன்.  இப்படி புத்தகமே படிக்காத இரண்டு நண்பர்களை என் புத்தக ஸ்டாலை பார்த்துக்கொள்ள சொல்லி புத்தகக் கண்காட்சி போது ஏற்பாடு செய்து விட்டேன் ஒரு ஆண்டில்.  என் புத்தகங்களை விற்க அவர்கள் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு நடந்தால் புத்தகமே போட வேண்டாமென்று தோன்றும்.  
என்னதான் புத்தகம் எழுதினாலும் என்னதான் புத்தகம் கொண்டு வந்தாலும், வாசிப்பவர்கள் கிடைக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.  
எல்லோரையும் எப்படி புத்தகம் படிக்கும்படி செய்வது?  அது நம் கையில் இல்லை.  
சில ஆண்டுகளுக்கு முன் புத்தக தினத்தை முன்னிட்டு நான் ஒரு கவிதை எழுதினேன்.  அதை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று உலகப் புத்தக தினம்

எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகக் குவியலைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்

பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்

போவோர் வருவோர் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும் பட
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
இடுப்பில் ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியைப் பிடித்தபடி படித்தேன்
‘இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்’
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி….           (14.06.2008)   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன