அழகியசிங்கர்
எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது. ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல வந்தது அவரைப் பற்றி அல்ல.
சேதுராமன் என்ற நண்பர். பாரத வங்கியில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். அவரைப் பார்க்க விருட்சம் இதழை எடுத்துக் கொண்டு போவேன். வா என்று வரவேற்பார். பல நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவார். விருட்சம் இதழுக்காக சந்தாத் தொகையைக் கொடுப்பதோடல்லாமல், இன்னும் சிலரிடம் சொல்லி வாங்கிக் கொடுப்பார். அவர் ஒரு புத்தக நண்பர். எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் நண்பர். அவரைப் பார்க்கப் போவதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஒருமுறை அவர் கவிஞர் ஒருவரை அறிமுகப் படுத்தினார்.
“சார், இவர் சத்தியநாதன். லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்,” என்றார் அவர்.
வந்தது ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன். லாவண்யா என்ற பெயரில் எழுதும் சத்தியநாதன், வேடிக்கையாகப் பேசக் கூடியவர். அந்தக் காலத்துப் பிரஞ்ஞை இதழில் ஒரு குறிப்பிடும்படியான சிறுகதை எழுதி உள்ளார். அவருடன் பழக பழக விருட்சத்திற்கு ஆபத்தில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
விருட்சத்தில் கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார். மடமடவென்று கவிதைகள் எழுதிக் குவித்து விடுவார். பின் மொழிபெயர்ப்பு செய்து சில கவிதைகளை அனுப்பி விடுவார். நானும் சளைக்காமல் அவர் எழுத்தைப் பிரசுரம் செய்வேன்.
அவருக்கு ஒரு ஆசை. தான் எழுதுகிற கவிதைகளை எல்லாம் புத்தகமாகப் போட வேண்டுமென்ற ஆசை. உண்மையில் அது விபரீத ஆசை. அதேசமயத்தில் கவிதை எழுதுகிற எல்லோருக்கும் நியாயமாய் ஏற்படும் ஆசைதான்.
முதல் கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடாக ஒன்றை கொண்டு வந்தார். அந்தக் கவிதைத் தொகுதியின் பெயர் ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்’ நான் முதன் முதலாக விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தது கவிதைத் தொகுதிதான். தொடர்ந்து பல கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்திருக்கிறேன். அதில் ஒரு பெரிய தப்பு செய்து விடுவேன். கவிதைத் தொகுதியை 500 பிரதிகள் அச்சடித்து விடுவேன். ஆரம்பத்தில் இந்தத் தப்பை செய்திருக்கிறேன். பெரும்பாலும் என்னிடமே என்னை விட்டு அகலாமல் இருப்பது நான் கொண்டு வரும் கவிதைப் புத்தகங்கள்தான். ஆனால் உண்மையில் அத் தொகுப்பில் உள்ள கவிதைகளைப் படித்துப் பார்த்தால், அத் தொகுதிக்கு ஒரு நியாயமற்ற தண்டனை தந்துவிட்டதாகத்தான் நினைப்பேன்.
லாவண்யாவின் முதல் தொகுதி பெயர் ‘இன்னும் வரவில்லையா உன் நத்தை ரயில்,’ அதென்னவோ தலைப்பில் ஒரு தப்பு செய்து விட்டோம். நத்தை என்ற பெயரைக் கொண்டு வந்து விட்டோம். அப்படி கொண்டு வந்து விட்டதாலோ என்னவோ கவிதைப் புத்தகம் என்னை விட்டு அகலாமல் நத்தை மாதிரி ஒட்டிக் கொண்டு விட்டது.
லாவண்யா கொஞ்சம் உணர்ச்சிகரமான மனிதர். ‘கவிதைப் புத்தகம் எதாவது விற்றதா?ý என்று அப்பாவித்தனமாகக் கேட்பார்.
“அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள்,” என்று அவரைத் தேற்றுவேன்.
ஒவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சியில் அவருடைய கவிதைத் தொகுதியை எடுத்துக்கொண்டு போவேன். என்னுடையதையும் இன்னும் பலருடையதும் சேர்த்துதான்.
அவர் அடிக்கடி ஒன்று சொல்வார். “இலவசமாகக் கொடுத்து விடுங்களேன்,” என்று.
“அது மட்டும் செய்யக் கூடாது,” என்பேன் நான்.
“முதலில் புத்தகம் விற்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தால் யாரும் அதைத் தொடக் கூட மாட்டார்கள்.”என்பேன்.
“அப்படி என்றால் என்ன செய்வது,” என்று கேட்பார்.
“கவலைப் படாதீர்கள், ஒன்றிரண்டு விற்கும். இன்னொரு விதத்தில் உங்கள் புத்தகம் உதவியாக இருக்கிறது,” என்பேன்.
“எப்படி?”
“நானே கொஞ்சமாகத்தான் புத்தகமே கொண்டு வருகிறேன். ஏதோ கவிதைப் புத்தகங்கள் எல்லாம் நம்மை விட்டுப் போகாமல் இருக்கிறதாலே, நாம் நிறையாப் புத்தகங்கள் கொண்டு வந்ததுபோல் பிரமையை ஏற்படுத்துகிறது,”என்று சொல்வேன்.
அவர் சிரித்துக் கொள்வார். ஆனால் உண்மையில் திறமையாக கவிதை எழுதக் கூடியவர் லாவண்யா. அவர் கவிதைகளில் ஒரு வித கிண்டல் தன்மை பளீரிடும்.
2009 ஆம் ஆண்டில் அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளோம். கவிதைத் தொகுதியின் பெயர் கடலின் மீது ஒரு கையெழுத்து. முன்பெல்லாம் நான் செய்த பெரிய தப்பு 500 பிரதிகள் அச்சடிப்பது. பின் அந்தத் தப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து 300 பிரதிகள் ஆயிற்று. இப்போது அதுமாதிரி தப்பே செய்வதில்லை. ஏன்எனில் 5டி பிரதிகள்தான் கவிதைத் தொகுதியே அடிக்கிறேன். கைக்கு அடக்கமாக எங்கே வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போகலாம்.
லாவண்யாவை அறிமுகப் படுத்தியவர் சேதுராமன் என்ற நண்பர்தான். அவர் ஒரு வாசகர். எழுத்தாளர் அல்ல. ஆனால் எழுத்தாளர் நண்பர். சுந்தர ராமசாமி மீது அவருக்கு அலாதியான பிரியம் உண்டு.
சுந்தர ராமசாமிக்கு ஒரு விழா நடந்தது (மணி விழா என்று நினைக்கிறேன்) நாகர்கோவிலில். சேதுராமன் குடும்பத்தோடு அதாவது மனைவி, மகள், பேரன் பேத்தி என்று நாகர்கோவிலுக்குச் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் சுனாமி வந்து எல்லோரும் இறந்து விட்டார்கள். நானும் லாவண்யாவும் சந்திக்கும்போது சேதுராமனைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம்.
லாவண்யாவின் கவிதை ஒன்றை படியுங்களேன்.
கடல்
ஒரு தாயைப்போல கடல்
எனக்கு
மீன்களை உணவாய் தந்தது
ஒரு தந்தையைப்போல் கடல்
கட்டுமரத்தில்
பயணிக்க கற்றுத்தந்தது
ஒரு நண்பனைப் போல கடல்
கார்முகிலிருளிலும்
திசைகளறியச் செய்தது
ஒரு கயவனைப்போல கடல்
என் மனைவி மக்களை
மூசசுத்திணறக் கொன்றது.
லாவண்யாவின் üகடலின் மீது ஒரு கையெழுத்துý என்ற இக் கவிதைத் தொகுதியின் விலை ரூ.30 தான். உங்களுக்கு வாங்க வேண்டுமென்று தோன்றினால், ரூ30 ஐ விருட்சம் கணக்கில் அனுப்புங்கள். நான் புத்தகத்தை உடனே அனுப்பி வைக்கிறேன்.
ACCOUNT NUMBER No. 462584636
Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOK NAGAR BRANCH.
IFSC CODE : IDIB 000A031
Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOK NAGAR BRANCH.
IFSC CODE : IDIB 000A031