ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.

அழகியசிங்கர்

ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன்.  பொதுவாக எதாவது புத்தகம் அல்லது பத்திரிகை படித்துக்கொண்டு வருவது வழக்கம்.  என் பக்கத்தில் பேசுவதற்கு நண்பர்கள் கிடைத்தால் பேசிக்கொண்டே வருவேன். நான் படிக்கிற பத்திரிகை அந்த மின்சார வண்டியில் வந்து கொண்டிருக்கும் சக பயணிகளுக்கு என்னவென்று தெரியாது. கவனம் என்ற சிற்றேட்டின் முதல் இதழைப் படித்துக்கொண்டு வந்தேன்.  சில தினங்களுக்கு முன்புதான் அந்தப் பத்திரிகையை திருவல்லிக்கேணியில் உள்ள ஆர் ராஜகோபாலன் என்பவரிடமிருந்து வாங்கி வந்திருந்தேன்.
மாம்பலம் வரை என் மின்சார வண்டிப் பயணம் முடிந்து விடும். பின் அங்கிருந்து நடந்து வீட்டிற்குப் போய்விடுவேன்.  பின் அடுத்தநாள் மின்சார வண்டியில் அந்தப் பத்திரிகை அல்லது எதாவது புத்தகம் படிப்பது தொடரும். அப்படி அன்று கவனம் பத்திரிகையைப் படித்துக் கொண்டு வரும்போது எதிரில் ஒருவர் அமர்ந்து இருந்தார். என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தார்.  
“உங்கள் கையில் உள்ள பத்திரிகையைத் தர முடியுமா?” என்று கேட்டார்.
நான் கவனம் பத்திரிகையை அவரிடம் கொபடுத்தேன்.  அந்தப் பத்திரிகையைப் பார்த்த அவர், “ஞானக்கூத்தனை உங்களுக்குத் தெரியுமா?”
“கேள்விப்பட்டிருக்கிறேன்…ஆனால் இன்னும் பார்த்ததில்லை,” என்றேன்.
“இந்தப் பத்திரிகை எங்கிருந்து வருகிறது?”
“திருவல்லிக்கேணியில்.  கணையாழியில் இந்தப் பத்திரிகைப் பற்றிய செய்தி வந்திருந்தது.  அதை அறிந்து அங்கே போய் வாங்கினேன்,” என்றேன்.
“பிரமிளைப் பற்றி தெரியுமா?”
“போன வாரம் பிரஞ்ஞை என்ற சிற்றேடை எங்கள் மாம்பலத்தில் சாரதா ஸ்டோரில் வாங்கினேன்.  மாம்பலத்தில் உள்ள யாரோதான் அந்தப் பத்திரிகையை நடத்துகிறார்கள்.  அதில் வெங்கட்சாமிநாதன் என்பவர், பிரமிளுக்குப் பதில் சொல்வதுபோல் பக்கம் பக்கமாக ஏதோ கட்டுரை எழுதி இருக்கிறார்….எனக்கு ஒன்றும் புரியவில்லை..”
“பிரமிள் என்னை அடிக்கடி பார்க்க வருவார்…உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்,” என்றார்.
அவர் அதன்பின் நான் பணி புரியும் வங்கி முகவரியையும் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டார்.  அவர் பெயர் ஷங்கரலிங்கம் என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.  அவர் கஸ்டம்ஸில் பணிபுரிவதாகவும் சொன்னார்.
சிலதினங்களில் பிரமிளுடன் ஷங்கரலிங்கம் என்னைப் பார்க்க அலுவலகத்திற்கு வந்தார்.  
அப்படித்தான் எனக்கு பிரமிள் அறிமுகம்.  அதன்பின் அடிக்கடி பிரமிளைச் சந்திப்பேன்.  என் வங்கி ஒரு சொளகரியமான இடத்தில் வீற்றிருந்தது. மின்சார வண்டியைப் பிடித்தால் எளிதாக வங்கிக்கு வந்து விடலாம். பிரமிளைத்தான் நான் அடிக்கடி சந்தித்தேன்.  ஷங்கரலிங்கத்தை நான் பிறகு பார்க்கவே இல்லை. 
பிரமிள்தான் எனக்கு டேவிட் சந்திரசேகர் என்பவரை அறிமுகப்படுத்தினார்.  அவர் பாரிஸில் உள்ள சின்டிக்கேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  அவர் அடிக்கடி எங்கள் வங்கிக்கு வருவார்.  என்னைப் பார்த்துப் பேசாமல் போக மாட்டார்.  
ஒரு முறை அவரிடம், “பிரமிள் எப்படி சமாளிக்கிறார்..எங்கும் வேலைககுப் போகாமல் ஒருவர் எப்படி இருக்க முடியும்,” என்று கேட்டேன்.
“என்னைப் போல் சில நண்பர்கள் உதவி செய்வார்கள்,” என்றார் அவர்.
அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  சிறுபத்திரிகையே புரியவில்லை.  அதிலும் சண்டைப் போடும் சிறுபத்திரிகைகளை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.  வெங்கட்சாமிநாதன் கட்டுரையைப் புரிந்து கொள்வதற்கு முன் பிரஞ்ஞை பத்திரிகை நின்று விட்டது. யாருக்கும் பணம் கொடுக்க முடியாத சிறு பத்திரிகையில் மட்டும் எழுதும் பிரமிளை யார் அறிவார்?
“எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் மாதிரி ஆரம்பித்து மாதச் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்து பிரமிளுக்கு உதவி செய்யலாமே,”என்றேன்.
“அதெல்லாம் சாத்தியமில்லை… யாரையும் திரட்ட முடியாது..அவரவருக்கு தோன்றியதை உதவி செய்யலாம்…நான் அவர் தங்குவதற்கு இடத்திற்கான வாடகையைக் கொடுக்கிறேன்,” என்றார்.
இப்படியும் ஒருவரா என்று வியந்தேன்.  எனக்கு அவர் மீது அலாதியான மரியாதை ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.  ஆனால் அவர் பிரமிளைப் பார்த்தால், பிரமிள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார்.  அவரை எதிர்த்து ஒரு வார்த்தைப் பேச மாட்டார்.
பிரமிள் கண்சிமிட்டியபடி என்னிடம் ஒரு விபரம் சொன்னார்.  “ஏன் டேவிட் உங்க வங்கிக்கு அடிக்கடி வருகிறார் என்பது தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியாது,” என்றேன்.
“ஒரு பெண்ணைப் பார்க்கத்தான் இங்கு வருகிறார்.”
நான் டேவிட்டிடம் இதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
ஒருநாள் பிரமிள் என்னிடம் மேல் நோக்கிய பயணம் என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்தார்.  நான் உடனே அதற்குப் பணம் கொடுத்து வாங்கினேன்.  பின் நாங்கள் இருவரும் டிபன் சாப்பிடப் போனோம்.
“யார் இந்தக் கவிதைப புத்தகம் அடித்தார்கள்,” என்று பிரமிளிடம் கேட்டேன்.
“ஈரோடில் உள்ள நண்பர்தான் அடித்துக் கொடுத்தார்..எல்லாப் புத்தகங்களையும் என்னிடம் கொடுத்து விட்டார்…நான் விற்றாலும அவரிடம் பணம் கொடுக்க வேண்டாம்.”
பிரமிளின் அந்தக் கவிதைத் தொகுதியை அவ்வளவு சுலபமாக விற்க முடியாது என்று எனக்குத் தோன்றியது.  
அடுத்த முறை பிரமிள் வந்தபோது கவிதைப் புத்தகத்தைப் படித்தீரா என்று கேட்டார்.
“படித்தேன்…நீளமான கவிதையான மேல் நோககிய பயணம் புரியவில்ல.  என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.
“அப்படின்னா வேற எதாவது கவிதைப் புரிந்ததா?” என்று கேட்டார்.
“வண்ணத்துப்பூச்சியும் கடலும் என்ற கவிதைதான் புரிந்தது,” என்றேன்.  பிரமிளுக்கு ஆச்சரியம்.  என்னை நம்ப முடியாமல் பார்த்தார்.  அவர் எதாவது கேள்வி கேட்டால் நான் மாட்டிக்கொண்டு விடுவேன் என்று தோன்றியது. 
“டேவிட்டிற்கு நீங்க புரியறதுன்னு சொன்ன கவிதைதான் புரியவில்லை.. அந்த நீண்ட கவிதை அவருக்குப் புரிகிறது,” என்றார் பிரமிள்.  
சில ஆண்டுகளுக்குப் பிறகு டேவிட் இறந்து விட்டார்.  டேவிட் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.  என்ன சாதாரண நாளில் வீட்டிற்கு வந்திருக்கிறாரே என்று தோன்றியது.  ஏன் எனில் எப்போதும் சனி அல்லது ஞாயிறில்தான் அவரைச் சந்திப்பது வழக்கம்.  எப்போதும் இல்லை.  பல மாதங்கள் சந்திக்காமல் கூட இருப்போம். 
வீட்டிற்கு வந்தவர், “இன்றைக்கு முக்கியமான நாள்,” என்றார்.
“ஏன்?”என்று கேட்டேன்
“என் பிறந்தநாள்,” என்றார் பிரமிள்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, அவர் கையைக் குலுக்கினேன்.  பின் சரவணாபவன் ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய் டிபன் வாங்கிக் கொடுத்தேன்.
அவர் வீட்டிற்கு வந்து பிறந்தத் தினத்தைச் சொன்னது வேடிக்கையாக இருந்தது.  பொதுவாக நான் யாருடைய பிறந்தத் தினத்தையும் என் பிறந்த தினம் உள்பட ஞாபகத்தில் வைத்துக்கொள்வது கிடையாது. பெரும்பாலும் மறந்து விடும்.  ஆனால் அதன்பின் அவர் பிறந்த தினத்தன்று வீட்டிற்கு வந்ததை இன்னும் கூட ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன். 
பிரமிளுக்கு நான் புரிந்தது என்று சொன்ன கவிதை இதோ:
வண்ணத்துப்பூச்சியும் கடலும்
சமுத்திரக் கரையின் 
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன