யாருக்கு உங்கள் ஓட்டு….

அழகியசிங்கர்


அடுத்த மாதம் ஓட்டுப் போட நானும் தயாராகிவிட்டேன்.  ஆனால் யாருக்கு ஓட்டுப் போடுவது?  போனமுறை என் பெயர் இல்லை.  நான் வீடு மாறி வந்ததைக் குறிப்பிடவில்லை என்பதால் என் பெயரை சேர்க்கவில்லை.  நானும் ஒரு நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த நண்பர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு திகைப்பாக இருந்தது.  üயார் எம்எல்ஏ பதவிக்கு எந்தக் கட்சி சார்பில் நின்றாலும் 2 கோடியாவது வேண்டும்,ý என்றார்.  நான் திகைப்புடன், ‘இரண்டு கோடியா?’ என்று கேட்டேன்.  
‘ஆமாம்,’ என்றார் அவர்.
‘அப்படின்னா நாம்மெல்லாம் யார்? சாதாரணத்திலும் சாதாரணமானவர்களா? ‘என்று கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டார்.
ஒன்றுமில்லாத கட்சியில் நின்றாலே அவ்வளவு செலவாகும் என்பது திகைப்பாகவே இருந்தது.  இன்னொன்று ம் தோன்றியது நான்  வாக்களிக்கும் எந்த ஓட்டும் எதற்கும் பிரயோஜனமில்லை என்பதுதான் அது.  
நான் ஓட்டுப் போடுவதால் எந்தக் கட்சியும் ஆட்சிப் புரிய போய்விடும் என்று சொல்ல முடியாது.  அல்லது ஆட்சியில் இல்லாமல் இருந்து விடும் என்று சொல்ல முடியாது.  யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.  நான் போடுகிற ஓட்டு என்பது எதற்கும் பிரயோஜனப்படாத ஒன்றுதான்.  ஆனால் என்னைப் போல் எல்லோரும் நினைத்தால் பெரிய ஆபத்தில் போய் விடும்.
நானும் ஓட்டுப் போடத்தான் போகிறேன்.  ஆனால் என்னால்தான் ஒரு ஆட்சி அமையப் போகிறதோ என்றோ அமையாமல் போகப் போகிறது என்றோ நினைக்கப் போவதில்லை.
இப்போது உள்ள கட்சிகளை எடுத்துக்கொண்டால் எதற்கு நான் ஓட்டுப் போடப்போகிறேன்.  அது பெரிய குழப்பம் எனககு?  ஏன் பெரிய கேள்விக்குறி?  கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் போடுவதால் ஏற்படும் வன்முறை பெரிய அளவில் குறைந்து விட்டது.  நான் கல்லூரி படிக்கும் தருணங்களில் தேர்தல் என்றாலே வன்முறை அதிகமாக இருக்கும்.  இன்று பெரும் அளவில் அது இல்லை.  அதற்குக் காரணம்.  தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை.  பெரிய அளவில் பாதுகாப்புக்கு படைகளை அனுப்பி வன்முறையைக் குறைத்து விட்டார்கள்.  இந்த முறையும் அப்படித்தான் இருக்கும்.  உண்மையில் தேர்தலே சூடு பிடிக்கவில்லை.
எந்தந்தக் கட்சிகளில் யார் யார் நிற்கப் போகிறார்கள் என்பதே தெரியவில்லை.  தெரிந்தாலும் எல்லாம் ஒன்றுதான்.  எந்தக் கட்சியின் மீதும் இந்த முறை எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை.  ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.  இப்படி ஒரு தன்மை இந்த முறைதான் ஏற்பட்டுள்ளது.  யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற குழப்பம் இல்லை.  யாருக்கு வேண்டுமானாலும் போடலாம்.  நான் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவர்கள் அடைந்த வெற்றிக்காக சந்தோஷப்படப் போவதில்லை.  தோல்வி அடைந்தாலும் துக்கப் படப் போவதில்லை.  
என் நண்பர் இன்னொன்றும் சொன்னார்.  உண்மையில் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளின் பணத்தைத்தான் சோதனை செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் அரசியல்வாதிகளிடமிருந்து பணத்தை இன்னும் எடுக்கவில்லை என்று. 
‘பணம் இருந்தால்தான் ஒரு கட்சி ஜெயிக்குமா?’ என்று அப்பாவியாக அவரிடம் கேடடேன்.  உடனே அவர், ‘ஆமாம்.  யாருக்குப் பணம் கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுப்பார்கள்.  உங்களுக்கும் எனக்கும் இல்லை,’ என்றார்.
இதுவரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மீது எந்தத் திருப்தியும் ஏற்படவில்லை.  விமர்சனம் செய்வதும் போர்.  இந்த முறை இப்படி நினைத்திருக்கிறேன்.  கண்ணை மூடிக்கொண்டு கையால் ஓட்டுச் சீட்டை தொடப் போகிறேன்.   யார் பெயர் வருகிறதோ அவர்களுக்குத்தான் ஓட்டு.  

“யாருக்கு உங்கள் ஓட்டு….” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன