.நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்தது…..
அழகியசிங்கர்
நவீன விருட்சம் ஒவ்வொரு இதழிலும் உரையாடல் பாணியில் புத்தகங்கள் பற்றி, இலக்கியக் கூட்டங்கள் பற்றி, எழுத்தாளர்களைப் பற்றி செய்திகளை அலசுவேன். நவீன விருட்சத்தில் இரண்டு பக்கங்கள் வரும்வரை இதை எழுதி முடிப்பேன்.
இதுமாதிரி எழுத என்னைத் தூண்டியவர் ஒரு விதத்தில் க நா சுதான். அவருடைய புத்தகமான ‘படித்து விட்டீர்களா?’ என்ற புத்தகத்தைப் படித்துதான் உரையாடல் பாணியில் எழுத வேண்டுமென்று தோன்றியது.
என்னுடன் உரையாடலைத் தொடங்க ஜெகனும், மோஹனியும் சம்மதம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன், மோஹினி ஒரே குரலில் வணக்கம்.
அழகியசிங்கர் : என்ன உங்கள் இருவரையும் ஆறாம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை பார்க்க முடியவில்லை.
ஜெகன் : உண்மையில் உங்களைத்தான் பார்க்க முடியவில்லை.
மோஹினி : நான் போன் செய்தால், நீங்கள் போனையே எடுக்கவில்லை.
மேலும் நான் சினிமாவில் இருக்கிறேன் என்று தகவல் வேறு கொடுத்துக்கொண்டே இருந்தீர்கள்.
அழகியசிங்கர் : ஆமாம் 13ம் சென்னை சர்வதேச சினிமா விழாவில் கலந்து கொண்டிருந்தேன்.
ஜெகன் : எல்லாப் படங்களையும் பார்க்க முடிந்ததா?
அழகியசிங்கர் : பார்க்க முடியவில்லை. 100 படங்களுக்கு மேல் காட்டினார்கள். நான் 12 படங்களுக்கு மேல் பார்க்கவில்லை.
மோஹினி : முடியாது. வயது ஒரு காரணம்.
ஜெகன் : மேலும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தால் என்னமோ மாதிரி இருக்கும்.
அழகியசிங்கர் : ஆமாம். என்னால் இரண்டு படங்களை சேர்ந்தாற்போல் பார்க்கமுடியவில்லை. ஒரு படம் பார்த்துவிட்டு எழுந்தால் தலை ஒரு சுற்று சுற்றும்.
மோஹினி : தியேட்டரிலேயே நாம் தொடர்ந்து ஒரு படத்தைப் பார்க்க முடியவில்லை.
அழகியசிங்கர் : ஐநாக்ஸ் என்ற தியேட்டரில் உட்கார்ந்து ஒரு படத்தைப் பார்ப்பதுபோல் ஒரு தண்டனை யாருக்கும் கிடைக்க வேண்டாம.
ஜெகன் : நீங்கள் பார்த்ததில் எந்தப் படம் சிறப்பானது.
அழகியசிங்கர் : ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பாக இருநதது. ஏன் நம் ஊரிலே இதுமாதிரி படங்களை எடுக்க முடியவில்லை என்று தோன்றியது.
மோஹினி : சினிமா என்பதே ஒரு வியாபாரம். கோடிக்கணக்கில் முதல் போடவேண்டும். பலருடைய முயற்சி வேண்டும்.
ஜெகன் : தமிழிலேயே ஒரு ஆண்டிற்கு 300 படங்களுக்கு மேல் கொண்டு வருவதாக கேள்விப்பட்டேன்.
மோஹினி : பல படங்கள் தயாரிக்கப்பட்டு தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
அழகியசிங்கர் : எத்தனையோ படங்களை நாம் பார்க்கவே முடிவதில்லை. இந்த உலகப் பட விழாவில் நான் தெரிந்து கொண்டது இதுதான். இதில் பார்க்காமல் போய்விட்ட படங்களைப் பற்றி நம்மால் என்ன செய்ய முடியும் என்பதுதான்.
மோஹினி : இது புத்தகங்களுக்கும் பொருந்தும்.
ஜெகன் : உண்மைதான் எத்தனைப் புத்தகங்களைத்தான் நாம் படிக்க முடியும்.
அழகியசிங்கர் : இந்தத் தருணத்தில் க.நா.சு போன்ற விமர்சகர் முக்கியமான பணியைச் செய்ததாக நினைக்கிறேன். அவர் என்னன்ன புத்தகங்களைப் படிக்கலாம் என்று சொல்லி சென்றதாக நினைக்கிறேன்.
ஜெகன் : புத்தகம் என்றவுடன் வெள்ளத்தால் உங்கள் புத்தகம் போனதைப் பற்றி எழுதியிருந்தீர்கள்..
அழகியசிங்கர் : ஆமாம். ஒரு 20000 செலவு செய்து 4 புத்தகங்கள் அச்சடித்தேன். வெள்ள நீரால் நனைந்து விட்டன. அதைவிட முக்கியம் நான் அவ்வப்போது புத்தகம் வாங்கும் பைத்தியம். அவையெல்லாம் நனைந்து என்னைப் பார்த்து எள்ளி நகையாடின. என் கார் மாத்திரம் தப்பித்து விட்டது. ஆனால் இரண்டு டூ வீலர்கள் நாசம். படிக்கட்டு வழயாக ஆறாவது படிக்கட்டு வரை தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. எனக்கு ரொம்ப வருத்தம் விக்கிரமன் என்ற எழுத்தாளருக்கு ஏற்பட்ட மரணம். மேற்கு மாம்பலத்தில் ஜெயசங்கர் தெருவில் வசித்து வருபவர். டிசம்பர் ஒன்றாம் தேதி எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்து விட்டார். அவர் பூத உடலை உடனடியாக தகனம் செய்ய முடியாமல் பீரிஸர் இல்லாமல், இறந்த உடலுடன் அவர் குடும்பத்தினர் பட்ட அவதியை யாரும் படக் கூடாது.
ஜெகன் : இதன் மூலம் என்ன தெரிகிறது
அழகியசிங்கர் : வாழ்க்கை நிச்சயமில்லாதது என்பதைத்தான் இது காட்டுகிறது. நாம் எவ்வளவு பொருள் சேர்த்தால் என்ன? நம் கண் முன்னே எல்லாம் போனால் நாம் என்ன செய்ய முடியும்?
மோஹினி : வழக்கம் போல இந்த முறை பல எழுத்தாளர்கள் இறந்து விட்டார்கள் அவர்கள் லிஸ்டைப் படிக்கிறேன். 1. விக்கிரமன
2. சார்வாகன் 3. மா வெ சிவக்குமார் 3. பேராசிரியர் கே ஏ குணசேகரன் 4. காந்திய எழுத்தாளர் லா சு ரங்கராஜன் 5. பதிப்புச் செம்மல் வானதி திருநாவுக்கரசு
(மறைந்த எழுத்தாளர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள்.)