சே சேவற்கொடியோன்
சந்தியாவல்லியைத் தேடி போகும் போது
பஞ்சாயத்து ரேடியோ
பாடி முடிக்கையில்
சின்னக் கண்ணய்யா தோப்பில்
சாமியாடடம் தொடங்கும்
குருட்டு ஆறுமுகம்
மணிக்குறவன் பாட்டை
தெப்படமண்டபத்திலிருந்து
திசையெல்லாம் பரப்புவான்
கிறுக்கு அழகம்மாள்
உடலைத் தொட்டிழுத்த
பெரிய தனக்காரருக்கு
பிலாக்கணம் பாடுவாள்
ஆண்டி வயல்கிடைகாக்கும்
ஐயாவுக்கோனார்
மாயவதாரன் கதையை
மனமுருகிப்பாடுவார்.
தேங்காய் திருடிப்பங்குவைக்கும்
நடமாடும் பேயரவம்
சுடுகாட்டில் கேட்கும்
சூரியன் பீடி
கொள்ளிவாய் பிசாசாய்
அச்சுறுத்தும்
கடைசாத்தி ஊர் போகும்
சங்கரன் செட்டி
சைக்கிளை மிதித்தபடியே
நமக்கினி பயமேது பாடலை
பயத்தோடு பாடுவார்.
சேவுகப்பெருமாள் கோயில்
பட்டத்துக்காளை
செறியடித்துக் கதறி
கொண்டிப் பசுக்களை கூப்பிடும்
முறைபோட்டு மடை திறக்கும்
காவல்காரன் முனகலுடன்
நீர்குறையும் கோபத்தில்
தவளை கத்தும்
களத்து வீட்டை நெருங்கையில்;
காவலுக்குப் படுத்திருக்கும்
தேவரின் குறட்டைச் சத்தம்
பாராக கொடுக்கும்
வல்லியோ
தலையணையில் காலும்
அடுப்படியில் தலையுமாக
அவிழ்ந்து கிடப்பாள்.
nine