அந்தி நேரத்தில் (நகுலனுக்கு)

ஷண்முக சுப்பையா




காற்றைப் பிடித்து கல்லாக்க
வீட்டு முற்றத்தில் வீற்றிருந்தேன்
பால் புகைப்படலத்தின்
வெளிப்படை மறைப்பில்
புஷ்ப விமானங்கள்
பூப்பந்தெறிந்தன

தாமரை ஒன்று ஆம்பலாய் குவிந்து
வழிமறந்து அறை புகுந்த வெளவாலாய்
சிறகடித்துச் சிறை உடைக்க
நாற்புறச் சுவர்க்கட்டில் முட்டி மோதி
முடங்கிக் கிடக்கவே
தாரைகள் இரண்டு
பார்வை இருண்டு
பாரை நோக்கிப் பனிமுத்துதிர்த்தன

கிளி மரக் கொம்பில்
சுற்றிப் பற்றிய
முற்றத்து முல்லையின் நாற்றம்
மூளையத் துழைத்தது.

புழக்கடைப் பக்கத்து
சீமைப் பப்பாளி
ஊமைக்கொப்பாகி

நீண்டு உருண்டு திரண்ட தன் காய்களை
தலைவிரிகோல்த்திரைக்குள் மறைத்து
அலைவிரித்தலறும் குகைக்குள் எழுந்து
அம்மண ஆட்டம் ஆடிற்று
பக்கவாட்டுப் புற்றிலிருந்து
எரிமலைக் குழம்பாய்
கரிநிறச் சாரை
வழிந்து ஒழுகி
பள்ளத்தாக்கில் சென்று மறைந்தது.

குட்டிச் சுவரைத் தொட்டு மேலே
மீகான் மேனோனின்
நங்கூரம் பாய்ச்சிய
சிங்கார விடு
நந்தியாய் மறைத்தது சங்கரன் கோயிலை

விண்வெளியில் ஒரு கொள்ளி மீன்
எள்ளி நகையாடி எரிந்து விழ
எழுந்தகம் புகுந்தேன்.

எதிரும் புதிருமாய்
சபரிமலையில்
தர்மசாஸ்தாஅமர்ந்திருந்தார்.
குமரி முனையில்
விவேகானந்தா நின்றிருந்தார்.

ஆச்சரியமாய் இருக்கிறது ஷண்முக சுப்பையாவா இப்படி கவிதை எழுதி உள்ளார் என்று.  மிக எளிமையாக கவிதை எழுதுபவர் ஷண்முக சுப்பையா.  மார்ச்சு 1975ஆம் ஆண்டு நீலக்குயில் என்ற பத்திரிகையில் நகுலனுக்கு என்று இக் கவிதை பிரசுரமாகி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன