ஸிந்துஜா
அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள். வெகு தூரத்தில் அவள் தலை தெரிந்தது. அது ஒரு மத்தியான வேளை வெய்யில் வழக்கம் போல அவ்வளவு அதிகமாக இல்லை. சோம்பேறித்தனத்துக்கு வரவேற்பு கொடுத்துக் கொண்டிருந்த சூழல். சாப்பாட்டை முடித்து விட்டு திண்ணையில் சண்முகம் சாய்ந்து கொண்டிருந்தான். வேலைக்குப் போய் இரண்டு மாதங்களாகி விட்டது. அது என்னவோ வேலைக்குப் போவது என்றாலே அவனுக்கு வேப்பங்காயாக இருந்தது. அவன் நண்பர்கள் எல்லாரும் பெரிய வேலையோ , சின்ன வேலையோ போய் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் நீ கொடுத்து வச்சவன்டா என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன்கள் சொல்லுவது கேலியாகவா அல்லது பொறாமையினாலா என்று தெரியவில்லை.
தெருவில் இரண்டு நாய்கள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடின. ஒன்று ஆண் நாயாகவும், இன்னொன்று பெண் நாயாகவும் இருந்தன. இந்தத் தெரு நாய்கள்தான் அவை என்று சண்முகம் சலிப்புடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு வீட்டிலும் எதையாவது போட்டு அவற்றின் பசியை ஆற்றி விடுகிறார்கள். அவை செய்யும் ஒரே வேலை இந்த விரட்டல்தான். அவைகளுக்கான புதியவரைப் பார்த்துக் குரைப்பது. இரவு காவல் காப்பது, நன்றியுடன் வாலை ஆட்டுவது போன்ற பணிகளைச் செய்ய மறந்து விட்டன போல அவை நடந்து கொண்டன. கொடுத்து வைத்த ஜன்மங்கள் என்று சண்முகம் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
சண்முகம் தலையைச் சாய்த்து மறுபடியும் தெருக் கோடியைப் பார்த்தான். இப்போதும் அந்தப் பெண்ணின் தலை தெரிந்தது. முன்பு பார்த்த இடத்திலிருந்து சற்று முன்னேறியிருப்பாள் போல. வழியில் யாரையாவது பார்த்து நின்று பேசிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்திருப்பாள்.
நாயர் கடைக்குப் பக்கத்திலிருந்த அய்யர் வீட்டில் அவள் வேலை பார்க்கிறாள் என்று அவன் தெரிந்து வைத்திருந்தான். இன்னும் அவள் அரை மணி கழித்து இந்த வழியாக அசைந்து அசைந்து அவன் மனதை வெட்டியபடி நடந்து போவாள். கடந்த இரண்டு வாரமாக அவளை அவன் தினமும் இந்த நேரத்தில் பார்க்கிறான்.
“படுக்கை போட்டாச்சா?” என்று கேள்வி வந்த திசையைப் பார்த்தான் சண்முகம். பக்கத்து வீட்டு கோவாலு மாமா. போன மாதம்தான் ஸ்கூல் வாத்தியார் வேலையிலிருந்து ரிடையர் ஆனார் தினமும் அவனைப் பார்த்து இந்த மாதிரி குசலம் விசாரிப்பார். அதுவும் இந்த ஒருவாரம், பத்து நாளாக இந்தப் பொழுதுக்கு அவனைப் பார்த்துக் கேக்க, பேச வந்து விடுகிறார். என்ன செய்வது? வேறு வேலை இல்லை. ரிடையர் ஆனதுக்கு அப்புறம். டியூசன் எடுக்கிறேன் என்று அவர் கிளம்பிய போது இவ்வளவு வருஷம் பாத்த வேலை எல்லாம் போதும் என்று அவருடைய ஒரே மகள் செண்பகம் தடுத்து விட்டாள். அவர்கள் குடும்பத்துக்கு வேணும் என்கிற அளவு பணம் இருந்தது. கோவாலு மாமாவின் மனைவி ரெண்டு வருஷத்துக்கு முன்பு மாரடைப்பு என்று போய் விட்டாள். செண்பகத்துக்கும் ஊரோடு பார்த்துக் கலியாணம் பண்ணி வைத்தார். ஆனால் அவள் முக்கால்வாசி நாள் அப்பாவுடன்தான் இருக்கிறாள். ‘ உள்ளூர் என்று செண்பகம் அப்பனுக்கு உதவியாக கூட வந்து இருக்கிறாள் ‘ என்று சண்முகம் நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியில்லை என்று கொஞ்ச நாளைக்கு முன்தான் தெரிந்தது . மாசா மாசம் பென்சன், உள்ளூரில் உள்ள நான்கு வீடுகளில் இருந்து வாடகைப் பணம், வயலில் இருந்து அரிசி பருப்பு என்று வருஷாந்திர சாமான்கள் வருகை என்று வசதிக்கு என்னவோ ஒரு குறைச்சலும் இல்லாமல் இருந்தார்.
கோவாலு மாமா அவனை நெருங்கி வந்தார். அவன் சாய்வு நிலையில் இருந்து விலகி, தானும் உட்கார்ந்து கொண்டு அவருக்கும் உட்கார இடம் கொடுத்தான்.
“வெயிலே வரமாட்டேங்குது இல்லே” என்றார்.
சண்முகம் தலையை அசைத்தான்.
“வீட்ல யாரும் இல்லையா?” என்று கேட்டார்.
அவன் வீட்டில் அவனைத் தவிர அவன் அம்மா மட்டும்தான் இருக்கிறாள், அவளும் வேலைக்கு மில்லுக்குப் போயிருக்கிறாள் என்று அவருக்குத் தெரியும் என்று சண்முகத்துக்கு தெரியும்.. பொழுதைக் கழிக்க பேச்சுக்கு அலைகிறார்.
.”இல்ல, அம்மா மில்லுக்கு போயிருக்கு” என்றான்.
அப்போது தபால்காரன் முத்து அங்கு வந்தான். சண்முகம் வீட்டு வாசலில் நின்றுகொண்டு கையிலிருந்த தபால் கட்டைப் பிரித்து காகிதங்களைப் பார்த்தான். ஒரு கவரை உருவி , சண்முகத்துக்கு அருகில் வந்து அதைக் கொடுத்தான். கோவாலுவைப் பார்த்து “சாப்பாடு ஆயிடுச்சா நயினா?” என்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பாராமல் நடந்தான். பதில் சொல்ல வாயைத் திறந்த கோவாலு, எதோ கொட்டாவி வந்ததைப் போல் வாய்க்கு அருகில் வலது கையைக் கொண்டு சென்று வாயை மூடிக் கொண்டார். சண்முகம் கவரைத் திறந்து பார்த்தான்.
“என்ன வேலைக்கு யாராச்சும் கூப்பிட்டிருக்கானா?” என்று கேட்டார்.
முத்துவைப் போல் இருக்கலாமா என்று சண்முகம் ஒரு கணம் யோசித்தான். ஆனால் இவன் தினமும் இவர் மூஞ்சியில் முழிக்க வேண்டும், முத்துவின் அதிர்ஷ்டம் தனக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டே “இல்லே. எதோ வெட்டி கடுதாசி. கோவில் கும்பாபிசேகத்துக்கு நிதி குடுன்னு கேட்டு” என்றான் சண்முகம்.
“இப்ப இது ஒரு பிசினசா போச்சு.” என்றார் கோவாலு.
வேலை, பிசினஸ் என்றெல்லாம் அவர் பேசுவதைத் தவிர்க்க விரும்பினவனாக சண்முகம் “நேத்திக்கு டாக்டரை பாக்கப் போனிங்களே, என்ன சொன்னாரு?” என்று கேட்டான்.
“சாப்பிடாதேன்றான், குடிக்காதேன்றான், ரொம்ப தூங்காதேன்றான்…. சாவுடான்னு சொல்லாம சொல்றான்” என்று கோவாலு மாமா சிரித்தார்.
அவருக்கு ரத்த அழுத்தமும், சக்கரையும் அதிகம் என்றுதான் டாக்டரிடம் போகிறார். ஆனால், குடிக்காதே என்று டாக்டர் சொன்னால் அவருக்கு அது பிடிக்கவில்லை. தினமும் அவருக்கு ரெண்டு மூணு பெக் போடணும். மனுஷன் ஜாலியான ஆள்தான். நிறைய பணம் இருக்கிறது, கொடுத்து வைத்தவர். ஜாலிக்கென்ன குறைச்சல்? சண்முகத்துக்கு அவர் மீது பொறாமையாக இருந்தது.
அப்போது, செண்பகம் அவரைத் தேடிக்கொண்டு வந்தாள்.
“என்னப்பா, சாப்பிட்டு விட்டு மருந்து எடுத்துக்காம வந்திட்டீங்க?” என்று அவரைப் பார்த்துக் கேட்டாள். அவள் கையில் நாலைந்து மாத்திரைகள் இருந்தன.
“இந்தக் களுதையை சாப்பிட வேணாம்னுதான் வந்தேன்” என்று கோவாலு சிரித்தார்.
“அப்புறம் படுக்கேல விழுந்தா உங்களுக்குதானே கஷ்டம். நான்
போயி, வெந்நீர் வச்சு கொண்டாறேன்” என்று சண்முகத்தைப் பார்த்தபடியே அவன் வீட்டுக்குள் நுழைந்து உள்ளே போனாள்.
“இவளும் இல்லாட்ட நான் சீரழிஞ்சிருவேன்” என்று கோவாலு மாமா நெகிழ்ந்தார். மனைவி போனதுக்குப் பிறகு, அடிக்கடி இம்மாதிரி அவர் பேசுவதை சண்முகம் கவனித்திருக்கிறான். பாவம் மனுஷன் என்று அவனுக்குத் தோன்றிற்று.
அப்போது ” சண்முகம் , இங்க லைட்டரை காணமே ! ” என்று உள்ளிருந்து செண்பகத்தின் குரல் வந்தது.
அவன் எழுந்து உள்ளே போனான். காஸ் அடுப்புக்கு அருகில் அவள் நின்றிருந்தாள். அவள் அருகே சென்றதும், பின்னால் கட்டியிருந்த கைகளை முன்னே கொண்டு வந்தாள். வலது கையில் சிகப்பு நிற லைட்டர் இருந்தது.
லைட்டரை மேடை மீது வைத்து விட்டு, இரு கைகளையும் , மாலையாக அவன் கழுத்தில் போட்டு இறுக்கினாள். உதடுகளால் அவன் உதடுகளைப் பிரித்து, நாக்கால் துழாவினாள். பிறகு அவன் உதடுகளைக் கடித்தாள். உடம்பில் ரத்தம் விர்ரென்று ஓடுவது அவனுக்குக் கேட்டது. அவனது கை அனிச்சையாக, அவள் இடுப்பை இறுகச் சுற்றிக் கொண்டது. அவள் உடம்பின் மென்மை…..
எல்லாம் க்ஷண நேரம்தான். அவளே அவனைத் தள்ளி விட்டு அடுப்பைப் பற்ற வைத்தாள். அவன் நகர்ந்து வெளியே சென்றான்
அவனைப் பார்த்ததும் கோவாலு, “சிகரெட் எடுத்திட்டு வர மறந்திட்டேன். போய்க் கொண்டாந்திர்றேன்,” என்று எழுந்து அவர் வீட்டை நோக்கி நடந்தார்.
சண்முகம் பழைய இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். கலியாணத்துக்குப் பிறகு செண்பகம் இம்மாதிரி நடந்து கொள்வது இரண்டாவது தடவை நாலைந்து மாதத்துக்கு முன்புதான் செண்பகத்தின் இல்லற வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக இல்லை என்று அவனுக்குத் தெரிய வந்தது. அன்று அவன் ரேஸ்கோர்ஸ்லிருந்து மல்லேஸ்வரம் வருவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். திடீரென்று அவன் பெயர் சொல்லி யாரோ கூப்பிடுவது போலிருந்தது. திரும்பினால் செண்பகம். தீபாவளிக்குத் துணி வாங்க வந்திருந்தாளாம். கை நிறைய பைகள். அவன் இரண்டு பைகளை வாங்கிக் கொண்டான். சிவாஜி நகரில் இருந்து வந்த பஸ், கூட்டத்தை அள்ளிக்கொண்டு வந்தது. ஏறி உள்ளே போய் நிற்கத்தான் இடம் இருந்தது. செண்பகம் அவனுக்குப் பின்னால் நின்றாள். மல்லேஸ்வரத்தில் இறங்கும் வரை, அப்படியே அவள் உடல் அவனை ஒட்டிக் கொண்டு நின்றது . பஸ் ப்ரேக் போடும் போதும், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போதும் அவளது திண்மையான உடம்பின் உரசல் ….
பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து போகும் போது, விலகி நடந்தாள். பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள். நாகரிகம் கருதி சண்முகம் அவளிடம், “மாப்பிள்ளை எப்படி இருக்காரு?” என்று கேட்டான்.
“மாப்பிள்ளையா? குட்டிச் சுவரு. அவனுக்கென்ன, கால நேரம் தெரியாம, தண்ணி அடிக்கறதும், சீட்டு விளையாடறதுமா சொத்தை கரைச்சிகிட்டு கெடக்கான்” என்று ஒருமையில் திட்டினாள். “அவன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுதானே இங்க வந்திருக்கேன்” என்றாள்.
அவளுக்குத் திருமணம் ஆவதற்கு முன்னால், அவன் அவளைப் பற்றி எண்ணி ஏங்கியது உண்டு. அவனோடு அவளும் வம்படித்துத் திரிவாள். சின்ன வயதிலிருந்தே இரு குடும்பமும் அடுத்தடுத்து வசித்து வந்த நெருக்கம் அவர்கள் பழகுவதை யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டது. அப்போதெல்லாம் கோவாலு மாமா அவனை கேலியாக “மாப்பிள்ளே!” என்று அழைத்துக் கொண்டாடுவார். ஆனால் திருமணம் என்று வந்தபோது கோவாலு சண்முகத்தின் குடும்ப நிலைமையால் கவரப்படாதவராக, பணக்காரப் புள்ளி என்று அவர் கருதிய இடத்தில் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார். பணக்கார மாப்பிள்ளை இப்போது அவரது சொத்தையும் அழிக்கக் கிளம்பி விடுவானோ என்று அவர் கவலை பட்டுக் கொண்டிருக்கலாம்.
செண்பகம் ஒரு பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக்கொண்டு அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு வந்தாள்.
“எங்க பெருசைக் காணோம்?” என்று கேட்டாள்.
அவன் அவர் சிகரெட் எடுக்கப் போயிருப்பதைச் சொன்னான்.
“இன்னிக்கு சாயந்திரம் வரியா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன தைரியம்!
“எங்கே?”
“எங்க அப்பா ஆறு மணிக்கு மண்டியா போறாரு. ராத்திரி பன்னெண்டு மணி, ஒரு மணி ஆயிடும் திரும்பி வரதுக்கு. குத்தகப் பணத்தை வாங்கிட்டு வரதுக்கு போறாரு. யாரும் வீட்டுல இருக்க மாட்டாங்க” என்றாள்.” “என்னப்பா, சிகரெட்டை விடுன்னு டாக்டர் சொல்லிகிட்டே இருக்காரு. நீங்க அவர் சொல்றதை கேக்கவே மாட்டிங்களா?”
சண்முகம் திரும்பிப் பார்த்தபோது, கோவாலு அவனை நெருங்கிக் கொண்டிருந்தார்.
“சரி, இந்த மருந்தை குடிச்சுப் போடுங்க” என்று அவர் கையில் மாத்திரையையும், வெந்நீரையும் கொடுத்துவிட்டு அவள் சண்முகம் பக்கம் திரும்பினாள். “வரட்டா?” என்று அவனிடம் சொல்லியபடி, அவனை விழுங்கி விடுவதுபோல் பார்த்துவிட்டு வீட்டைப் பார்க்க நடந்தாள்.
“இவளை சீரழிச்சிட்டான் அந்த தாயோளி” என்றார் கோவாலு. “நானுந்தான் தேவடியாப் பய, ஒரு இழவும் தெரியாம, புரியாம பச்சப் புள்ளையப் போய் அங்க தள்ளி வுட்டுட்டேன்” என்று தன்னையே நொந்து கொண்டார்.
சண்முகம் பேசாமல் இருந்தான்.
“இந்தப் பக்கம் தலை காட்டக் கூடாதுன்னு அந்த கபோதிப் பயல் கிட்ட சொல்லியிருக்கேன். சீட்டு ஆடியே சொத்தையெல்லாம் அழிச்சிட்டான். போதாதுக்கு குடி வேறே, கூத்தியாவேற” என்று உறுமினார்.
சண்முகம் திடுக்கிட்டு அவரை ஏறிட்டுப் பார்த்தான்.
“பொம்பளை விசயம் வந்ததுக்கு அப்புறம்தான், இனிமே விடக் கூடாதுன்னு, செம்பகத்த இங்க கூட்டி கிட்டு வந்துட்டேன்.” என்றார் கோவாலு.
சண்முகத்துக்கு அதிர்ச்சியில் வாய் பேச வரவில்லை.
சில நிமிஷங்கள் மௌனத்தில் திணறின.
“என்ன மாப்பிள்ளே, பேசாமே இருக்கே?” என்று கேட்டார் கோவாலு .
சண்முகம் மறுபடியும் திடுக்கிட்டு அவரை ஏறிட்டுப் பார்த்தான்.
“நானும் கொஞ்ச நாளா யோசிச்சுகிட்டேதான் இருந்தேன். இந்த ரெண்டு வாரமா எப்படியோ சொல்லிரணும்னு பாத்துகிட்டு இருக்கேன். செம்பகம் இங்கியே , உங்க வீட்டையே, உன்னையே சுத்திகிட்டு வாறதை நான் பாக்கறேன். இனிமே அந்த அயோக்கிய பயலோட இருக்க விட மாட்டேன். வெட்டி விடறதுக்கு சொல்லி அனுப்பிச்சிட்டேன். உனக்கும் செம்பகம் மேல சின்ன வயசிலேந்தே இஷ்டம்னு எனக்கு தெரியும். நான்தான் முட்டாத்தனமா எல்லாத்தையும் கெடுத்துப் போட்டேன். இப்ப நீ அவளை கட்டிக்கிறயா மாப்பிள்ளே? எனக்கு பிறவு எல்லாம் அவளுக்குத்தான். அதுவும் உனக்குத்தான். ஒரு கடை கண்ணியை வெச்சிடலாம். நீ பாத்துக்கோ, சரிதானா? உங்கம்மாகிட்ட சொல்லி, நான் சரி பண்ணிகிடறேன். நீ சரின்னு சொல்லணும் . சரியா?” என்று பாடம் பண்ணி ஒப்புவிப்பதுபோல கடகட வென்று பேசித் தள்ளி விட்டார்.
சண்முகம் திகைப்புடன் உட்கார்ந்திருந்தான். அவனிடமிருந்து ஒரு சொல் எழும்பவில்லை.
கோவாலு அவனருகில் வந்து தலையைத் தடவிக் கொடுத்தார். அவன் வலது கையைப் பிடித்துக் கொண்டார்.
“நான் பாட்டுக்கு சொல்லிட்டே போயிட்டேனோ? சரி,சரி, நீ கொஞ்சம் யோசிக்கணும்ல. நான் அப்புறமா வரேன். இன்னிக்கு ஊருக்கு போகணும். ஆனா உங்க அம்மாவே பாத்துப் பேசிட்டு போலாம்னு பாக்கறேன்” என்று எழுந்து கொண்டார். அவனைப் பார்த்து ஒரு புன்முறுவலைச் சிந்திவிட்டு, அவர் வீட்டை நோக்கி நடந்தார்.
சண்முகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அரைமணி, முக்கால் மணி நேரத்துக்குள் அவன் வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விடக் கூடிய மாதிரி என்ன இங்கே நடந்து கொண்டிருக்கிறது? சற்றுமுன் கேட்டதெல்லாம் உண்மைதானா? ஏதோ சன்னதம் வந்தது போல கோவாலு மாமா சொன்னதெல்லாம் வெறும் பிதற்றலா அல்லது நடக்கப் போவதுதானா?
அவனுக்கு மண்டை கிறுகிறுத்தது.
ஒன்றும் பிடிபடாமல், புரியாமல் தெருவைப் பார்த்தான். அந்தப் பெண் அவன் வீட்டுக்கு இரண்டு வீடு முன்பு நடந்து வந்து கொண்டிருந்தாள். **********
பின் குறிப்பு :
ஸிந்துஜா என்ற எழுத்தாளர் அன்றைய சிறுபத்திரிகைகளில் அதிகமாக கதைகள் எழுதியவர். பின் அவர் எழுதாமலே இருந்துவிட்டார். அவருடைய சிறுகதைகளும் தொகுத்துப் புத்தகமாக வரவில்லை. 2009ல் ஸிந்துஜாவின் கதைகளைத் தொகுத்து ஸிந்துஜா சிறுகதைகள் என்ற புத்தகம் நன்னூல் அகம் வெளியீடாக வந்துள்ளது.
ஸிந்துஜா தற்போது முன்பு எப்போதும் உள்ளதை விட அதிகமாக கதைகள் எழுதி வருகிறார். அவருடைய ‘புரியவில்லை’ என்ற கதை நவீன விருட்சம் 99வது இதழில் வெளிவந்துள்ளது. அதை இங்கே அளிக்கிறேன். மிக எளிமையாகவும் திறமையாகவும் எழுதப்பட்ட கதை. படித்து உங்கள் கருத்துகளை கொடுக்கவும்.
மிக விஸ்தாரமாக ச் சொல்லவில்லையென்றாலும்
சண்முகத்தின் குண நலனைப் புரிந்து கொள்ள முடிகிறது
மிகக் குறிப்பாக அந்தத் தெருப் பெண்ணைச் சொல்லிச் செல்லும்
விதம் மிக நேர்த்தி.
ஸிந்துஜாவின் கதைகளை வாங்கிப்படிக்கவேணும்