மறக்க முடியாத மார்ச்சு ஒன்றாம் தேதி…

அழகியசிங்கர்
                                                                                                                     
இன்றைய தேதியைப் பற்றி எழுத எனக்கு சங்கடமாக இருக்கிறது.  கிட்டத்தட்ட எட்டாண்டாண்டுகளுக்கு முன்னால், அதாவது மார்ச்சு மாதம் முதல் தேதி 2008ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் தூக்குப் போட்டுக்கொண்டு மரணம் அடைந்த நாள் இன்று.  அன்று சனிக்கிழமை.  நான் ஹஸ்தினாபுரம் என்ற ஊரிலுள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  காலை நேரத்தில்தான் அந்த சோகமான செய்தியை என் நண்பர்களான, ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன்.
சுஜாதா இறந்து போன சில நாட்களில் இந்தச் சோகம் நடந்தது.  ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கு புரியாத புதிர்?  பார்க்க முரட்டுத்தனமாக காட்சி  அளிப்பார் ஸ்டெல்லாபுரூஸ்.  கருப்பு கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு உயரமாக இருப்பார்.  அவர் சிலசமயம் பேசுவது கூட  அலட்சியமாக இருக்கும். யார் மீதாவது கோபப்பட்டால் பார்க்கக் கூட மாட்டார்.  இது ஒரு முகம்.  
அவருடைய இன்னொரு முகம். வன்முறையைக் கண்டால் பயந்து ஓடுவார்.  யாராவது நம்முடன் பேச மாட்டார்களா என்று ஏங்குபவர். எதற்கும் பயப்படுவார்.  ஆடம்பரமாக எந்தப் பொருளையும் வாங்கி சேர்க்க மாட்டார்.  அவர் விரும்புவது புத்தகங்கள், இசை, நண்பர்களுடன் உரையாடுவது. அவர்கள் வீட்டிற்குப் போனால, அவரும் அவர் மனைவியும் உபசரிப்பது பிரமாதமாக இருக்கும்.  ஏதோ அந்நிய வீட்டிற்குப் போவதுபோல் உணர்வு ஏற்படாது.  புத்தகங்கள் பற்றி, எழுதுவது பற்றி பேசிக்கொண்டிருப்பார்.  எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் அவர் மரியாதை வைத்திருந்தார்.   
அவர் மனைவி நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஸ்டெல்லா புரூஸ் தவித்துப் போய்விட்டார்.  மருத்துவமனை வீடு என்று அவரால் அலைய முடியவில்லை.  அவருக்கு அது பழக்கமுமில்லை.  வீட்டில் எல்லா வேலைகளையும் அவர் மனைவிதான் செய்வார்.  எங்கும் இவரை அலைய விட மாட்டார்.  மனைவியை இழந்து விடுவோம் என்ற பயம் அவரைச் சூழ்ந்து கொண்டது.  டாக்டர் செல்வராஜ் என்ற என் நண்பரை போய்ப் பார்த்து வாய்விட்டு அழ ஆரம்பித்தார்.  
எனக்கு இதெல்லாம் ஆச்சரியம்.  நான் பார்த்த ஸ்டெல்லா புரூஸ் எதற்கும் கலங்க மாட்டார்.  யாராவது பிரச்சினைகளுடன் அவரைச் சந்தித்தால் அதைத் தீர்த்து வைப்பார்.  எப்போதும் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருப்பார்.  
ஹேமா அவர் எதிர்பார்த்தபடி ஒரு ஜ÷லை மாதம் இறந்து விட்டார். ஸ்டெல்லா புரூஸôல் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் எல்லோரிடமும் கொடுக்க ஆரம்பித்தார்.   இதன் உச்சக்கட்டம் ஹேமாவின் நகைகள் எல்லாவற்றையும் திருப்பதியில் உள்ள கோயிலில் போடச் சொலலி ஒரு நண்பரிடம் கொடுத்தது. இதைப் போல ஒரு பைத்தியக்காரத்தனம் எதாவது உண்டா என்று எனக்கு அப்போது தோன்றியது.  ஸ்டெல்லா புரூஸ÷டம் ஒரு குணம் உண்டு.  அவர் யார் பேச்சையும் கேட்கமாடடார்.  ஹேமா இறந்து போய் ஆறு மாதங்கள் ஆனாலும், ஸ்டெல்ô புரூஸ் துக்கத்தின் உச்சத்தில் இருந்தார்.  அப்போதுதான் அவருக்கு நண்பர்களின் ஆதரவு தேவைப்பட்டது.  ஆனால் யார் அவருடன் இருந்து அவர் துக்கத்தைப் போக்குவது.  எப்போதோ அவருடைய உறவினர் வட்டமும் அவரைக் கை விட்டுவிட்டது.  வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் இருந்தார். 
நாம் பலருடன் பழகினாலும் அறுபது வயதைத் தாண்டி விட்டால் நமக்கு நண்பர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.  நம்முடன் பேசவும் மாட்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது இயலாத காரியம்.   
 67 வயதான ஸ்டெல்லா புரூஸ் இதை ஏன் புரிந்து கொள்ளவில்லை.  ஒரு முறை டிரைவ் இன்னில் பிரமிளைப் பார்த்தேன்.  அப்போது அவர் ஒன்று சொன்னார்.  அமெரிக்காவில் நம்மைப் பார்த்து யாராவது பேச வேண்டுமென்றால் அதற்கு பணம் தர வேண்டுமாம்.  பணம் கொடுத்தால் ஒரு சில மணி நேரங்கள் நம்மிடம் நட்புடன் பேசுவார்களாம். அவரும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் தணித்துதான் இருந்தார்.  
ஸ்டெல்லா புரூஸ் தனியாக  இருப்பது ஆபத்து என்று எச்சரித்தார் ஒரு மனோதத்துவ மருத்துவர்.  அவருடைய சொந்தக்காரர் வீட்டில் போய் இருக்கச் சொல்லுங்கள்.  அல்லது சொந்தக்காரர் யாராவது இருந்தால் அவருடன் இருக்கச் சொல்லுங்கள்,ý என்றார் அவர்.   எல்லாம் அவர்தான் முயற்சி செய்யவேண்டும்.  அவர் விஷயத்தில் யாரும் வந்திருந்து தலையிட முடியாது.  
அவர் உயிரோடு இருந்தபோது நான் சில எழுத்தாள நண்பர்களை அழைத்துக் கொண்டு போயிருக்கிறேன்.  அவர்கள் எல்லாம் அவர் துக்கத்தைக் கேட்டு தாங்க முடியாமல் ஓடியே போய்விட்டார்கள்.  தேவராஜ் என்ற நண்பர்தான் ஒருசில நாட்கள் அவருடன் அங்கு தங்கியிருக்கிறார்.  அவரும் அங்கு தங்கி அவதிப்ட்டு அங்கு போவதையே நிறுத்திக் கொண்டு விட்டார்.
அவர் தங்கியிருந்த இடம் அவர் மனைவியின் ஹேமாவின் சகோதரனின் வீடு.  சகோதரன் அந்த இடத்தை விட்டு அவரைக் காலிப் பண்ணச் சொல்லி நச்சரித்தார்.  உண்மையிலேயே அவர் ஹேமா இல்லை என்றான பிறகு அந்த இடத்தை விட்டுப் போயிருக்க வேண்டும்.  ஸ்டெல்லா புரூஸ் அதைச் செய்யாமல் ஹேமா நினைவாக அங்கயே உருகிக் கொண்டிருந்தார்.  ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் தனியாக இருப்பது எப்படி என்பது கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு.
ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தை இங்கு தர விரும்புகிறேன்.
“கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை.  எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல்  வாழ்ந்திருக்கிறேன்.  கண்ணை இமை காப்பதுபோல என்னைப் பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி வாழ்ந்தார்.
எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன்.  நானும், அவளும், வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான இலக்கிய தன்மையான காவியம்.  ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது.  என்னால் அதைத் தாங்க முடியவில்லை.  தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.  எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன்.  மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது மரண விடுதலை பெறுகிறேன்..”
இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  ஸ்டெல்லா புரூஸ் இறந்து போய் ஹேமா உயிரோடு இருந்தால், ஸ்டெல்லா புருஸ் செய்துகொண்ட மாதிரி அவர் மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்.  ஸ்டெல்லா புரூஸ்தான் இப்படி செய்து கொண்டு விட்டார். 
மனைவியை இழந்துவிட்ட அவதியை வெ. சாமிநாதசர்மா என்ற அறிஞரும் üஅவள் பிரிவுý என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  அவருடைய பதிப்பாளருக்கு அவர் எழுதிய கடிதத் தொகுதியே அந்தப் புத்தகம்.
6.3.1956ல் வெ சாமிநாதசர்மா இப்படி எழுதி உள்ளார் :
“எனது வாழ்க்கைக்கு வெளிச்சம் அளித்து வந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது.  இவ்வளவு சீக்கிரத்தில் அணைந்து விடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.  நினைக்கவுமில்லை.  சிறிது காலமாக – ஏன்? இரண்டு வருஷங்களுக்கு மேலாக அது மங்கலாக எரிந்து கொண்டிருந்ததென்னவோ வாஸ்தவம்.  அப்படி எரிந்து கொண்டிருந்தாலும் எரிந்து கொண்டிருக்கிறதேயென்பதில் எனக்கு ஒருவித திருப்தி இருந்து வந்தது.  அந்த மங்கலான வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு இன்னும் சிறிது காலம்ட தட்டுத்தடுமாறியாவது வாழ்க்கைப் பாதையில் செல்வோம் என்ற நம்பிக்கையும் தைரியம் இருந்தன.  இப்பொழுதோ? ஒரே இருட்டு.  அந்த இருட்டினால் திகைப்பு, புலம்புவதைத் தவிர வேறொன்றும் எனக்கு இப்பொழுது தெரியவில்லை.” என்கிறார்.
இப்படி பத்து கடிதங்களுக்கு மேல் பிரசுராலரயத்தினருக்கு எழுதி உள்ளார். 
  வெ சர்மா இப்படியெல்லாம் எழுதினாலும், மனைவியின் மறைவுக்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை.
விருட்சம் வெளியீடாக ஸ்டெல்லா புரூஸின் 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  25 வருடக் கதை என்ற அவருடைய சிறுகதைத் தொகுதி, இரண்டாவது புத்தகம், என் நண்பர் ஆத்மாநாம் என்ற அவருடைய கட்டுரைத் தொகுதி, மூன்றாவது புத்தகம் நானும் நானும் என்ற அவருடைய கவிதைத் தொகுதி.  கவிதைத் தொகுதியை காளி-தாஸ் என்ற பெயரில் எழுதி உள்ளார்.   அவர் ஞாபகர்த்தமாக இந்த மூன்று புத்தகங்களையும் பாதி விலையில் கொடுப்பதாக உள்ளேன்.
அதாவது 25 வருடக் கதை என்ற சிறுகதைத் தொகுதி விலை ரூ50 அதை ரூ25க்குத் தர உள்ளேன்.  அதேபோல் என் நண்பர் ஆத்மாநாம் என்ற கட்டுரைத் தொகுதி ரூ. 100 விலை.  இதை ரூ.50க்குத் தர உள்ளேன். 134 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  நானும் நானும் என்ற கவிதைத் தொகுதி விலை ரூ.50.  அதை ரூ.25க்குத் தர விரும்புகிறேன்.  
காளி-தாஸ் என்கிற ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம்மோஹனின் ஒரு கவிதையுடன் அவரை நினைவுப்படுத்தும் இக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
மனிதப் போக்குவரத்து

நான்
போய்க் கொண்டிருக்கிறேன்
அவர்
கொஞ்சம் தள்ளி
போய் கொண்டிருக்கிறார்
இன்னொருவர்
இன்னும் கொஞ்சம் தள்ளி
ஒருவர் 
போய் சேர்ந்து விட்டார்
சற்று பின்னால் ஒருவர்
வருகிறார்
மற்றொருவர்
இப்போதுதான் புறப்படுகிறார்
யாரும்
யாரோடும் போகவில்லை
ஆனால்…

“மறக்க முடியாத மார்ச்சு ஒன்றாம் தேதி…” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன