அழகியசிங்கர்
சமீபத்தில் நான் இரண்டு கூட்டங்களுக்குச் சென்றேன். ஒரு கூட்டம் ரவி சுப்பிரமணியனின் திருலோகம் என்றொரு கவி ஆளுமை. இன்னொரு கூட்டம் விசாரணை படத்தைப் பற்றிய பாராட்டு கூட்டம். இந்த இரண்டு கூட்டங்களிலும் உட்கார இடம் கிடைக்கவில்லை. ரொம்ப நேரம் நின்றுகொண்டு ஒரு கூட்டத்தை ரசிக்க முடியவில்லை. ரவி சுப்பிரமணியன் கூட்டத்தில் உள்ளே இருப்பதை விட வெளியே பேசக் கிடைத்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பல நண்பர்களைச் சந்தித்தேன். ரொம்ப நாட்கள் கழித்து தமிழ் மணவாளனைச் சந்திந்தேன். தமிழ் மணவாளனைப் பார்த்தால் கட்டாயம் சில நண்பர்களைப் பற்றி விஜாரிப்பேன். குறிப்பாக ப்ரியம் என்ற நண்பரைப் பற்றி விஜாரிப்பேன். பிறகு அமிர்தம் சூர்யாவைப் பற்றி விஜாரிப்பேன். தமிழ் மணவாளன் பிஎச்டி முடித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். மாதவரம் என்ற இடத்திலிருந்து அவர் ரவி சுப்பிரமணியன் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அதுவும் டூ வீலரில் வந்திருக்கிறார். நான் அதுமாதிரி டூ வீலரில் வந்தால் என் ரத்த அழுத்தம் அதிகமாகக் காட்டும். ஒரு மாதிரி ஆகியிருப்பேன். மேற்கு மாம்பலத்திலிருந்து வருவதே எனக்குக் கஷ்டமாக உள்ளது. அதாவது டூ வீலரில்.
திருலோகம் என்றொரு கவி ஆளுமை என்ற டிவிடியைப் பாதி வரை பார்த்தேன். அவருடைய ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப் படம் சிறப்பானது. இதில் திருலோக சீதாராம் என்ற அறிஞர் இப்போது நம்மிடம் இல்லை. இல்லாத ஒருவரைப் பற்றியதுதான் இந்த ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது (அதாவது பாதிவரை பார்த்ததில்) பல இல்லாதவர்களைப் பற்றிய படமாக தோன்றியது இது. பாரதியார், பாரதிதாசன், திருலோக சீதாராம் என்று யாரும் இல்லாதவர்கள்தான். முழுதாகப் பார்த்துவிட்டு இதைப் பற்றி எழுத வேண்டும்.
இரண்டாவது கூட்டம் விசாரணை படம் பற்றியது. ஒரே கூட்டம். தாங்க முடியவில்லை. ஐந்து மணிக்கு கூட்டம் ஆரம்பிக்க வில்லை. கூட்டம் ஆரம்பிப்பதே 6 மணி மேல் ஆகிவிட்டது. கூட்டத்தைப் பார்த்து பயந்து வீட்டுக்குப் போய்விடலாமா என்று யோசித்தேன். கதவை திறந்து விடும்போது கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு ஓடியது. இடம் இருக்குமென்று நானும் உள்ளே நுழைந்தேன். ஒரு இடம் கூட இல்லை. நம்மால் பொறுமையாக எத்தனை நேரம் நின்று கூட்டத்தை ரசிக்க முடிகிறது என்பதை சோதிக்க நினைத்தேன். பாரதிராஜா வந்தவுடன், கூட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. எல்லோரும் பரபரப்பாக பேசினார்கள். கௌதம சித்தார்த்தன் பேசும்போது தொண்டை அடைத்துப் போய் பேசுவதுபோல் தோன்றியது. அவரும் விசாரணை படத்தைப் பாராட்டிப் பேசினார். லீனா மணிமேகலை பேசும்போது சில கேள்விகளை வெற்றி மாறனைக் குறித்து கேட்டார். பாமரன் என்பவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. அடுத்தது சாரு நிவேதிதா. நானும் சாரு நிவேதிதாவும் ஒரே மாதிரியான கருத்தைதான் விசாரணை குறித்து வைத்திருக்கிறோம். ஆனால் சாரு நிவேதிதா இன்னும் சில கருத்துகளை விசாரணை குறித்து குறிப்பிட்டார். இசை சரியில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் இசை சிறப்பாக உள்ளது என்கிறார் ராமகிருஷ்ணன். அஜயன்பாலா சப்தத்தை சிறப்பாகப் படத்தில் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
ராமகிருஷ்ணன் பேச வரும்போது இரவு 9 ஆகிவிட்டது. என்னால் இரண்டு மணி நேரமாக ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்க முடியவில்லை. அதனால் வீட்டுக்கு வந்து விட்டேன். சுருதி டீவியில் எல்லாவற்றையும் அழகாகப் படம் பிடித்து வைத்திருக்கிறார்கள். எப்போதும் வேண்டுமானாலும் யாரும் பார்க்கலாம். எல்லோர் பேசுவதையும் நன்றாகவே யாரும் கேட்க முடியும். கூட்டத்திற்கு முண்டி அடித்துக் கொண்டு போயிருக்க வேண்டாமென்று தோன்றியது.
20ந்தேதி விருட்சம் சார்பில் நடைபெற்ற ராம் நாடகங்களைப் பற்றிய கூட்டத்தில் ராம் சிறப்பாக நாடகம் பற்றிய அனுபவத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். அன்று அவர் பேசியது மனதிலிருந்து பேசியது போலிருந்தது. நான் ஆடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை யூ ட்யூப்பில் ஏற்ற வெளிநாடு சென்றுள்ள கிருபானந்தன் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறேன். அவர் வந்தவுடன் ஏற்றி விடலாம்.
இந்த சுருதி டீவிக்காரர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள் ராம் கூட்டத்தையும் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கூட்டங்களை நேரில் பார்ப்பதுபோல் உள்ள உணர்வை சுருதி டிவிக்காரர்கள் உருவாக்குகிறார்கள். அவர்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்.