வழித்துணை?

ஞானக்கூத்தன் 



வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கண் பார்வை போய்விட்டது. எதற்கெடுத்தாலும் மற்றவர்களுடைய உதவியை அவர் கேட்கத் தொடங்கினார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்குக் கஷ்டம். அவரவர்களுக்கு வேலை இருக்கும்போது இவர் அடிக்கடி தனக்கு உதவி செய்யக் கூப்பிட்டால் எப்படி? நாயனாருக்கும் வருத்தம். திருவொற்றியூர் உறை சிவபெருமானிடம் தனக்கு நேர்ந்த குறையைச் சொல்லி முறையிட்டார். பத்துச் செய்யுளில் ஐந்தாவது செய்யுளில் சொல்கிறார்:
கழித்தலைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீ அருளாயின செய்யாய்
ஒற்றியூர் எனும் ஊர் உறைவனே.

தெருவில் அவருக்கு உதவி செய்ய வந்தவன் அவர் பிடித்துக்கொண்டிருந்த ஊன்றுகோலின் மறுமுனையைப் பிடித்துக் கறகற என்று இழுத்துச் சென்றானாம். நாயனார் அப்படி ஒன்றும் ஊர் அறியாத அநாமி அல்லர். இருந்தும் அவருக்குக் கிடைத்த மரியாதை இவ்வளவுதான் – கறகற இழுக்கை – வீட்டுக்கு வெளியில் இந்த நிலைமை என்றால் வீட்டிலும் அப்படித்தான்.
அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால்
அழையேல்! போகுருடா! எனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்கணா, முறையோ?

என்கிறார் நாயன்மார். எதற்காகவாவது கூப்பிட்டால் அழைக்காதே போ குருடா என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிடுகிறார்களாம். ‘குருடா’ என்று திட்டவே செய்துவிடுகிறார்கள். உலகுக்கு நாயன்மாராக இருந்தாலும் வீட்டில் அதற்கென்று ஒன்றும் தனி மதிப்பில்லை; இந்த ஒரு விஷயத்தை நாயன்மாரின் வாழ்க்கைப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இக்கட்டுரையில் வேறொன்றைப் பார்க்க வேண்டியிருப்பதால் அந்தக் கேள்விகளை எடுத்துக்கொள்ளவில்லை. மேலே கொடுக்கப்பட்ட அடிகளுக்கு முந்திய அடிகள் –
மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்தனே மணியே மணவாளா

இந்த அடியில் மகத்தில் சனி இடம்பெயர்வது போல் இருக்கிறது நீ என்னிடம் இருப்பது என்று சிவபெருமானைக் குறிப்பிடுகிறார்.
ஒரு சமய சொற்பொழிவாளர் இந்த அடியை எடுத்துத் தனக்குள்ள – அல்லது ஒரு மட்டில் உள்ள – ஜோதிட அறிவைக் காட்டிக்கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது சொற்பொழிவைக் கேட்கப் பொறுக்காத ஒருவர் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு மகத்தில் சனியாம். அந்த ஆன்மீகச் (?) சொற்பொழிவாளர் நாகரிகம் பற்றாத வெற்றுப் பேர்வழி என்று வருந்திவிட்டுப் போனார்.
சுந்தரர் தனது நிலைமையைக் கூறும்போது வான சாத்திரம், சோதிடம் பற்றிக் கூறினார். தமிழுலகத்தில் அந்த வான சாத்திர அறிவு பற்றி அறிஞர்களிடத்தில் சர்ச்சை உண்டு. ‘ஹோரா’ என்ற கிரேக்கச் சொல் தமிழின் ‘ஓரை’ என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. சங்க இலக்கியத்தைச் சார்ந்த கலித்தொகையை ஒப்பச் சிறந்த நூலான பரிபாடலிலும் வான இயல் அல்லது கோள்களின் இருப்பு பற்றிப் பேசப்படுகிறது. வையை நதியைப் பற்றி ஆசிரியர் நல்லந்துவனார் இயற்றிய பரிபாடலில் வான சாத்திரக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இந்தப் பாட்டுக்கு நாகனார் பாலைப் பண்ணில் இசையமைத்திருந்தாராம். பரிபாடல் தொடக்கத்திலேயே வான சாத்திரக் குறிப்புகள் தரப்படுகின்றன.
விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பால்எய்த இறையமன்
வில்லிற் கடைமகரம் ஏவப் பாம்பொல்லை
மதிய மறைய வருநாளில் வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்…

பரிபாடலின் இந்தப் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத் தமிழைப் படிப்பது நன்றாக இருக்குமல்லவா.
‘1. – 3. விசும்பு மதியத்தோடு புணர்ப்பனவாகிய எரியும் சடையும் வேழமும் முதலாக அவற்றின் கீழிருந்து வீதியால் வேறு படுக்கப்பட்ட ஓரொன்று ஒன்பது நாளாகிய மூவகை இராசிகளுள். மேலவாய    நாண்மீன்களைக் கீழதாகிய மதி புணர்தலாவது அவ்வ நேர் நிற்றன் மாத்திரமாகலின் அவற்றை விசும்பு புணர்ப்ப என்றார்.
2. – எரி. அங்கியைத் தெய்வமாக உடைய கார்த்திகை; அதனால் அதன் முக்காலை உடைய இடபம் உணர்த்தப்பட்டது. சடை – சடையையுடைய ஈசனைத் தெய்வமாகவுடைய திருவாதிரை: அதனால் அதனையுடைய மிதுனம் உணர்த்தப்பட்டது. வேழம் – வேழத்திற்கு யோனியாகிய பரணி: அதனால் அதனை உடைய மேடம் உணர்த்தப்பட்டது.
இவை முதலாக இவற்றின் கீழிருந்தலாவது இவற்றது பெயரான் இடபவீதி, மிதுனவீதி, மேடவீதியென வகுக்கப்பட்டு அம்மூவகை வீதியுள்ளும் அடங்குதல். அவற்றுள் இடபவீதி: கன்னி துலாம் மீனம் மேடமென்பன; மிதுன வீதி: தேள் வில்லு மகரம், கும்பமென்பன. மேட வீதி, இடபம், மிதுனம், கற் கடகம், சிங்கம் என்பன. ஓரிராசியாவது இரண்டே கால் நாளாகலின், நந்நான்கிராசியாகிய இவை ஓரொன்று ஒன்பது நாளாயின. கோட்களுக்கு இடனாகலான் இவை பன்னிரண்டும் இருக்கை எனப்பட்டன.
4 – 10 நிறத்தையுடைய வெள்ளி இடபத்தைச் சேரச் செவ்வாய் மேடத்தைச்சேரப் புதன் மிதுனத்தைச்சேரக் கார்த்திகை உச்சமாக விடிதலுண்டாக வியாழம் சனியின் இல்லமிரண்டாகிய மகர, கும்பங்கட்கு உப்பாலை மீனத்தைச்சேர யமனைத் தமையனாக உடைய சனி வில்லுக்குப் பின்னாகிய மகரத்தைச் சேர, இராகு மதியமறையும்படி வருநாளின் கண்…
இதனாற்சொல்லியது ஆவணித் திங்கள் அவிட்ட நாளின் இக்கோட்கள் தமக்குரிய நிலமாகிய இவ்விராசிகளில் நிற்பச் சோமனை அரவு திண்ட என்பதாயிற்று.’
வைகையில் புதுவெள்ள வருகைக்கு ஜாதகம் கணித்திருக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். ஆற்று வெள்ளம் பயனுடையதாக இருக்குமா வேறு விதமாக இருக்குமா என்று தெரிந்துகொள்வது அவசியமல்லவா? பரிபாடலில் அறம், பொருள் நீங்க இன்பமே பொருளாக அமைந்து கடவுள் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்கிறது. கடவுள், காமம் இரண்டுமான இந்தக் கலவைக்குக் கொஞ்சம் சோதிடம் பார்ப்பது நல்லது என்று அந்துவனார் கருதினார் போலும்.
சுந்தரமூர்த்தி நாயனாரும் அந்துவனாரும் சோதிடத்தை, வானிலை சாத்திரத்தை ஆதங்கமான விஷயங்களோடு தொடர்புபடுத்தியுள்ளனர். ஆனால் சுப்பிரமணிய பாரதியார் வான சாஸ்திரம் சொன்ன விஷயங்களைக் கண்டு வியந்தவர். அவர் ‘சோதிடம்தனை இகழ்’ என்றவர். பிரபஞ்சத்தைப் பற்றிய அவர் விருத்தத்தில் அவரைத் திகைக்கவைத்தது திசைய ஆனால் அச்செய்யுளில் சூரியனிடத்திலிருந்தும் நட்சத்திரத்திடமிருந்தும் நம்மை அடைய ஒளி எடுத்துக்கொள்ளும் காலத்தையும் ஒளியின் வேகத்தையும் குறித்தே பேசுகிறார். இக்கவிதை அவரது இந்தியா இதழில் (3.4.1909) வெளியானது.
ஒரு நொடிப் பொழுதில் ஓர்பத்
தொன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய தம்ம.
கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவும் ஈங்கே.

உண்டொரு வான்மீன் அஃதை
யூணர்கள் ஸிரியஸ் என்ப.
கண்ட அம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத்து எய்த மூவாண்டு
ஆமென மதிப்பராயின்
எண் தரற்கு எளிதோ அம்மீன்
எத்தனை தொலையதென்றோ!

கேட்டிரோ நரர்காள் வானிற்
கிடக்கம் எண்ணரிய மீனிற்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்கு அணித்தாம் என்பர்.
மீட்டுமோர் ஆண்டு மூவா
யிரத்தினில் விரைந்தோர் மினின்
ஓட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடும் தகைத்து முண்டே.

பாரதியார் தரும் செய்திகளைக் கேட்டு நாமும் ‘கருதவும் அரிய தம்ம’ என்று சொல்ல விரும்பினாலும் நம்மை அவர் ‘நரர்காள்’ என்று அழைக்கும்போது ‘ஓய், ஓய்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ என்ற நெடுங்கவிதை வான நூல் அறிவை வெளிப்படுத்துகிறது. என்றோ நமது புராணங்களில் படித்த ஒரு கதை இதற்கு ஆதாரம். கருவை மட்டும் எடுத்துக்கொண்டேன் என்ற பீடிகையோடு தொடங்குகிறது இந்நெடுங்கவிதை.
பண்டைப் பழங் குயவன்
….. ….. …..
….. ….. …..
ஏமாற்றும் காற்றை
உட் கொண்ட பாண்டங்கள்
ஒலிக்காத பேச்சில்
வினவுவதை உணர்ந்தான்
….. ….. …..
….. ….. …..
சட்டிப் பானைக்
கடைக் காரனாநீ
மரமும் அறியாத
மலட்டுக் கலைஞனா?
வனப்புக் கடலறியா
வாவித் தவளையா?

பழங்குயவன் வேலை செய்துகொண்டிருந்தபோது அவனிடத்திலிருந்த இடே நேரத்திரையில் பல வினோதமான காட்சிகளைப் பார்க்கிறான். அவரிடத்தில் பானைகள் பேச் தொடங்கிவிட்டன. இதற்கு ஏமாற்றும் காற்று, தூண்டுதலாய் உள்ளது. குயவன் மூர்ச்சித்துவிட்டான். குமர புரத்திலிருந்து வீசிய மூலிகைக் காற்று முகத்தில் பட்டதும் விழியைத் திறக்கிறான். இந்தக் குமர புரத்தில் வாழ்ந்த தச்சனை வருணிக்கிறார் ந.பி.மூ. சுவடில்லாத பாதையில் வழிகாட்ட ஒரு (மந்திர) கைக்கோலைச் செய்யக் காட்டிற்குப் போகிறான். காட்டில் அதற்கேற்ற மரத்தைத் தேடுகிறான். அவன் இருப்பிடத்துக்கு அருகில் இந்த மரம் முளைத்திருக்கவில்லை. காட்டில் பல மரங்கள் அவனைத் தன்னைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அழைக்கின்றன. தச்சன் எதையும் எடுக்காமல் ஒவ்வொன்றின் இயல்பை ஆராய்கிறான். தச்சன் நல்லதைப் பொறுக்கப் பிடித்த நாளைக் கணக்கிட்டால் பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது. இங்கே ந.பி.மூ. கோள்களின் சலனப் படத்தை அறிமுகப்படுத்துகிறார்.
நண்டு நடமாடும் கடகத்தில் இருந்த ரவி
இன்றோ
முதலைக் கரவிருக்கும்
மகரத்தில் தென்பட்டான்

கடகத்தில் இருந்த சூரியன் (ரவி – ந.பி.மூ. சூரியனை ‘ரவி’ என்றே பிற இடங்களிலும் குறிப்பிடுகிறார்) மகரத்துக்கு வந்துவிட்டான் என்கிறார். இது காலக் கழிவை மட்டும் காட்டாமல் அந்தத் தச்சனின் அகவாழ்வின் சலனங்களையும் காட்டப் பயன்படுவது போல் தெரிகிறது. வானத்தில் ஒரு ஜன்னலை வசதியாக அமைத்துக்கொண்டு தச்சனைக் கவனித்துவந்த குயவன்
கண்டறியும் கிண்டலுடன்
காட்டுக்கு வந்தான்

இங்கே ந.பி.மூ. கோள்களின் நிலை பற்றிக் குறிப்பிடுகிறார்.
காட்டுக்கு வந்த அன்று
சிம்மத்தில் இருந்த குரு
இன்றும் இருக்கின்றான்
ஈராறு வருடம்
இன்றோடு ஓடியும்…

கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்துக்கொண்டும் வேறு சில செய்திகளைக் (உ.ம்) (மெய்ப்பொருளின் கதவிடுக்கா…) கொண்டு வந்தும் ந.பி.மூ. வாசகனுக்குப் பேருணர்வு ஒன்றைத் தர முயன்றுள்ளார்.
காண்டஹார் மன்னர் பரம்பரை
இலை உதிர் காலத்து
வாதா மரம் போல
இலை இலையாய் உதிர்ந்து
மொட்டைப்பேய் மரமாகி
காலக் கொடூரத்தின்
கண்ணாடி ஆயிற்று.

பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது.
அவன்
தச்சனா தச்சனா
தச்சன் தானா?

இக்கவிதை 1963ல் வெளியாயிற்று. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் தலைசிறந்தனவற்றில் இதுவும் ஒன்று. இதில் ந.பி.மூ. தந்திருக்கும் கிரக சஞ்சார பலனை அத்துறை அறிந்தவர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும். யாராவது செய்வார்களா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன