அழகியசிங்கர்
நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன். சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன். கீழ் படியைத் தாண்டிவிட்டேன் என்று நினைத்து காலை வைத்தேன். தடாரென்று கீழே விழுந்தேன். முட்டியில் சிராய்ப்பு. ஒரு நிமிடம் விழுந்த வாக்கில் இருந்தேன். அபபோதுதான் ஏன் இப்படி மறந்து போய் காலை வைத்தேன் என்று யோசிக்க ஆரமபித்தேன்.
மறதி மன்னன் என்று யாருக்காவது பட்டம் கொடுக்க நினைத்தால் எனக்குக் கொடுக்கலாம். அவ்வளவு மறதிக்காரன். காலம் காலமாக இந்த மறதியுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில் டௌட் வெங்கட்ராமன் என்ற ஒருவர் உண்டு. பலரும் அவரை டௌட் வெங்கட்ராமன் என்று சொல்லும்போது ஏன் அப்படி குறிப்பிடுகிறார்கள் என்று சொன்னவர்களைக் கேட்டேன்.
”அலுவலகக் கதவுகளை எல்லாம் பூட்டிவிட்டு வெளியில் வந்து விடுவார். அவருக்கு திடீரென்று சந்தேகம் வந்துவிடும். உடனே கதவு அருகே போய்விட்டு பூட்டை இழுத்துப் பார்ப்பார்,” என்றார்கள்.
மனதிற்குள் நான் சிரித்துக்கொண்டேன். அவருடைய வாரிசு நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லிக்கொண்டேன். நான் எப்படி பள்ளிக்கூடத்தில் கல்லூரிகளில் பாடங்களைப் படித்துப் பாஸ் செய்தேன் என்று யோசிப்பேன். சுத்தமாக என் மனதில் ஒன்று கூட நிற்காது. மூளையில் எதுவும் பளிச்சிடாது. திருப்பூர் கிருஷ்ணன் அன்று நளன் சரிதத்தை இரண்டு மணிநேரம் மேல் பிரசங்கம் செய்துகொண்டே போனார். அங்கங்கே நளன் சரிதப் பாடல்களை மனப்பாடமாக சொல்லிக்கொண்டே போனார். அவர் திறமையைக் கண்டு நான் வியந்தேன். என்னால் அதுமாதிரி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் என்னால் பார்த்து எழுதிதான் படிக்க முடியும்.
பல விஷயங்களை நான் இப்படித்தான் மறந்திருக்கிறேன். இளமை காலததில் நடநத நிகழ்ச்சியை வீட்டில் யாராவது ஞாபகப்படுத்தினால் என்னால் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கே சொன்னவர மீது ஆச்சரியமாக இருக்கும். அலுவலகததில் பணிபுரிநதாலும அலுவலகப் போன் எண் ஞாபகத்திற்கு வராது. ஆனால் இலக்கிய நண்பர் கட்டுரையில் எழுதியதைப போல கல்யாண தேதி ஞாபகத்திலிருந்து மறந்து விடாது. எந்த இடத்தில் திருமணம் நடந்தது என்று கூட சொல்ல முடியும். என் பெண் எப்போது பிறந்தாள், பையன் எப்போது பிறந்தான் என்பதையெல்லாம சொல்ல முடியும். சமீபத்தில் பிறந்த பேத்தியின் தேதியை எளிதாக ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். ஏன் எனில் இந்த ஆண்டு முதல்தேதிதான் பிறந்திருக்கிறாள்.
ஒருமுறை வல்லிக்கண்ணன் நான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார். மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை தமிழ் நாவல்களைப் பற்றி முன் கதைச் சுருக்கம் மாதிரி சொல்லிக்கொண்டே போனார். நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன். பல ஆண்டுகளாக அவர் படித்தப் புத்தகங்ளை அப்படி சொல்லிக்கொண்டே போனார். ஆனால் என்னால் அதுமாதிரி முடியாது. நான் ஒரு புத்தகத்தைப் படித்தால்அதைப் பற்றி உடனடியாக எழுதி விட வேண்டும். எப்போதாவது அந்தக் குறிப்புகள் திரும்பவும் படிக்கும் போது நான் என்ன படித்தேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யமுடியும். ஒரு முறை உ வே சாமிநாதய்யர் எழுதிய என் சரிதம் புத்தகத்தைப் படித்துக்கொண்டே வந்தேன். அதை ஒரே நாளில் படிக்கவில்லை. சிறிது சிறிதாக பலநாட்களாகப் படித்துக்கொண்டு வந்தேன். என் கூட முன்பு வாக் பண்ண வந்த நண்பர் ஒருவர் அந்தப் புத்தகத்திலிருந்து எதாவது ஒரு கேள்வி கேட்பார். நான் படித்தப் பக்கங்களில்தான் அந்த கேள்வி இருக்கும். எனக்கு ஞாபகத்தில் இருக்காது. அவர் கிண்டல் செய்வார். அதனால்தான் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் படிக்கும்போது நான் இன்னும் ஒருமுறை புரட்டிக் கொண்டு படிக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்து அசோகமித்திரன் நன்றாக ஞாபகம் வைத்துக் கொணடிருபபார். ஜெயமோகனைப் பற்றி ஒரு நண்பர் சொன்னார். அவர் எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வார் என்று. ஒருவரைப் பார்த்தார் என்றால் அவர் பார்த்த சமயத்தில் என்ன பேசினார் என்பதை ஞாபகத்திலிருந்து சொல்வார் என்று. ஜெயமோகனைப் பார்த்தால் அது உண்மையா என்று கேட்கவேண்டும்.
நான் எத்தனையோ கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். கூட்டத்தின் சாரம்சத்தை உடனே பதிவு செய்யவில்லை என்றால், கூட்டம் என்னை விட்டுப் போய்விடும். காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற நண்பர் இருந்தார். அவர் பல இலக்கியக் கூட்டங்களை நடத்தினார். கூட்டம் நடந்து முடிந்தவுடன் அந்தக் கூட்டத்தில் யார் யார் என்ன பேசினார் என்பதை மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்டவர் பேசியதையும் ஒப்பிப்பார்.
இன்னொரு நண்பர் இருக்கிறார் அவர் ஒரு சிறுகதை படித்தாலும், ஒரு கவிதை படித்தாலும் அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். அவரை நன்கு தெரிந்த என் உறவினர் என்னிடம் சொல்வார்: üஅவருக்கு காமெரா ப்ரெயின்,ý என்று. சுவாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு கதை உண்டு. அது உண்மையா பொய்யா என்பது தெரியாது. ஒரு புத்தகத்தை விவேகானந்தர் புரட்டிப் பார்ப்பாராம். பின் அப்படியே அந்தப் புத்தகத்திலிருந்து எந்தப் பகுதியில் எது கேட்டாலும் பதில் சொல்வாராம். எப்படி?
நான் 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன். இரண்டு புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் பேப்பரில் எழுதிக்கொண்டிருக்கும்போது என் கவிதை எனக்குத் தெரியும். பின் மனப்பாடமாக அந்தக் கவிதை எனக்கு வராது. மேலும் இன்னும் ஒரு முறை அந்தக் கவிதையைத் திருப்பி எழுதினால் வேறு வேறு வரிகள் வந்து விழும். அல்லது எழுத முடியாமல் போய்விடும். என் கவிதையைப் படித்த யாராவது ஒருவர் (அப்படி யாரும் படித்து விட மாட்டார்கள் என்பதில் நிச்சயம் நம்பிக்கை உண்டு) என் கவிதையைத் திருப்பி சொன்னால் எனக்கே என்னை நம்ப முடியாமல் இருக்கும்.
இருந்தாலும் ஞாபக மறதியைப் பற்றி எளிதாக ஞாபகம் வைத்துக் கொள்ளும்படி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
இன்றுவரை
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
ஏதோ ஒன்று
சொல்லாமலே………
இந்தக் கவிதையில் ஒரு குடும்ப ரகசியத்தை யாரோ ஒருவர் யாருக்கோ சொல்கிறார். சொன்னவர் ரகசியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று எச்சரித்துச் சொல்கிறார். கேட்டவர் சரி சரி என்கிறார். பின் பல ஆண்டுகள் கழித்து யோசிக்கும்போது ரகசியத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னதுதான் கேடட்டவருக்கு ஞாபகத்தில் இருக்கிறது. ரகசியம் ஞாபகத்தில் இல்லை.
ஆனால் எனக்கு சில விஷயங்களை மறப்பதில்லை. ஆர்யா கவுடர் ரோடில் பிள்ளையார் கோயில் பக்கத்தில் ஒரு பேப்பர் கடை இருக்கும், அந்தக் கடையில் எல்லாப் பத்திரிகைகளும் கிடைக்கும். குமுதம், ஆனந்தவிகடன் மாத்திரமில்லை. கணையாழி, காட்சிப்பிழை, காலச்சுவடு, உயிர்மை போன்ற பத்திரிகைகளும் இருக்கும். அங்கே என் விருட்சம் இதழ்களும் இருக்கட்டும் என்று சில பிரதிகள் விற்பதற்குக் கொடுத்தேன்.
மேலும் நான் வெளியிட்ட புத்தகங்களையும் ஒரு பிரதி விதம் விற்கக் கொடுத்தேன். ஏன்என்றால் கிழக்குப் பதிப்பகப் புத்தகங்கள் அங்கே கண்களில் பளிச்சிட்டன. ஆனால் என் விருட்சம் பத்திரிகை மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் என்று பெயர், 4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 5 மாதங்களுக்கு ஒரு முறை சிலசமயம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என்றெல்லாம் வரத் தொடங்கி விடும். இப்போது 99வது இதழ் வர வேண்டும்.
அந்தக்கடைக்காரரைப் பார்த்து அடுத்த இதழ் கொண்டு வரும்போது கடையில் கொடுக்கும்போது, கண்ணிலே படாத அந்தக் கடை உரிமையாளரை தப்பித் தவறி பார்த்தால் எவ்வளவு கேவலமாகப் பார்ப்பான் என்று யாராலும் வர்ணித்து விட முடியாது. அவன் முகத்தில் நான் விற்ற என் விருட்சம் இதழிற்கு பணம் கேட்பேன் என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கும். அவன் கடையில் நிறையா பூனைகள் இருக்கும். பூனைகளைக் கொஞ்சிக்கொண்டே இருப்பான். ஆனால் நிமிர்ந்து என்னிடம் எதுவும் பேச மாட்டான். ‘பிறகு கணக்குப் பார்த்து தருகிறேன்.. உங்கள் பத்திரிகையைத் தேட வேண்டும்.’ என்று சொல்வதற்குள் அவன் அப்படி பிகு பண்ணிக்கொள்வான். அதை நம்பி நீங்கள் போய்விடுவீர்கள். பின் அவனிடமிருந்து நீங்கள் பணமே வாங்க முடியாது. சரி அந்தத் தொகை பெரியா தொகையா. ரூ30 கூட கிடையாது. புத்தகங்களைச் சேர்த்தால் இன்னும் நூறோ இருநூறோ தேறும். அவனைப் பார்ப்பதே கஷ்டம். நான் வரும்போது அவன் கடையில் பணிபுரியும் பணியாளர்கள்தான் இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் அவரிடம் கேளுங்கள் என்பார்கள். அவரிடம்தான் கேட்கவும் முடியவில்லை, பார்க்கவும் முடியவில்லையே என்றால் எனக்குத் தெரியாது என்று அழகான பதிலை சொல்லி விடுவார்கள்.
ஒருமுறை அந்தப் பணியாளரிடம் நான் சண்டையே போட்டேன். பெரிய சீன் ஆகிவிட்டது. அங்கு பத்திரிகை வாங்க வந்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அங்கிருந்து வந்தபிறகுதான் யோசனை செய்தேன். ஏன் இதுமாதிரி செய்தோம் என்று. மனமே அமைதியாய் இரு என்று சொல்லிக் கொண்டேன். பின் அந்தக் கடைக்கே போகவில்லை. அந்தக் கடையில் புத்தகப் பரிவர்த்தனை செய்யவில்லை.
ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அந்தக் கடையைத் தாண்டும்போது எரிச்சலுடன் போவேன். ஆனால் அந்த எரிச்சலும் என்னை விட்டுப் போக ஞாபகமறதிதான் உதவ வேண்டும்.