துரத்தும் கட்அவுட்டுகள்…

அழகியசிங்கர் 


இன்று தை வெள்ளிக்கிழமை.  மனைவி காலையில் வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள்.  ஏன் நேற்றே சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டேன்.  பூஜை செய்வதற்கு வெற்றிலை வேண்டுமென்ற எண்ணம் காலையில்தான் அவளிடம் உதித்தது.  எங்கள் தெரு முனையில் உள்ள கடையில் வெற்றிலை கிடைத்துவிடும். சட்டையை மாட்டிக்கொண்டு செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.  நான் போட்டிருக்கும் செருப்பை கொண்டு ரொம்ப தூரம் நடப்பது எனக்கு சிரமமாக இருக்கும்.  எப்படியோ  முனைக் கடைக்குச் சென்றேன்.  வெற்றிலை என்று கேட்டேன்.  கடைக்காரர் இல்லை என்று கை விரித்துவிட்டார்.  பின் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன்.  இந்தத் தெருவில் முனையில் ஒரு கடை இருக்கிறது.  அங்கே போங்கள் என்றார்.  நானும் வேண்டா வெறுப்பாக நடந்தேன்.
அதிசயமாய் மழை தூற ஆரம்பித்தது.  ஐய்யயோ என்று மனம்பதைத்தது.  இந்த வெள்ளம் வந்த நாளிலிருந்து துணி காயப் போடுவதபோல் மாடியில் புத்தகக் கட்டை காயப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதில் என் கவிதைப் புததகக் கட்டு, வினோதமான பறவை என்ற பெயர்.  அதெல்லாம் வெள்ளத்தில் நனைந்து விட்டது.  வேற வழியில்லை, உடனே வெற்றிலைப் பாக்கு வாங்கிக்கொண்டு ஓட்டமாய் ஓடி மாடியில் காய வைத்திருக்கும் புத்தகங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.  அந்த முனைக் கடையிலும் வெற்றிலை இல்லை என்று பதில் கிடைத்தது.
இப்போது எனக்கு திகைப்பு.  என்ன செய்வது என்று.  ஒரே வழி. எதிரில் உள்ள கோடம்பாக்கம் ரோடில் உள்ள மார்க்கெட்டில் நிச்சயம் வெற்றிலை கிடைக்கும்.  ஆனால் நடக்க வேண்டும்.  எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமென்று தெரியவில்லை.  தூறல் பெய்து கொண்டிருந்தது.  ஒரு பிளாட்பாரத்திலிருந்து குறுக்கே போக நினைத்தேன்.  போக முடியவில்லை. 
காரணம்.  பல கட்டைகள் போவதற்குத் தடையாக இருந்தன.  என்ன காரணமாக இருக்குமென்று மெயின் ரோடிலிருந்து அண்ணாந்து பார்த்தேன்.  பெரிய கட் அவுட்.  
இனி அவ்வளவுதான் கட் அவுட் முகத்தில்தான் முழிக்க வேண்டும். தேர்தல் நெருங்குகிறது என்று தோன்றியது.  பொதுவாக நான் கட் அவுட்டை மதிப்பதில்லை.  கட் அவுட்டின் உருவத்தையும், அதில் தென்படும் வாசகங்களையும் நான் பார்ப்பதில்லை.  ஆனால் சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர்களைப் படிப்பேன்.  பெரும்பாலான போஸ்டர்களில் அமரர் ஆனவர்களின் படங்களுடன் துக்கத்தைத் தெரிவித்திருப்பார்கள். 
இப்போதெல்லாம் கட்அவுட் கல்யாண மண்டப வாசல்களில் கூட வைத்து விடுகிறார்கள்.  மணமகன், மணமகள் ஒன்றாக இணைந்து நின்று போஸ் கொடுத்திருப்பார்கள்.  மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன் அந்த மண்டபத்திற்குத்தான் சரியாக வந்திருக்கிறோம் என்று தோன்றும். 
 மணமகனும் மணமகளும் அந்த கட்அவுட்டில்தான் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.  அதன் பின் அவர்களிடம் அதுமாதிரியான சிரிப்பு தென்படாது என்று எனக்குத் தோன்றும்.
அதன் பின் புத்தகக் காட்சியில்.  எழுத்தாளர்களின் எத்தனை கட்அவுட்கள். புத்தகங்களுடன் அவர்கள் இருப்பதுபோல்.  நான் அதுமாதிரி கட்அவுட்டுகளைப் பார்க்கும்போது தாண்டி ஓடி வந்துவிடுவேன்.  எப்படியும் அந்த எழுத்தாளர்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது என் கடையில் சிலசமயம் நின்று கொண்டிருப்பார்கள். 
ஆனால் அரசியல் கட்சிகள் வைக்கும் கட்அவுட்டுகளை யாரும் மிஞ்ச முடியாது.  14ஆம் தேதி அப்படித்தான் மியூசிக் அக்கதெமி வழியாக வண்டியில் போய்க் கொண்டிருந்தேன்.  ஒரு கட் அவுட்.  துக்ளக் கூட்டம் அன்று மாலை நடைபெறுவதாக.  பெரிய விளம்பரம் இல்லாமல் கூட்டம் நடத்தும் இடத்தில் மட்டும் வைக்கப்பட்டிருந்தது.  எனக்கு ஆச்சரியம்.  சோ பேசப் போவதாக அறிவிப்பு.  நான் அந்தக் கூட்டத்திற்குப் போக வேண்டுமென்று தீர்மானித்தேன். முன்பெல்லாம் சோ கூட்டத்திற்குப் போயிருக்கிறேன்.  ஹால் நிரம்பி வழியும்.  ஒரே சிரிப்பலைகள் கேட்ட வண்ணம் இருக்கும்.  சில ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அந்தக் கூட்டத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது.  மேலும் நான் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன். எனக்கு எந்தக் கூட்டமும் போக முடியாது.  ரிட்டையர்டு ஆன பிறகு கூட்டம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது.  சினிமாவுக்குப் போவது, கூட்டத்திற்குப் போவது, நண்பர்களைப் பார்ப்பது என்று பொழுது போக ஆரம்பித்துள்ளது.  முன்பெல்லாம் ஆபிஸில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஒரு கூட்டம் போய்விட்டு வந்தவுடன், அடுத்தநாள் அபீஸ் போகவேண்டுமென்றால் ஒரு திகில் உணர்ச்சி கூடி விடும்.  ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. கூட்டமும் ஜாலியாக இருக்கிறது.  அங்கு பேசுவதைக் கேட்பதும் ஜாலியாக இருக்கிறது.  கொஞ்சம் லேட்டாக வீட்டிற்கு வந்தாலும், அடுத்தநாள்தான் இருக்கிறதே ரெஸ்ட் எடுத்துக்க, என்ன வெட்டிக் கிழிக்கப் போகிறோம் என்று தோன்றும். வாழ்க ரிட்டையர்டு வாழ்க்கை. 
14ஆம் தேதி அப்படித்தான்.  ஒரே கூட்டம்.  வெளியே பெரிய டீவி வைத்திருந்தார்கள். அங்கே பலர் கூடியிருந்தார்கள்.  ஆனால் நான் உள்ளே சென்று ஹாலில் உள்ள மாடிப்படிக்கட்டில் போய் உட்கார்ந்தேன். பல அரசியல் தலைவர்கள் பேசினார்கள்.  திமுக சார்பிலும், இடது சாரி சார்பிலும், மதிமுக சார்பிலும் யாரும் வரவில்லை.  வழக்கத்திற்கு மாறாக சோ அமர்ந்து பேசினார்.  எப்போதும் அவர் பேசும்போது நின்றுகொண்டே பேசுவார். எல்லா அரசியல் தலைவர்களும் சாமர்த்தியமாகப் பேசினார்கள். இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதில் பெரிய குழப்பம் வாக்களர்களுக்கு இருக்கத்தான் இருக்கப்போகிறது. கவர்னர் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
அடுத்தநாள் ராயப்பேட்டை ஹை ரோடில் வந்து கொண்டிருந்தபோது பெரிய பெரிய கட்அவுட்டுகள்.  சிரித்த முகத்துடன் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.  நான் வண்டியை வேகமாக ஓட்ட ஓட்ட கட் அவுட்டுகள் என்னைத் துரத்துவதுபோல் தோன்றியது.   வேண்டாம் வேண்டாம் நான் இதுமாதிரி தப்பு செய்ய மாட்டேன்.  இந்தப் பக்கமே வர மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஓடினேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன