அழகியசிங்கர்
சங்கவை என்ற பெயரில் இ ஜோ ஜெயசாந்தி எழுதிய 927 பக்கங்கள் கொண்ட மெகா நாவலை எல்லோரும் படிக்க வேண்டும். ஒரு பெண் எழுத்தாளர் இத்தனைப் பக்கங்கள் ஒரு நாவலை எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றைய தமிழ் சூழ்நிலை மெகா நாவல் சூழ்நிலை. ஆனால் யார் இத்தனைப் பக்கங்களைப் படிப்பது என்ற கவலையும் பலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. எழுதுபவர்களுக்கு அதுமாதிரி கவலை இருப்பதாக தெரியவில்லை. இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சமீத்தில் பெண் எழுத்தாளர்கள் யாரும் அவ்வளவாக நாவல் எழுதுவதாக தோன்றவில்லை. கவிதைகள் அதிகமாக எழுதி புத்தகமாக வருகிறது. அல்லது சிறுகதைத் தொகுதி வெளிவருகிறது. மெகா நாவல் மாதிரி யாரும் முயற்சி செய்வதில்லை.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தில் நான் 30 பக்கங்கள் படிப்பேன் என்று வைத்துக்கொண்டால் 900 பக்கங்கள் படிக்க 30 நாட்கள் ஆகும். இதில் என்ன பிரச்சினை என்றால் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது கதா பாத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
சங்கவை நாவலைப் படிக்கும்போது அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. படித்து முடித்தப்பின் நான் திரும்பவும் எதாவது ஒரு பக்கத்திலிருந்து அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குவேன். இப்படி பலமுறை படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதவேண்டுமென்ற எண்ணம்தான் முக்கிய காரணம். இந்த நாவல் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்த விரசமுமில்லாமல் ஜெயசாந்தி கொண்டு போகிறார். அலுக்காத சரளமான நடையை கையாள்கிறார். இன்றைய நவீன நாவலில்ன தன்மையில் நாவல் முழுவதும் எதோ ஒரு இடத்தில் சிறுகதையைக் கொண்டு எழுதுவார்கள், ஒரு இடத்தில் கட்டுரைத் தன்மையைக் கொண்டு வருவார்கள், சிலர் கவிதைவரிகளை நாவலில் அங்கங்கே தெளிப்பார்கள். ஜெயசாந்தி கதைத் தன்மையையும். கவிதைத் தன்மையையும் நாவலில் கொண்டு வருகிறார்.
சமீபத்தில் நான் படிக்கும் புத்தகங்களை விமர்சனமாக எழுத முயற்சி செய்கிறேன். இப்படி எழுதுவதால் எந்த அளவிற்கு இதில் வெற்றி பெறுகிறேன் என்பது தெரியவில்லை.
ஜெயசாந்தியின் இந்த நாவல் மூன்று கல்லூரி மாணவிகளை சுற்றி வரும் நாவல். ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்து நட்புடன் பழகும் மூன்று பெண்களைப் பற்றிய நாவல் இது. இன்றைய காலத்தில் இப்படி விகற்பமில்லாமல் நட்புடன் பழகக் கூடியவர்கள் இருப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த மூன்று பேர்களில் ஒருவர் பெயர் சங்கவை, இன்னொருவர் பெயர் ஈஸ்வரி, மூன்றாமவள் பெயர் தமிழ்ச்செல்வி. இந்த மூன்று பேர்களைப் பற்றியும் அவர்களைச் சுற்றியுள்ள நட்பு வட்டம், உறவினர் வட்டம் குறித்துதான் இந்த மெகா நாவல்.
ஒரு விதத்தில் இந்த நாவல் ஈடெறாத ஆசையைக் குறிவைத்து எழுதப்படுகிறதா என்று தோன்றுகிறது. இந்த மூன்று பெண்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. அதில் அவர்கள் ஆழ்ந்து அதைப் பற்றிய கவலைகளுக்கும், கலக்கத்திற்கும் ஆளாகிறார்கள்.
எல்லோரும் சங்கவி என்ற பெண்ணிடம் ரொம்ப அன்பு பாராட்டுகிறார்கள். யாரைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது என்று பார்த்தால், சங்கவி என்ற பெண்ணைச் சுற்றித்தான் நடக்கிறதா என்றால் இல்லை. இது எல்லாவற்றைப் பற்றியும் சொல்கிறது.
ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினையைப் பற்றி பேசுகிறது. ஆனால் மூன்று பேர்களாலும் அவர்கள் எதிர்த்து நடக்கும் சம்பவங்களை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. எதைக் குறித்தும் எதுவும் செய்ய முடியவில்லை. ஈஸ்வரியால் அவள் அக்கா கலைவாணியைக் காப்பாற்ற முடியவில்லை. இந் நாவலில் தினமும் கேள்விப்படும் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா அக்கிரமங்களும் வெளிப்படுகின்றன. கல்வி நிலையங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை பாலியல் பிரச்சினை. இப்படி பாலியல் பிரச்சினையில் உள்ளாகும் பெண்கள் அதை எதிர்த்து வெற்றி பெற முடியாத அவல நிலையை இந் நாவல் வெளிப்படுத்துகிறது. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு தமிழ் பேராசிரியை தன் உள்ளக் குமறல்களை டைரியில் எழுதி வைக்கிறாள். ஈஸ்வரியின் சகோதரி கலைவாணியோ தான் படிக்கும் படிப்புக்கு டாக்டர் பட்டம் வாங்க தனக்கு மேலே உள்ள பேராசிரியரின் பாலியல தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். தன் துன்பத்தை ஏன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.
அதேபோல் மணல் கொள்ளையைத் தடுக்க ஒரு கிராமம் நினைக்கிறது. ஆற்று மணலிலிருந்து இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் எடுத்துப் போகும் மணலை தடுக்க கண் விழித்து காவல் காக்கிறார்கள் மூன்று பேர்கள். அவர்களுக்குத் தெரியாமல் அதில் கலந்துகொண்ட பூத்துரை தமிழ்ச்செல்வியின் கிராமத்தில் உள்ள ராஜகனியின் கணவன் மணல் லாரியில் அடிப்பட்டு சாகிறான். மணல் கொள்ளையைத் தடுக்க ஒரு உயிரைப் பலிகொடுக்கும் இயலாமையை இந்த நாவல் விவரித்துச் செல்கிறது.
எபி என்கிற கிருத்துவப் பையனைக் காதலிக்கிறாள் தமிழ்ச்செல்வி. ஒவ்வொரு நேரத்திலும் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள். எபியின் பெற்றோர்கள் ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறார்கள். அந்தப் பெண் முழுக்க ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டு கர்த்தருக்குள்ளே வரவேண்டும் என்கிறார்கள். தமிழ்ச்செல்வி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த பெண். இந்த மதமாற்றத்திற்கு அவள் தயங்குகிறாள். ஏன் தயங்குகிறாள் என்பது தெரியவில்லை. தனக்குப் பிடித்தப் பையனுடன் வாழ ஏன் விரும்பவில்லை. மதம் ஏன் இதற்கு தடையாக உள்ளது என்பது புரியவில்லை. அவள் மீது விருப்பப் பட்டாலும் எபியும் வேற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் நிர்பபந்தத்திற்கு ஆளாகிறான். எபியின் இந்த முடிவை சங்கவை ஏற்றுக்கொள்ளவில்லை. சங்கவி என்ற கதாபாத்திரத்தை தனக்குச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்பால் அவதிப் படுபவள் போல் இந்த நாவலில் ஜெயசாந்தி வெளிப்படுத்துவது போல் காட்டுகிறார்.
இந்த எதிர்பாராத திருப்பம் நாவலை முடிவு நிலைக்கு கொண்டு போகிறது. இந்த நாவலின் புரியாத புதிர் சங்கவி. வெள்ளப் பெருக்கில் ஒரு குழந்தையைக் காப்பாற்றப் போகும்போது தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறாள். அவளை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
நிமலோ என்ற பிரஞ்சுக்காரர் உலகம் முழுவதும் ஏதோ ஆன்மிகத் தேடலுக்காக சுற்றுபவர். சங்கவி நினைவிலேயே தன்னைக் கரைத்துக் கொண்டவர். உண்மையில் சங்கவி மீது காதல் வயப்பட்ட அவர் அவளைத் திருமணம் செய்துகொள்ளக் கூட நினைக்கிறார். ஆனால் அவள் அதை மறுத்து விடுகிறாள். வழக்கம்போல் நிராசை. திருநெல்வேலிக்கு அவர் திரும்பவும் வரும்போது, அவர் சங்கவி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விபரத்தை அவளுடைய சகோதரன் ஆனந்த் மூலம் அறிந்து பெரிதும் கலக்கம் அடைகிறார்.
இறுதியில் காவி உடையில் தலையை முக்காடிட்டு சங்கவி புத்தத் துறவியாக கியோட்டாவில் தெரிகிறாள் என்பதாக கதை எதிர் பாராமல் கதை முடிகிறது.
இப்படிப்பட்ட முடிவுடன் ஏன் இந்த நாவலை ஜெயசாந்தி முடித்தார் என்று எனக்குப் புரியவில்லை.
இந்த நாவல் முழுவதும் ஆண் பெண் உறவு நிலையை சுமுகமாக தீர்க்க இந் நாவலாசிரியை விரும்பவில்லை.
27.12.2015 அன்று கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் விருதை ஜெயசாந்தி அவர்கள் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அந்த வைபவத்திற்கு நானும் சென்றேன். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் இந்த நாவலை சிலாகித்துப் பேசும்போது ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொன்னார். இந்த நாவலை எழுத ஜெயசாந்திக்கு துணிச்சல் வேண்டுமென்று. கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துப் போராடும் துணிச்சல் தனக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்தார். இன்னொன்றும் சொன்னார் கல்லுரி மாணவிகள் ஒவ்வொருவரும் இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று.
நானும் ஒப்புக்கொள்கிறேன்.
சங்கவை – நாவல் – இ ஜோ ஜெயசாந்தி – 927 பக்கங்கள் – விலை ரு. 820 – வெளியீடு : விருட்சம், சீத்தாலட்சுமி அடுக்ககம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33 – தெ.பே : 9444113205