ராமலக்ஷ்மி
காட்டுத் தீக்கு ஒப்பாக
இரத்தச் சிகப்பு இலைகளோடு
கனன்றிருந்த விருட்சத்தின் இலைகள்
பழுப்புக்கு மாறத் தொடங்கியிருந்தன
இளவேனிற்கால முடிவில்.
ஒவ்வொன்றாய் உதிர்ந்து
ஒற்றை இலையோடு
ஓரிருநாள் காட்சியளித்த விருட்சத்தின்
கடைசி இலையும்
விடை பெற்றுப் பறக்கலாயிற்று.
கண்களுக்குப் புலப்படாத வளியில்
சுழன்று சுழன்று பயணித்து
குவிந்து கிடந்த மற்ற இலைகளின் மேல்
வீழ்ந்த இலையின்
காற்றுக்கெதிரான கடைசிப் போராட்டத்தை
கண்டு பாராட்ட எவருமில்லை.
விருட்சத்தோடு
அதிகம் தாக்குப் பிடித்த முயற்சியை
கவனிக்க நேரமுமில்லை.
நேரே உதிர்ந்து உலர்ந்தவற்றுக்கும்
அதற்குமான வித்தியாசத்தை
உலகம் உணர வாய்ப்புகளற்று
இலைகளோடு இலையாக
வாடிச் சருகான அதன் மேல்
ஊர்ந்து கொண்டிருந்தது
மண் புழு.