தண்ணீர் பக்கமா கண்ணீர் பக்கமா……….

அழகியசிங்கர்
சமீபத்தில் நான் கொண்டு வந்த புத்தகம் பெயர் நேர்பக்கம்.  இப்புத்தகம் ஒரு கட்டரைத் தொகுதி.  பல எழுத்தாளர்களைப் பற்றி படைப்புகளைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுதி இது.  
ஒரு காலத்தில் 1000 பிரதிகள் அச்சடித்த நிலை மாறி 300 பிரதிகள் அச்சடிக்கும் காலமாக இன்று மாறி விட்டது.  நான் 376 பிரதிகள் மட்டும் அச்சடித்துள்ளேன்.  என் பிறந்த தினமான டிசம்பர் ஒன்றில் எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்து விட்டேன்.
ஒரு ஆட்டோவில் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.  என் புத்தகம் மட்டுமல்லாமல், பெருந்தேவியின் தீயுறைத் தூக்கம், நீல பத்மநாபனின் 148 கவிதைகள் தொகுதி, அய்யப்பப் பணிக்கரின் கோத்ர யானம் என்ற புத்தகமும் கொண்டு வந்துள்ளேன்.  என் புத்தகம் தவிர மற்றப் புத்தகங்கள் 100தான் அச்சடித்துள்ளேன்.  கவிதைப் புத்தகம் என்பதால்.  இந்த நான்கு புத்தகங்கள் அடிக்க 25000 ரூபாய் செலவு ஆகிவிட்டது.
என் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் என் புத்தகங்களை வைத்திருந்தேன்.  வேற வழியில்லை.  டிசம்பர் 1ல் நான் என் புத்தகத்தின் சில பிரதிகளை சில நண்பர்களுக்குக் கொடுக்க நினைத்தேன்.  முடியவில்லை.  மழை.  கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகமாகியது.  2ம் தேதி காலையில் தெருவில் மழை நீர்.  எனக்கு ஆச்சரியம்.  மழையா நம்ம தெருவிலா என்று.  
டிஜிட்டல் காமராவை எடுத்துக்கொண்டு தெருவைப் படம் பிடித்தேன்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை நீர் அதிகமாகியது.  இந்தத் தெருவில் என் வீட்டில் எப்படி மழை வரும் என்ற கர்வம் வேறு. தெருவில் உள்ள எல்லோருக்கும் என் வீட்டில் வண்டிகளை வைக்க அனுமதி கேட்டார்கள்.  சரி என்றேன்.  வீட்டின் உள்ளே ஒரே வண்டிகள்.  
மழையே நீ எங்கே என் வீட்டிற்கு வரப்போகிறாய் என்று மழை நீரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  தெருவில் நுழைந்த வெள்ளம் மெதுவாக எங்கள் வீட்டு வாசலில் வந்தது.  எனக்கு சந்தேகம்.  புத்தகம் என்ன ஆகப் போகிறதோ என்று.  உள்ளே திறந்து தரையில் வைத்திருந்த நேர் பக்கம் புத்தகப் பன்டில்களை மெதுவாக எடுத்து அங்கே போட்டிருந்த பெஞ்சில் வைத்தேன்.  பின் சமையல் அறை மேடையில் வைத்தேன்.  அப்படியும் பல புத்தகங்கள் கீழேதான் இருந்தன.  அதன் பின் போன ஆண்டு அதன் முந்தைய ஆண்டு பதிப்பு செய்த புத்தகப் பன்டல்களையும் எடுத்து வைத்தேன்.
ஆனால் பல புத்தகங்களை கீழே வைத்துவிட்டு வந்தேன்.  பின்னாலேயே மழை நீரும் வந்து விட்டது.  உள்ளே சூழந்து கொண்டது.  கொஞ்சம் நேரம் கழித்து நம்ப முடியாமல் மாடியில் இருந்து வேடிக்கைப் பார்த்தேன்.  வெள்ளம் உள்ள புகுந்தது.  மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.  கரண்ட் போய் விட்டது.  வீட்டில் உள்ளே வைத்திருந்த எல்லா டூ வீலர்களும் நாசம்.  மூன்று கார்கள் நாசம்.  என் காரை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்ததால் தப்பித்தது.
வெள்ளம் முழுவதும் போனபிறகு அறைக் கதவைத் திறந்தேன்.  புத்தகங்களையெல்லாம் சிதறி அடித்திருந்தது.  பண்டுல் பண்டுலாக தூக்கிப் பந்துபோல் விசிறி எறிந்திருந்தது வெள்ளம். என் முன்னால் புத்தகமெல்லாம் கண்ணீர் விட்டு அழுதன.நேர் பக்கம் புத்தகம் பல இடங்களில் சிதறி தண்ணீரில் நனைந்து கேவலமாக இருந்தது. ரோஜா நிறச் சட்டை என்ற என் கதைப் புத்தகம் ரோஜா நிறத்தை இழந்திருந்தது.
தவறுதலாக நேர் பக்கம் என்ற புத்தகம் பெயரை மாற்றி வைத்திருக்க வேண்டுமா?  வேண்டுமென்றால் புத்தகம் பெயரை  தண்ணீர் பக்கம் அல்லது கண்ணீர் பக்கம் என்று வைத்திருக்கலாமா?
142 பக்கத்தில் 22 எழுத்தாளர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம்தான் நேர் பக்கம்.  இதை ஒரு விமர்சகரிடம் விமர்சனத்திற்குக் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவர் எப்படி எழுதுவார் என்று பின்வருமாறு கற்பனை செய்து பார்க்கலாம் :
‘அதிகம் பக்கம் போகாமல் சின்ன சின்ன கட்டுரைகளாக 22 எழுத்தாளர்கள் அல்லது புத்தகங்கள் பற்றி எழுதி உள்ளீர்கள்.  யாரையும் நீங்கள் பாராட்டவும் இல்லை.  அதே சமயத்தில் வசைப்பாடவும் செய்யவில்லை.  மனதை பிழிய பிழிய எழுதி உள்ளீர்கள். இப்படி மனதைப் பிழியும்படி எழுதுவது பெரிய விஷயம்.’
இந்த விமர்சனத்தைப் படிக்கும்போது எனக்கு பயங்கர சந்தேகம்.  இந்த விமர்சனம் செய்தவருக்கு நான் பிழிந்த விஷயம் எப்படித் தெரிந்தது என்ற சந்தேகம்தான் அது. ஏன்எனில் வெள்ளப் பெருக்கால் வீட்டில் அடுக்கடுக்காக வைத்திருந்த நேர் பக்கம் புத்தகம் தண்ணீரில் நனைந்து பின் நான் புத்தகத்தை பிழிந்து காயப்போட்ட விஷயம் எப்படி அவருக்குத் தெரிந்தது.  விமர்சனத்தில் அவர் ஏன் பிழிய பிழிய எழுதியிருப்பதாக சொல்கிறார் என்று தோன்றியது.
புத்தகம் நனைந்தாலும் மேலே நான் இருக்கும் இடத்திற்கு புத்தகத்தைக் காய வைக்க எடுத்துச் செல்ல முடியவில்லை.அப்படியும் நான் புத்தகங்களை நான் இருக்கு முதல் அடுக்கத்திற்கு எடுத்து வந்து விட்டேன்.  இதனால் என் வீட்டில் உள்ளவர் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை தற்போது.   ‘மழைக்குடை நாட்கள்’ என்ற ‘கோ கண்ணன்’ எழுதிய கவிதைப் புத்தகம்.  அது இன்னும் அழுகையை நிறுத்தாமல் ஈரம் சொட்ட சொட்ட இருக்கிறது.  இந்தப் புத்தகத்தையும் தெரியாமல் மேலே கொண்டு வந்து விட்டேன். இப் புத்தகத்தைப்  பார்த்து வீட்டில் உள்ளவர், üஇந்தப் புத்தகத்தை எப்போது கொண்டு வந்தீர்கள்?ý என்று பெரிய ரகளை.  இந்த வெள்ளத்தால் நான் தெரியாமல் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாம் தெரிந்து போய் விட்டது.  
இந்த வெள்ளத்தால் புத்தகம் மட்டுமல்ல நானும் சேர்ந்து அவதிப்படுகிறேன்.  புத்தகம் போனதற்காக நிவாரண நிதி வேண்டாம்.  லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும், நான் திரும்பவும் அச்சடித்து  என் செலவை ஈடு கட்டி விடுவேன்.  கிடைக்குமா? முதலமைச்சர் கவனத்திற்கு நான் எழுதியது போகுமா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன