ராமலக்ஷ்மி
மஞ்சள் கண்கள்.
சின்னக் கொம்புகளில்
எப்போதோ தீட்டப்பட்ட
சிகப்பு வர்ணத்தின் மிச்சங்கள்.
பால்வெள்ளைக் கழுத்துக்கு
அழகு சேர்த்த
ஆழ்நீலக் கழுத்துப் பட்டையின்
சங்கிலி
கட்டப்பட விட்டுப் போயிருந்ததை
உணர்ந்தும்
கொட்டடியில் ஆறஅமரப் பசும்புல்லை
அசைபோட்டுக் கொண்டிருந்த
ஆட்டுக்குத் தெரிந்திருக்க வேண்டும்
எப்படியும் வெட்டப்படப் பிறந்த
பிறப்பென்பதும்
தப்பித்தல் தரப் போவதில்லை
எதனிலிருந்தும்
விடுதலையை என்றும்.
***