சிவாஜியும் எம்ஜியாரும்……..
அழகியசிங்கர்
நாங்கள் திருச்சியில் இருந்தபோதுதான் நான் தனியாக சினிமா பார்க்கத் தொடங்கினேன். அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முதலில் வீட்டில் சொல்லிக்கொண்டு சினிமா பார்ப்பேன். பின் நானாகவே யாரிடமும் சொல்லாமல் சினிமா பார்க்கப் போய்விடுவேன்.
இரண்டு நடிகர்களின் படங்களைத்தான் நான் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருப்பேன். ஒருவர் சிவாஜி. இன்னொருவர் எம்ஜிஆர். எனக்கு இன்னும் ஒரு நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கிறது. உறையூரில் உள்ள பத்மாவதி தியேட்டரில் (இப்போது அங்கு அந்தப் பெயரே மாறி விட்டது). நாடோடி மன்னன் என்ற படத்திற்கு மதியம் ஒன்றரை மணிக்கே சென்று விட்டேன். பெரிய படம் என்பதால் ஒரு மணி நேரம் முன்னதாகவே அந்தப் படம் ஆரம்பித்து விட்டது.
யோசித்துப் பார்க்கும்போது, நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்து வேலைக்குப் போனபிறகுகூட எம்ஜிஆரும் சிவாஜியும் என்னை விடவில்லை.
சரோஜா தேவி என்ற நடிகை சிவாஜி படத்திலும் நடிப்பார். எம்ஜிஆர் படத்திலும் நடிப்பார். ஆனால் இந்த கே ஆர் விஜயா அவ்வளவாக எம்ஜிஆர் படத்தில் நடிக்க மாட்டார்.
நாங்கள் சென்னைக்கு வந்தபிறகு என் சினிமா ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது. ஆனாலும் சிவாஜியும் எம்ஜியாரும் என்னை விடவில்லை. எந்தப் படத்தையும் ஒரு தடவைக்கு மேல் பார்க்க மாட்டேன். சிவாஜியும் சரி எம்ஜியாரும் சரி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த சிவாஜியின் சிவந்த மண் என்ற படம் ஒன்று வந்தது. வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று அதிக செலவு செய்து எடுத்தப் படம். அதே சமயத்தில் எம்ஜியாரின் நம் நாடு என்ற படமும் வந்தது. நான் நம்நாடுதான் பார்த்தேன். என் வகுப்பில் படித்த
சுந்தரமூர்த்தி என்ற பள்ளி நண்பர் சிவந்த மண் படத்தை எட்டு அல்லது ஒன்பது முறை பார்த்திருப்பான். அவன் எஸ்எஸ்எல்சியில் கோட் அடிக்க வேண்டியவன். மிகக் குறைவாக மார்க் வாங்கி தப்பித்துவிட்டான். அப்படி அவன் மோசமாகப் போவதற்கு சிவந்த மண் படம்தான் காரணம்.
யார் நடிப்பு பிரமாதம் என்று நான் நண்பர்களுடன் பேசிக்கொள்வோம். சிவாஜிதான் என்றும், எம்ஜிஆர்தான் என்றும் பேசி விவாதம் நடத்துவார்கள்.
எனக்கு இரண்டு சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகிறது. ஒன்று பிராட்வேயில் உள்ள பிரபாத் தியேட்டருக்கு சிவாஜியின் படமான இருமலர்கள் என்ற படத்தைப் பார்க்க தீபாவளி அன்று மதியமே க்யூவில் நின்றுகொண்டு மாலைக் காட்சி பார்த்தேன். அப்போது ஊட்டிவரை உறவு என்கிற சிவாஜியின் இன்னொரு படமும் ரீலிஸ் ஆனது. இப்போது நினைத்தால் இதெல்லாம் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது. எத்தனை நேரம் என்னை அறியாமல் இந்த சினிமாவிற்காக செலவு செய்திருக்கிறேன்.
இரண்டாவது நிகழ்ச்சி நான் பம்பாய்க்கு என் உறவினர்க
ளுடன் சென்றேன். அங்கே மாதுங்கா பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் உரிமைக்குரல் என்ற எம்ஜிஆர் படம் பார்த்தேன். அப்போது அங்கு தியேட்டரில் படம் பார்க்க அதிகம் பணம் வசூல் செய்வார்கள். அந்தப் படத்தில் நம்பியார் கதாநாயகியை (லதா என்ற நடிகை என்று நினைக்கிறேன்) எம்ஜிஆர் துரத்திக்கொண்டு காப்பாற்றுவார். தியேட்டரில் கூட்டம் கரகோஷம் போட்டு விசில் அடிப்பார்கள். பம்பாயில் இருந்தாலும் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்ப்பதாக நான் நினைத்துக் கொண்டேன்.
நான் பள்ளி, கல்லூரி என்றெல்லாம் சென்று கொண்டிருந்தாலும் சினிமா பார்ப்பதுதான் என் பொழுது போக்கு என்று தோன்றியது. பெரும்பாலும் நான் பார்த்த சிவாஜி எம்ஜியார் படங்களை நான் மறக்க முடியாது.
யார் நல்ல நடிகர் சிவாஜியா எம்ஜியாரா என்று பட்டிமன்றம் நடந்தால் என் வாக்கு எம்ஜிஆருக்குத்தான். ஏனோ சிவாஜி சினிமா பார்க்க வருகிற ஜனங்களை கண்கலங்க அடித்துவிடுவார். ஆனால் சிவாஜி படத்தை என்னால் மறக்க முடியாது. தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கலாட்டா கல்யாணம், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன் போன்ற படங்கள். பொதுவாக சிவாஜி தத்ரூபமாக அந்தப் பாத்திரமாக மாறி விடுவார். நமக்கு உண்மையில் கப்பலோட்டிய தமிழன் என்றால் இப்படித்தான் இருப்பாரா என்று தோன்றும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜியின் அந்தத் தோற்றம் பிரமிக்க வைக்கும். எம்ஜிஆருக்கு அதெல்லாம் வராது.
ஆனால் எம்ஜிஆர் படம் பார்க்கிற ஜாலி சிவாஜி படத்தில் வராது. ஆயிரத்தில் ஒருவனாகட்டும், எங்கள் வீட்டுப் பிள்ளை ஆகட்டும் எம்ஜிஆர் எம்ஜிஆர்தான். கலகலப்பாக இருக்கும். எல்லாப் படங்களிலும் எம்ஜி ஆர் வெறுமனே கையை தலைக்கு மேல் ஆட்டுவார். அதுவும் காதல் பாடல்களில் இந்த சேஷ்டைகள் அதிகமாகவே தெரியும். ஆனாலும் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கிற மகிழ்ச்சி அலாதியானதுதான்.
நான் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் ராமனாதன் என்ற நண்பர் இருந்தார். அவர் எம்ஜிஆர் ரசிகர். எம்ஜிஆர் படங்களைத் தவிர வேற எந்தப் படத்தையும் பார்க்க மாட்டார். தினமும் அவர் என்னிடம் எம்ஜிஆரைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். எதுவும் சொல்லவில்லை என்றால் அவருக்குத் தூக்கமே வராது.
எம்ஜிஆர் படத்தில் நடிக்கும் வில்லன் ஒருவர் எப்போதும் சண்டையின்போது எம்ஜிஆரிடம் ஒதை வாங்குவார், எங்கள் வீட்டுப் பக்கத்தில்தான் குடி இருந்தார். அவர் பெயர் ஜஸ்டின். ராமனாதனும் நானும் அவரைப் போய்ப் பார்ப்போம்.
அந்த உதை வாங்கும் வில்லன் நடிகரைப் பார்க்கும்போது ராமனாதனுக்கு ஒரே உற்சாகமாக இருக்கும். எம்ஜிஆரையே பார்ப்பதுபோல் தோன்றும்.
“சிவாஜியும் ஒரு திறமையான நடிகர்,” என்று ராமனாதனிடம் நான் சொல்வேன்.
ராமனாதன் சிரித்துக்கொண்டே,”சிவாஜிக்கு சண்டைக் காட்சியில் எப்படி நடிப்பது என்று தெரியாது,”என்பார்.
உண்மையில் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நான் பார்த்த சிவாஜி எம்ஜிஆர் படங்களை வைத்துப் பார்த்தால் நான் ஒரு பெரிய சினிமா இயக்குநராகவோ நடிகராகவோ ஆகியிருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் சினிமாவில் வசனம் எழுதறவனாகவாவது ஆகியிருக்க வேண்டும்.
இவ்வளவு காலத்துக்குப் பிறகு பத்திரிகைகள் என் சினிமாவில் என் பங்கைக் குறித்து பேட்டி எடுத்துப் போட்டிருக்க வேண்டும். டிவியில் என் பங்கைக் குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நான் இத்தனை வருடங்கள் வெறும் படங்களைப் பார்த்து விஸில் அடிக்காத ரசிகனாகவே இருந்திருக்கிறேன். நடிப்பில் சிவாஜியா எம்ஜியாரா என்று வாதம் செய்து காலத்தைக் கழித்திருக்கிறேன். இதனால் எனக்கு வருத்தமில்லை. ஆனால் சிவாஜி எம்ஜிஆர் வாழ்க்கையைப் பார்த்தால் எம்ஜிஆர் பெரிய ஹீரோவாக நடித்து அதன்பின் ஒரு பெரிய அரசியல்வாதியாக மாறி இன்றும் கொண்டாடுகிற அரசியல் தலைவராக மாறி ஆட்சியும் செய்துவிட்டார். அவர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை தமிழகமே நம்பவில்லை. எனக்குக் கூட அது பல நாட்கள் நம்ப முடியாமல் இருந்தது.
ஆனால் சிவாஜி விஷயம் வேறு விதமாகப் போய்விட்டது. அவருடைய கட்சியில் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உண்மையில் சிவாஜி நிஜ வாழ்க்கையிலும் சினிமாவில் நடித்த சிவாஜி மாதிரியே இருந்துவிட்டார். அதனால் அவரால் சினிமாவில் சாதிக்க முடிந்ததை அரசியல் வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை. பாவம் சிவாஜி. ஆனாலும் என்னால் இந்த இரு நடிகர்களையும் மறக்க முடிந்தது இல்லை.
(சமீபத்தில் சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி சுவரில் போஸ்டர் பார்த்தேன். அதன் விளைவாக இந்தக் கட்டுரை)