கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை
                                                                                                      மாரியம்மன்

    வைசூரி மிகக் கொடியதொரு வியாதி.  அதைத் தடுக்கவோ குணப்படுத்தவோ பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர்.  வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்த தொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று என்று அவர்கள் நினைத்தனர்.  இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத்து, மாரியம்மன், முத்துமாரி என்று பல பெயர்களிட்டு அழைத்தனர்.  தங்கள் குழந்தைகள் மீது இத் தெய்வத்தின் கோபம் தாவாமலிருக்க அவர்களுக்கு மாரியப்பன், மாரியம்மை என்று பெயரும் இட்டனர்.  இவ்வாறு வணங்கப்பட்ட மாரியம்மன் தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களிலே மிகப் பிரபலமடைந்து, சுற்று மதிலோடும், கோபுரங்களோடும் அமைக்கப்பட்ட கோயில்களிலே குடிக்கொண்டிருக்கிறாள்.  இக் கோயில்களில் தினசரிப் பூஜையும், பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் இத் தெய்வத்திற்குக் கிடைத்துள்ளன.  இத்தெய்வம் முதன் முதலில் மைசூர் பிரதேசத்தில் கோயில் கொண்டிருந்ததென்றும், கன்னடியப படையெடுப்பின் போது இத் தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலும், பரவியதென்றும் சில சமூகவியல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  இப்பொழுது இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.
    மாரியம்மனைக் குறித்த பாடல்கள் நம்முள்ளத்தில இனம் தெரியாத பயங்கர உணர்ச்சியை எழுப்புகின்றன.  வைசூரி நோயைத் தடுகக முடியும் என்று தெரிந்துள்ள இக்காலத்தில், மாரியம்மன் பற்றிய வர்ணனை அச்சத்தை எழுப்பக் கூடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, விஞ்ஞான வளர்ச்சியே யறியாத பாமரர் உள்ளங்களில் எத்தகைய பயத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்மால் அறிவது கடினம்.
    ஊரில் வைசூரி பரவியதும், மாரியம்மனுக்குப் பலவிதமான நேர்த்திக் கடன்கள் செய்ய மக்கள் நேர்ந்து கொள்வர்.  மாவிளக்கு ஏற்றுவதாகவும, கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், சபதம் ஏற்றுக் கொள்வர்.  மனிதனது கோபத்தைத் தணிபபதறகாகக் கையாளும முறைகளையே தெய்வங்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று மக்கள் நம்பினர்.
    அவ்வாறு விழாக் கொண்டாடும்போது உடுக்கடித்து மாரியம்மன புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக்கொண்டு சிலர் வருவார்.  அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும்.  உடுக்குத் தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனினட் பக்தர்களைப் பரவசப்படுத்தும்.
                                                                           மாரியம்மா
        தோட்டம் துறந்தல்லோ – மாரிக்கு
        தொண்ணூறு லட்சம் பூவெடுத்து,
        வாடித் துறந்தல்லோ – ஆயிரம் கண்ணாளுக்கு
        வாடா மலரெடுத்து
        கையாலே பூ வெடுத்தா – மாரிக்கு
        காம்பழுகிப் போகுமிண்ணு
        விரலாலே பூ வெடுத்தா
        வெம்பிடு மென்று சொல்லி
        தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்கு
        தாங்கி மலரெடுத்தார்
        வெள்ளித் துரட்டி கொண்டு
        வித மலர்கள் தானெடுத்தார்
        எட்டாத பூ மலரை – மாரிக்கு
        ஏணி வைத்துப் பூ வெடுத்தார்
        பத்தாத பூ மலரைப்
        பரண் வைத்துப் பூ வெடுத்தார்
        அழகு சுள கெடுங்க – மாரிக்கு
        அமுது படி தானெடுங்க
        வீசும் சுள கெடுங்க- மாரிக்கு
        வீத்து வகை தானெடுங்க
        உப்பாம் புளி முளகா – ஆயிரம் கண்ணாளுக்கு
        ஒரு கரண்டி எண்ணெய் அமுது
        கடலைச் சிறு பயறு
        காராமணி மொச்சையம்மா

        அவரை, துவரை முதல் – ஆயிரங் கண்ணாளுக்கு
        ஆமணக்கங் கொட்டை முதல்
        காடைக் கண்ணி பருத்தி விதை – மாரிக்கு
        பாங்கான வித்து வகை
        இட்டுச் செய்தவர்க்கு
        எம காளி துணை செய்வாள்
        மக்களைப் பெற்றவர்கள்
        மாரி கதை தானறிவார்
        அறிந்தோர் அறிவார்கள்
        அம்மன் திருக் கதையை
        தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா – ஆயிரங்கண்ணா
        தேவி திருக் கதையை
        ஒரு கண்ணு ரெண்டு கண்ணு
        உலகத்து மானிடர்க்கு
        ஆயிரம் கண்ணுடையா
        அழகில சிறந்த கண்ணு
        பதினாயிரம் கண்ணுடையா
        பாதகத்தி நீலியவ
        இருசி வயததிலேயும்,
        எமகாளி பிறந்திடுவாள்
        மலடி வயித்திலேயும்
        மாகாளி பிறந்திடுவாள்- மாரிக்கு
        ஆறு வண்டி நூறு சட்டம்
        அசையா மணித் தேருகளாம்.
        தேரை நடத்தியல்லோ – மாரி
        சித்திரங்கள் பாடி வாரா – மாரிக்கு
        பூட்டுன தேரிருக்கப்
        புறப்பட்டாள் வீதியிலே
        நாட்டுன தேரிருகக – ஆயிரம் கண்ணா
        நடந்தாளே வீதியிலே
        வீதி மறித்தாளம்மா – மாரி
        வினை தீர்க்கும் சக்தியல்லோ
           
        பிறந்தா மலையாளம் – அவ
        போய் வளர்ந்தா – ஆள்பாடி
        இருந்தாள் இருக்கங்குடி – மாரி
        இனி இருந்தா லாடபுரம்
        சமைந்தாள் சமையபுரம் – மாரி
        சாதித்தாள் கண்ணாபுரம்
        கண்ணா புரத்தில் – மாரி
        காக்கும் பிரதானி – மாரிக்கு
        உடுக்குப் பிறந்ததம்மா
        உத்திராட்சப பூமியிலே
        பம்பை பிறந்ததம்மா – மாரிக்கு
        பளிங்கு மா மண்டபத்தில்
        வேம்பு பிறந்ததம்மா – மாரிக்கு
        விசய நகர்ப் பட்டணத்தில்
        ஆடை பிறந்ததம்மா – மாரிக்கு
        அயோத்திமா நகர்தனிலே
        சிலம்பு பிறந்ததம்மா – மாரிக்கு
        பிச்சாண்டி மேடையிலே
        சாட்டை பிறந்ததம்மா – மாரிக்கு
        சதுர கிரி பூமியிலே
        சாட்டை சலசலங்க
        சதுர மணி ஓசையிட
        கச்சை கலகலங்க
        கருங்கச்சை குஞ்சம் விட
        பதினெட்டுத் தாளம் வர
        பத்தினியா சித்துடுக்கு
        இருபத்தொரு தாளம் வர
        எமகாளி சித்துடுக்கு
        சித்துடுக்கைக் கைப்பிடித்து
        சிவ பூசணிந்தவளாம்.
(மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன)

சேகரித்தவர் : போத்தையா                          இடம் : நெல்லை
           
       
       
       
   
       
   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன