லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியைப் பற்றிய ஓர் ஆவணப்படம்…..

அழகியசிங்கர்

அம்ஷன்குமாரின் ஒரு ஆவணப்படம் யாழ்ப்பாணம் தெட்சணமூர்த்தியைப் பற்றியது.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்குமேல் இந்த ஆவணப்படத்தைத தயாரித்துள்ளார்.
1933ஆம் ஆண்டு பிறந்த தவில் வித்வான் தெட்சணாமூர்த்தி 42வது வயதில் அதாவது
1975ஆம் ஆண்டு இறந்துவிட்டார். தவிலில் அவருடைய சாதனையை விளக்குவதே இந்த
ஆவணப்படம். தவிலில் சாதனைப் படைத்த தெட்சணாமூர்த்தியை எட்டாவது உலக
அதிசயம் என்று குறிப்பிடுகிறார்கள் இசை மேதைகள்.

எனக்கு இசையைப் பற்றி
ரொம்பவும் தெரியாது. நான் ஒரு பாமர ரசிகன். இசையை வெறுப்பவன் கிடையாது.
ஆனால் இசைத் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தை இரண்டு மணி
நேரம் விடாமல் பார்த்தேன். கொஞ்சங்கூட அசையாமல் வைத்தக் கண் ணை எடுக்காமல்
இந்த ஆவணப்படத்தை ரசித்தேன். 

பொதுவாக பெரும்பாலான ஆவணப்படங்களை முழுவதும் பார்த்து ரசிக்க முடியாது. பாதியிலேயே பார்க்க வேண்டாமென்று தோன்றும்.
இந்த ஆவணப்படத்திற்கான வெளியீட்டுக் கூட்டம் சமீபத்தில் டாக் சென்டரில்
நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குச் சென்று யாழ்ப்பாணம்
தெட்சணாமூர்ததியின் ஆவணப்படமும், அவர் இசை எலலாவற்றையும் தொகுத்த இசைத்
தொகுப்பையும். தெட்டசாணாமுர்த்தி : எட்டாவது உலக அதிசயம் என்ற அவரைப்
பற்றிய புத்தகத்தையும் வாங்கிக கொண்டேன்.
இதற்குமுன் அம்ஷண்குமாரின் 3
ஆவணப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு படம் பாரதியாரைப் பற்றியது.
இரண்டாவது படம் அசோகமித்திரனைக் குறித்து. மூன்றாவது படம். மணக்கால்
ரங்கராஜன் என்ற இசை மேதையைப் பற்றி. சர் சி வி ராமனைப் பற்றிய
ஆவணப்படத்தையும் எடுத்துள்ளார்.
அம்ஷன் குமாரின் ஆவணப்படங்கள்
ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அவரது ஆவணப்படத்தின் பொதுவான அம்சம் என்ன?
எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்கிறார். ஒரு முறை பார்த்தாலும் இன்னொரு
முறை பார்க்க வேண்டுமென்று தூண்டும்படி எடுத்திருக்கிறார். ஒரு சினிமாப்
படத்தைப் பார்க்கிற ஜோடனை அவர் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.
அம்ஷன்குமாரின் ஆவணப்படங்களை நான் சேகரிக்கத் தொடங்கியபோது, இன்னும் பல
ஆவணப்படங்களைத் தேடத் தொடஙகினேன். புதுமைப்பித்தன் பற்றிய ஆவணப்படம்,
சமீபத்தில் ஞானக்கூத்தன் ஆவணப்படத்தையெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன்.
நான் ஒரு ஆவணப்படம் சேகரிப்பாளனாக மாறி விட்டேன். அதற்கு அடிப்படையான
காரணம் அம்ஷன் குமாரின் ஆவணப்படங்கள்தான்.

தவில் வித்வான்
தெட்சணாமூர்த்தியின் இந்த ஆவணப் படத்தைத் தயாரிக்க எந்தவிதமான தரவுகளும்
இல்லை. வெறும் தெட்சணாமூர்த்தியின் மூன்று புகைப் படங்களும், அவரைப்
பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள்தான் இருந்தன.
தெட்சணாமூர்த்தி வாசித்த
தவில் கச்சேரிகளை பல இடங்களிலிருந்து சேர்த்து தொகுக்க முடிந்தது. தனி
ஆவர்த்தனமாக அவர் வாசித்ததும், மற்றவர்களுடன் சேர்ந்ததையும் ஓரளவு தொகுக்க
முடிந்தது. இதுமாதிரி குறைவான தரவுகளை வைத்துக்கொண்டு நிறைவான ஒரு
ஆவணப்படத்தை அம்ஷன்குமார் இயற்றி உள்ளார்.

தெட்சணாமூர்த்தியுடன் பழகிய
நண்பர்களும், அவருடன் கச்சேரி நடத்திய நண்பர்களையும், பின் அவர்
குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய பெண்கள், பையன்கள், தெட்சணாமூர்த்தியின்
சகோதரிகளை வைத்து ஒரு அருமையான படத்தை கதை மாதிரி விவரித்துச்
சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் கூற்றுகளை வைத்து தெட்சாணமூர்த்தியின்
உருவத்தை உருவாக்குகிறார்.
பொதுவாக ஒரு ஆவணப்படத்தின் நோக்கம் என்ன?
திறமையான மனிதர்களைக் கண்டு பிடித்து அவர்களின் திறமைகளை
வெளிப்படுத்துவதுதான். இப்படி ஆவணப் படுத்துவது எதிர்காலத்தில்
உள்ளவர்களுக்கு அவர்களைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள உதவியாக
இருக்கும். அம்ஷன்குமார் போல் பலர் இப்போது இதை செய்துகொண்டு
வருகிறார்கள். யாழ்பாணம் தெட்சணாமூர்த்தியை சரியான நேரத்தில்
கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இன்னும் போகப் போக இதுமாதிரி
தகவல்கள்கூட கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
நம்மிடையே
உயிரோடு இருக்கும் எழுத்தாளர்களும், மறைந்து போன எழுத்தாளர்களும் உள்ளனர்.
அவர்களைப் பற்றியெல்லாம் ஆவணப்படங்கள் எடுக்க வேண்டும்.


தெட்சணாமூர்த்தி எப்படி நடப்பார் எப்படி தவில் வாசிப்பார் எப்படி உடை
உடுத்திக்கொள்வார் என்பதெல்லாம் அவருடைய புதல்வர் மூலம் படம்
பிடித்துள்ளார் அம்ஷன்குமார். மிகச் சிறிய வயதிலேயே மரணம் அடைந்து
விட்டார் தெட்சணாமூர்த்தி. உலக அளவில் சிறந்த தவில் வித்வானின்
தெட்சணாமூரத்தியின் மரணம் கூட மர்மம் நிறைந்தது. அவர் கச்சேரிகளுக்குச்
செல்வதெல்லாம் விட்டுவிட்டு கடைசி இரண்டு ஆண்டுகள் யாரையும் பார்க்காமல்
இருட்டில் தனியாக ஒரு இடத்தில் இருந்து வந்திருக்கிறார். கடைசிக்காலத்தில்
பார்க்க வந்த ஒரு சில நண்பர்களையும் அவர் அதிகமாகப் பேசாமல்
அனுப்பியிருக்கிறார். 

இபபடி திறமை உள்ள தவில் வித்வானுக்கு தெய்வக்
கடாட்சம் நிச்சயமாக இருக்க வேண்டும். இதைக் கூட அவருடன் நெருங்கிய
பழகியவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இனுவேல் கே ஆர்
புண்ணியமூர்த்தி மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆக இந்த ஆவணப்படத்தைப்
பார்க்கும்போது இவ்வளவு சுவாரசியமான ஒரு நிஜக் கதையைப் பார்க்கிற திருப்தி
ஏற்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன