…
அழகியசிங்கர்
சனிக்கிழமை இரவு மனோரமா என்ற நடிகை இறந்த செய்தி கேள்விப்பட்டேன். அது முதல் மனோரமா என்ற நடிகையைப் பற்றி யோஜனை செய்து கொண்டு வருகிறேன். உலக அளவில் இவ்வளவு அதிகமான படங்களில் நடித்த நடிகை யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். தன் நடிப்பாற்றலால் எல்லார் மனதையும் கவர்ந்தவர் நடிகை மனோரமா.
ஒரு காலத்தில் தமிழ்ச் சினிமாவின் பெரும் பகுதியை மனோரமாவும் நாகேஷ÷ம் தங்களுடைய நடிப்பாற்றலால் கலகலக்க வைத்தவர்கள். தமிழ் சினிமாவில் ஒரு நடிகரோ நடிகையோ நீண்ட ஆண்டுகள் நடித்துக் கொண்டிருப்பது திறமை மட்டும் இருந்தால்தான் முடியும். அதுவும் ஆபாசம் எதுவும் இல்லாமல் நகைச்சுவைக்காகவும் குணச்சித்திர நடிப்புக்காகவும் பெயர் பெற்றவர் நடிகை மனோரமா.
பொதுவாக ஒரு நடிகை நடித்துக்கொண்டிருக்கும் போது அந்த நடிகையை அப்புறப்படுத்த வேற சில நடிகைகளும் முன் வருவார்கள். மனோரமாவுக்கு மாற்றாக இன்னும் சில நகைச்சுவை நடிகைகள் தோன்றாமல் இல்லை. ஆனால் மனோரமாவை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
எல்லா நடிகர்களின் அன்புக்கும் பாத்திரமானவர் அவர். நாகேஷ் போன்ற நடிகருடன் போட்டிப் போட்டுக்கொண்டு நடிப்பதில் மனோரமாவைப் போல் வல்லவர் யாருமில்லை. ஏன் நாகேஷ் என்று குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் சினிமாவில் நாகேஷின் பங்கும் முக்கியமானது என்பதால்தான்.
எந்தத் துறையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் எல்லோரும் அந்தத் துறையை விட்டு விலகித்தான் போகவேண்டும். ஆனால் மனோரமா விஷயத்தில் நீண்ட காலம் அவர் அந்தத் துறையில் நீடித்திருப்பதற்குக் காரணம் அவருடைய திறமை மட்டுமே.
உலக சினிமா சரித்திரத்தில் மனோரமா மாதிரி யாராவது நடிகை இருந்திருப்பாரா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யாராவது சினிமா வல்லுநர்கள்தான் என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்.
சரி, மனோரமா என்ற நடிகைக்கு எதுமாதிரியான கௌரவம் நாம் அளித்திருக்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள நடிகைகளில் முன்மாதிரி மனோரமா என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வதில் எதாவது தவறு இருக்கிறதா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். இன்னும் கூட குழந்தைத்தனமான அவர் முக பாவமும், அலட்சியமாக உதிர்க்கும் வாசன உச்சரிப்பும் யாராலும் மறக்க முடியாது.
எந்த ஒருவருக்கும் அவர்கள் செய்து கொண்டு வரும் செயல் முற்றுப்பெற்றுவிட்டால், உடனே அவர்களுடைய மரணமும் தொடர்ந்து வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தொடர்ந்து நடித்து வந்த மனோரமாவால் நடிக்காமல் போனபின் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது.
நான் அறிந்தவரை அவர் ஆயிரம் படங்கள் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் இன்று இல்லை என்றாலும் நீங்காத நினைவாக அவர் படங்கள் முழுவதும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். இனி யாராலும் அவர் இடத்தைப் பிடிக்க முடியாது. அவரை மாதிரி யாராலும் உருவாகவும் முடியாது என்றே தோன்றுகிறது.
அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.