அழகியசிங்கர்
சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் தேவன், மனிதன், லூசிஃபர். 224 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை எழுதியவர் சைலபதி. இந்த நாவலைப் படித்து முடித்தப்பின் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது இரா முருகன் என்ற எழுத்தாளர் நான் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டுவிட்டார். அவருடைய முகநூலில். வெகு நாட்கள் கழித்து ஒரு கிருத்துவ நாவலை இப்போதுதான் படிக்கிறேன். அதை அலுப்பில்லûôமல் எழுதி இருக்கும் சைலபதிக்கு வாழ்த்துகள். பொதுவாக கிருத்துவ சமுதாயத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள், கிருத்துவ மதச் சம்பந்தமாக எழுதுவதில்லை.
இந் நாவலில் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிருத்துவ மதத்துக்கு மாறுவதாக விவரிக்கிறார். ஆனால் உண்மையில் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள் கிருத்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு அதில் மாறுவது என்பது மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். பொதுவாக தலித்துகள்தான் வறுமையின் பொருட்டு கிருத்துவ மதத்திற்கு மாறுவது சகஜம். கிருத்துவமதத்தைச் சார்ந்தவர்கள்தான் இப்படி மதத்தை பிரச்சாரம் செய்து மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை இழுப்பார்கள்.
கிருத்துவ மதத்திற்கு மாறிய ஒரு பிராமண இளைஞனுக்கும், ஒரு கிருத்துவரைத் திருமணம் செய்துகொண்ட பிராமணப் பெண்ணிற்கும் உள்ள தடுமாற்றம்தான் இந்த நாவல். அவர்கள் இருவரும் மதம் மாறினாலும் முழுமையாக மாறமுடியவில்லை.
ஹரி – ஸ்ரீ வித்யா, பீட்டர் – காயத்திரி, பாஸ்கரன் – ரேவதி – நாவலா என்று ஒன்றுடன் ஒன்று முரண்படுகிற உறவு முறைகள். பிராமணன் ஆகிய ஹரி கிருத்துவனன் ஆகிவிடுகிறான். ஸ்ரீவித்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் திரும்பவும் பூணூல் அணிந்துகொண்டு பிராமணனாக அவன் மாற வேண்டும். தடுமாற்றத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிற ஹரி காதலை தொலைத்து விடுகிறான். அதனால் அவன் புத்தி பேதலித்துப் போய்விடுகிறது.
அதேபோல் பிராமணப் பெண்ணான காயத்திரி ஞானஸ்நானம் செய்துகொண்டு கிருத்துவ மதத்தைத் தழுவி பீட்டரை திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் முழுவதுமாக அவள் கிருத்துவளாக மாற முடியவில்லை. அந்த முரண் அவளுக்கும் பீட்டருக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது.
நாவலா என்ற பெண், கணவன் மனைவி ஆகிய பாஸ்கரன் ரேவதிக்கும் உள்ள உறவை குலைக்கிறாள். ஒருநாள் அலுவலகத்தில் எல்லோர் முன்னும் மூவருக்கும் பெரிய ரகளையே நடக்கிறது. ரேவதி அழுது நாவலாவை வேலையைவிட்டு போகும்படி வற்புறுத்துகிறாள். நாவலா அங்கிருந்து போவதால் இரண்டு பெண்களுக்கு மகிழ்ச்சி ஒன்று ரேவதி, இன்னொன்று ஸ்ரீ வித்யா. நாவலா அவரகள் வேலை பார்த்த இடத்தை விட்டு வேற இடத்திற்குப் போனாலும் ஸ்ரீ வித்யாவிடம் நாவலா எங்கே இருக்கிறாள் என்பதை சொல்ல ஹரி மறுக்கிறான். இதையே பாஸ்கரனும் ஹரியிடம் கேட்கிறான். நாவலாவை மறக்க முடியாமல் அவன் அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறான்.
உண்மையில் பாஸ்கரன் மனம் உடைந்து போனதால் அவன் நடத்திக்கொண்டிருந்த அந்தக் கம்பெனியை ஹரி எடுத்துச் செய்வதாக இருந்தது. ஆனால் உண்மை வேறுவிதமாகப் போய்விட்டது. அவன் காதல் குலைந்தவுடன், எல்லாம் குலைந்துபோகிறது.
ஹரி பழையபடி அவன் குடும்பத்துடன் சேர்ந்து விடுகிறான். அவன் திரும்பவும் பிராமணனாக மாற வேண்டி உள்ளது. இதைத்தான் ஸ்ரீ வித்யா அவனிடமிருந்து அப்போது எதிர்பார்த்தாள். ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொள்ளக்கூட தயாராக இருந்தாள்.தன்னை கிருத்துவ மதத்திலிருந்து வெளியே இழுக்க முயற்சிக்கிறாள் என்று தவறாக அவன் நினைத்துவிட்டான். அப்போது அவன் அதுமாதிரி மாறத் தயாராக இல்லாததால் ஸ்ரீ வித்யா அவனுக்குக் கிடைக்கவில்லை.
சாமுவேல்தான் சாத்தானின் உண்மையான பெயர். சாத்தானின் கதை படிக்க சுவாரசியமாக இருக்கிறது. சாத்தான் என்ற பெயர் உள்ளவன், கிருத்துவ மதத்தை நேசிப்பவனாக இருக்கிறான். அவனுக்கு லூசிஃபர் என்ற பெயரை வைக்கிறாள் நாவலா. சாத்தான் யேசு காவியத்தை எழுதிக் கொண்டிருக்கிறான். அதைப் படித்துப் பார்த்த உற்சாகத்தில் நாவலா அந்தப் பெயரை அவனுக்குச் சூட்டுகிறாள்.
பாஸ்கரன் மாறிவிட்டான். அவன் அலுவலகத்தில் பெண்களே இல்லை. அவன் மனைவி ரேவதி தினமும் அவனுடன் அலுவலகம் வந்துவிட்டு போகிறாள்.
இந்த நாவலில் யேசு வாழ்க்கை அற்புதமாக விவரிக்கப் படுகிறது. சாத்தான் எழுதிக் கொண்டிருக்கிற யேசு காவியத்தைத்தான் அப்படி கொண்டு வருகிறாரோ நாவலாசிரியர் என்று தோன்றுகிறது. கிறிஸ்துவ சபையில் நடக்கும் ஊழல்களும், அதை வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும் அவலமும் விவரிக்கப்படுகிறது. பாஸ்டர் ஜீவானந்தம் சிறந்த ஊழியர். எதையும் எதிர்பாராமல் விசுவாசத்துடன் ஊழியம் பார்ப்பவர். ஆவியானவர்தான் தன்னை வழி நடத்துவதாக சொல்கிறார். அவர் இருந்தால் சபை மோசமாகிப் போய்விடும் என்று அவரை நீக்கி விடுகிறார்கள். விசுவாசமிக்க ஒருவர் தூக்கி எறியப்படுகிறார். உண்மையில் பாஸ்டர் மைக்கேலுக்கு அடுத்ததாக இந்தச் சபையை வழி நடத்த சரியான மேய்ப்பன் ஜீவானந்தம். அவர்தான் நீக்கப்படுகிறார். உண்மையில் பாஸ்டர் மைக்கேலுக்கு அவர் பையனைக் கொண்டு வர எண்ணம். நியாயமில்லை என்று தெரிந்தும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பாஸ்டர் ஜீவானந்தம் விலகிப் போய்விடுகிறார். அவர் மீது அக்கறை உள்ளவர்கள் அவர் என்ன செய்யப்போகிறார் என்று கவலைப் படுகிறார்கள் விசுவாசமுள்ள சிலரை வைத்துக்கொண்டு புதிய இலட்சிய சபையை உருவாக்குகிறார்.
காயத்திரி முற்றிலும் மாறி விடுகிறாள். பைபிளை கிழித்தவள், கூச்சல் போட்டவள். இப்போது ஞாயிற்றுகிழமைகளில் சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு நடத்துகிறாள். பீட்டருக்காக மாறி விடுகிறாள்.
பாஸ்டர் ஜீவானந்தம் போட்டியாக புதிய இலட்சிய சபை ஆரம்பித்ததால் சிலரால் தாக்கப்படுகிறார். அவர் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அவருக்கு பிறகு அந்தப் பொறுப்பை லூசிஃபர் என்கிற சாத்தான்தான் ஏற்றுக் கொள்கிறான். இதுதான் பாஸ்டர் ஜீவானந்தம் விருப்பம் கூட. இது மாதிரி நிகழ்வு ஏற்படுமென்பதை முன்னமே அவர் தீர்மானித்துவிடுகிறார்.
இத்தனை கதாபாத்திரங்களையும் திறமையாக கையாள்கிறார். எந்த இடத்திலும் கிருத்துவ மதத்தை நாவல் மூலம் போதிக்கும்படி எழுதவில்லை. அந்தச் சமுதாயத்தில் நடக்கும் முரணை நாசூக்காகக் கொண்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ஞானஸ்நானம் பெற பயன்படும் தொட்டியைப் பற்றி விவரிக்கிறார். ஞானஸ்நானம் செய்த பிறகு ஒருவர் கிறித்துவ மதத்திற்கு மாற்றப்பட்டு விடுகிறார். அதைப் பெறுவதற்கு பலர் க்யூவில் இருப்பதாக விவரிக்கிறார்.
இந்த மதத்தைப் பற்றி தெரியாத வாசகர்களுக்கு இது புதிய தகவலாக இருக்கிறது. மதம் மாற ஞானஸ்நானம் என்ற ஒன்று தேவை என்பதே எனக்கு இந்த நாவலைப் படித்தப் பிறகுதான் தெரிந்தது. மேலும் சில இடங்களில் சில தெறிப்புகளை வெளிப்படுத்துகிறார். முதுமையைப் பற்றி ஒரு இடத்தில் சொல்கிறார். அழுகையைப் பற்றி இன்னொரு இடத்தில் சொல்கிறார். திறமையாக எழுதப்பட்ட எழுத்து.
தேவன் மனிதன் லூசிஃபர் – நாவல் – சைலபதி – பக்கம் : 224 – விலை : 150 – இராசகுணா பதிப்பகம், 28 முதல் தளம், 36வது தெரு, பாலாஜி நகர் விரிவு, சின்னம்மாள் நகர், புழுதிவாக்கம், சென்னை 91-செல் 9444023182