அழகியசிங்கர்
தமிழில் முக்கியமான படைப்பாளிகளான அசோகமித்திரன், எஸ் வைதீஸ்வரனின் பிறந்த நாள் இன்று. இருவரும் ஒரே நாளில் பிறந்துள்ளார்கள். வைதீஸ்வரனுக்கு 80 வயது முடிந்து விட்டது. அசோகமித்திரனுக்கு 85 வயது. முதலில் இருவருக்கும் என் பிறந்த தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என் சார்பாகவும், விருட்சம் சார்பாகவும்.
நான் பெரும்பாலும் அசோகமித்திரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருப்பேன். அவருடைய எல்லா நாவல்களையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். சமீபத்தில் சாருநிவேதிதாவும், ஜெயமோகனும் குறிப்பிட்டிருப்பதுபோல உலக அளவில் சொல்லப்பட வேண்டிய எழுத்தாளர் அசோகமித்திரன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏன் இந்தியா அளவில் அசோகமித்திரனுக்கு இணையாகச் சொல்லக்கூடிய எழுத்தாளர் யாராவது உண்டா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது.
அசோகமித்திரனின் துரதிருஷ்டம் அவர் தமிழ்நாட்டு எழுத்தாளராகப் போய்விட்டார். அவரே வங்காளி எழுத்தாளராகவோ மலையாள எழுத்தாளராகவோ இருந்திருந்தால், அவர் புகழ் இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும். ஞானபீட பரிசு என்று சொல்கிறார்களே அது நிச்சயமாகக் கிடைத்திருக்கும். இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளராக அவரை நிச்சயம் சொல்லியிருப்பார்கள். தமிழ்நாட்டில் மட்டும் நடிகர்கள், அரசியல்வாதிகள்தான் முக்கியம். அவர்களை துதிபாடும் கும்பல்கள்தான் அதிகம்.
துதிபாடும் அளவிற்கு தகுதி உள்ள எழுத்தாளராக இருந்தாலும், அசோகமித்திரன் அதை விரும்ப மாட்டார். அவர் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுவதைக்கூட எப்படி எடுத்துக்கொள்வார் என்பது தெரியாது. பத்து கேள்விகளும், பத்து பதில்களும் என்ற வீடியோ பேட்டியில் ஒரு கேள்வி. அவருடைய முதல் படைப்பு எப்போது பிரசுரமானது என்று. இதற்கு பதில் சொல்லும் அசோகமித்திரன் அது வந்த பத்திரிகையும், ஆண்டை மட்டும் சொன்னால் போதும். ஆனால் கூட ஒரு விஷயத்தையும் அவர் குறிப்பிடுகிறார். üஅக் கதையை அவ்வளவு சிறப்பாக சொல்லமுடியாது,ý என்று. இது மாதிரி எந்தப் படைப்பாளியாவது கூறுவார்களா என்பது சந்தேகம்தான். தான் எழுதுவது மட்டுமல்லாமல், மற்றவர்கள் எழுதுவதையும் அவர் கூர்ந்து கவனிக்கிறார். அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் அவர் தயங்குகிறார். எதைப்பற்றியாவது யாரைப்பற்றியாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் மௌனத்தின் மூலமாகக் கண்டுபிடித்து விடலாம்.
2012ல் நான் சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது திருவல்லிக்கேணியில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது. அந்த ஆண்டில் அசோகமித்திரனின் இதே 22ஆம்தேதி சனிக்கிழமை அன்று பாரதியார் இல்லத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தேன். அப்போது நான் கூட்டம் நடத்துவதையே விட்டுவிட்டேன். ரொம்ப மாதங்கள் கழித்து அசோகமித்திரன் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தேன். கூட்டம் வராவிட்டால் என்ன செய்வது என்ற பயம் என்னைத் தொற்றிக்கொண்டதால், பேசுவதற்கு பலரை அழைத்திருந்தேன். கிட்டத்தட்ட 25 பேர்களுக்கு மேலிருக்கும். கூட்டத்திற்கு வருபவர்களைவிட பேசுபவர்கள் அதிகம் பேர்கள் இருக்கட்டும் என்பதுதான் என் திட்டம்.
ஆனால் எதிர்பாராதவிதமாய் கூட்டம் அதிகமாக வந்தது என்பதோடல்லாமல், பேசுபவர்கள் எல்லோரும் அசோகமித்திரனைப் பாராட்டிப் பேசினார்கள். இது நானே எதிர்பார்க்காத ஒன்று. பொதுவாக இலக்கியக்கூட்டம் என்றால் 20 பேர்களுக்கு மேல் வர மாட்டார்கள். வருபவர்கள் பெரும்பாலோர் குறைந்தபட்சம் 50 வயதுக்கு மேல் இருப்பார்கள். பெண்களைப் பார்ப்பது கடினம். கடந்த பல ஆண்டுகளாக கூட்டம் நடத்திய அனுபவத்தால் நான் தெரிந்துகொúண்ட ஒன்று.
எப்போதும் கூட்டங்களைப் பதிவு செய்யும் வழக்கம் எனக்குண்டு. ஒரு ஆடியோ காசேட்டை வைத்துக்கொண்டு பேசுவதைப் பதிவு செய்வேன். அசோகமித்திரன் கூட்டத்தையும் வீடியோ ஆடியோ மூலம் பதிவு செய்தேன். கூட்டம் என்றால் பரபரப்பு அடைந்துவிடுவேன். ஆனால் மனதிற்குள் சொல்லிக்கொள்வேன் பரபரப்பு அடையாதே அடையாதே என்று. உண்மையில் கூட்டம் அதிகம் வந்தாலும் பரபரப்பு அடைந்து விடுவேன். அதேபோல் வராவிட்டாலும் பரபரப்பு அடைந்துவிடுவேன். ஒவ்வொரு முறையும் நான் எனக்குள் சொல்லும் வழக்கம் கூட்டம் நடப்பது நம் கையில் இல்லை என்பது.
அன்று உண்மையில் அசோகமித்திரனுக்காக அத்தனைப் பேர்களும் வந்தார்கள். ஒவ்வொருவரும் அசோகமித்திரன் ரசிகர்கள். கூட்டத்தில் பேசுவதற்காக பல படைப்பாளிகள் வந்தார்கள் என்றால் அவருடைய ரசிகர்கள் பலர் வந்திருந்தார்கள். ஒரு கூட்டம் என்றால் பேசுபவர்களை வரவழைக்க பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அசோகமித்திரனை மட்டும் குடும்பத்தோடு அழைத்துவர சுந்தர்ஜி என்ற நண்பர் உதவி செய்தார். பேசுபவர்கள் எல்லோரும் அவராகவே வந்தார்கள். இதெல்லாம் அசோகமித்திரன் மீது உள்ள அன்பால் நடந்தது.
ஆனாலும் அசோகமித்திரன் போன்ற எழுத்தாளருக்கு இதைவிட அதிக கவனம் வேண்டும். இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பது என் என் எண்ணம்.
வைதீஸ்வரன் என்ற பெயரை நான் விருட்சம் பத்திரிகை ஆரம்பிக்குமுன்பே அறிவேன். ஆனால் எழுதாமல் அவர் ரொம்ப ஆண்டுகள் காணாமல் போய்விட்டார். தமிழ் சூழலில் இதெல்லாம் சகஜம். நான் நடத்திக்கொண்டிருந்த பத்திரிகையில் அவர் படைப்புகள் குறிப்பாக கவிதைகள் வர வேண்டுமென்று நினைத்தேன். அவர் என் வீட்டில் பக்கத்தில் இருந்தார். உடனே அவரை நேரில் போய்ப் பார்த்தேன். முதன் முதலாக திரும்பவும் அவருடைய கவிதைகளை வாங்கி விருட்சத்தில் பிரசுரம் செய்தேன். கவிதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும் எழுதித் தருவார். அவர் ஒரு ஓவியரும் கூட. விருட்சத்திற்காக ஓவியமும் வரைந்து கொடுத்திருக்கிறார்.
எழுத்து காலத்திலிருந்து எழுதும் மூத்தக் கவிஞர் அவர். அவர் கவிதைகளில் ஒரு தார்மீகக் கோபம் இருக்கும். தத்துவ வெளிப்பாடு இருக்கும். இயற்கையைப் பற்றிய அக்கறை இருக்கும். என்னைப் பொறுத்தவரை கவிதை வாசிப்பதில் ஒரு அனுபவம் என்னவென்றால் தொடர்ந்து கவிதையை வாசிக்கக் கூடாது. ஒரு கட்டத்தில் கவிதையைப் படித்துக்கொண்டு வரும்போது நிறுத்திவிட்டு கவிதையை அசைப் போட வேண்டும். வைதீஸ்வரன் கவிதையை நீங்கள் இப்படித்தான் படிக்க வேண்டும்.
இதோ விருட்சத்தில் எழுதிய அவருடைய கவிதை ஒன்று.
உலகத்தில்
எல்லோரையும் போல்
ஏற்றிவிட்ட ஏணிகளை
ஏறியவுடன் உதறிவிட வேண்டும்
என்பதுதான் எனக்கும் ஆசை
ஆனால் ஏணிகளோ
என் கால்களுக்கடியில்
முளைத்துக்கொண்டே யிருக்கின்றன
ஓயாமல்…..
ஆயுள் முழுவதும் பரமபத வாழ்வு
படிகளை உதறுவதற்கு
சந்தர்ப்பம் கிடைப்பதில்லை
எப்போதும்..
இப்போதெல்லாம்
ஏணிகளே என்னை உதறி விடுகின்றன
பலசமயம்
தன்னை மிதிக்கும் கால்களை சற்றே
தோள் மாற்றிப் பார்க்க.