பாரதியாரைப் பற்றிய நினைவுகள்

அழகியசிங்கர்
09.09.2015 புதன் கிழமை திருவல்லிக்கேணி போயிருந்தேன்.  போகிற வழியில் பாரதியார் நினைவு இல்லத்தைப் பார்த்துக் கொண்டேபோனேன்.   அலங்காரம் பண்ணி இருந்தார்கள்.  பாரதியாரின் நினைவு நாளைகொண்டாடுவதற்காக இருக்கும்.  பாரதியின் நினைவுநாள் 11ஆம் தேதி.  வெள்ளிக்கிழமை. 
உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல.  எல்லா இடங்களிலும் இருக்கிறார்.  எல்லார் மனதிலும் புகுந்து கொண்டிருக்கிறார். 
தி நகரில் ஒரு பிரபலமான ஓட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட ஒருமுறை சென்றபோது,  அந்த ஓட்டலைச் சுற்றி பார்வையை ஓட விட்டேன்.  சுவரில் ஒரு படம் தொங்கிக் கொண்டிருந்தது.  யார் படம் என்று சறறு உற்றுப் பார்த்தேன்.  பாரதியார் படம். பாரதியார் ஏன் சாப்பிடற இடத்திற்கு வந்திருக்கிறார் என்று யோசித்தேன்.
பாரதியார் எழுதி குவித்திருக்கிறார்.  அவர் படைப்புகள் எல்லாவற்றையும் எல்லோரும் படித்து விட முடியாது.  அவருடைய சில கவிதைகள் எளிதில் புரிந்து விடாது.  எப்படி பாரதியார் புகழ் பரவியது.  அவர் எல்லாவற்றையும் பாடியிருக்கிறார்.  உலகத்தைப் பற்றி, நாட்டைப் பற்றி என்று எல்லாவற்றைப் பற்றியும் கவலைப் பட்டிருக்கிறார்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது பாரதியார் எழுதிய கட்டுரைகளை மின்சார வண்டியில் படித்துக்கொண்டே வருவேன்.  அக் கட்டுரைகளை எல்லாம் பெ தூரன் தொகுத்திருக்கிறார். எங்கள் கல்லூரி லைப்ரரியிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து படிப்பேன.  எனக்கு கெமிஸ்டிரி புத்தகம் படிப்பதை விட பாரதியார் புத்தகம் படிக்கப் பிடிக்கும்.  ஆனால் என் கூட படிக்கும் மற்ற மாணவர்கள் இது மாதிரி அவஸ்தையில் மாட்டிக்கொள்வது கிடையாது. 
பாரதியார் கட்டுரைகள் அவருடைய கவிதைகளை விட விறுவிறுப்பாக இருப்பதாக தோன்றும்.  எது எழுதினாலும் படிப்பவருக்குப் புரிகிற மாதிரி தெளிவாக எழுத வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் பாரதி.  ஒருமுறை தாகூருடன் பாரதியார் நோபல் பரிசு பெற போட்டி போட்டதாக குறிப்பிடுவார்கள்.  இது உண்மையா பொய்யா என்பதெல்லாம் தெரியாது.  ஆனால் அந்தத் தகுதி பாரதிக்கு தாகூரைவிட அதிகம் உண்டு.  
ஒரு காலத்தில் மணிக்கொடி காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிதையில் புது முயற்சி செய்து பார்க்க பாரதியார்தான் முக்கியமானவர்.  அவருடைய வசன கவிதை முயற்சிதான் அவர்களுக்கு உந்துதல்.  இன்று எழுதப்படுகிற கவிதைகள் எல்லாம் பாரதியார் கொடுத்த கொடைதான்.
எனக்குக் கூட பாரதியார் வசன கவிதைமுன் முன்பு எழுதிய கவிதை முறை எல்லாவற்றையும் உடைத்துவிட்டுப் போய்விட்டாரோ என்று தோன்றும். 
காட்சி என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்.
இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
யுடடைத்து. காற்றும் இனிது.
தீ இனிது.  நீர் இனிது.  நிலம் இனிது.
ஞாயிறு நன்று.  திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன….
என்றெல்லாம் பாடிச் செல்கிறார். 
பாரதியார் கவிதை புரிகிறதோ இல்லையோ ஒரு ஓட்டலில் பாரதிமேல் உள்ள பக்தியால் அவர் படத்தை வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  உண்மையில் அங்கே பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரதி பற்றி எதாவது தெரியுமா என்பது தெரியாது.
பாரதியார் ஒரு மதிக்கக் கூடிய ஒருவராக மாறி விட்டார்.  எனக்குத் தெரிந்து தமிழ் மொழிக்காக பாரதியாருக்குத்தான் இந்தத் தகுதி கிடைத்துள்ளது.  இனிமேல் எழுதப் போகிற எழுதுகின்ற யாருக்கும் இதுமாதிரி தகுதி கிடையாது. அதாவது எல்லா தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்கிற தகுதி.
ஆனால் பாரதியார் உயிரோடு இருந்தபோது அவர் அடைந்த கொடுமைகள் அதிகம்.  
மகாகவி பாரதியார் என்ற புத்தகத்தில் வரா இப்படி எழுதுகிறார்:
“ஒரு மகான் எந்தத் துறையில் வேலை செய்தாலும், அவரது ஜீவிய காலத்திலேயே, அவருக்கு ஏற்ற பெருமையுடன் மக்களால் கொண்டாடப்படுவதில்லை.  உலக மகாகவி என்று போற்றப்படும் ஷேக்ஸ்பியரை அவருடைய காலத்தில் மதித்தார்களா? 
இதைப் போலவே பாரதியாரைப் பற்றியும் சிறிது காலம் மதிப்பு இருந்து வந்தது.  பாரதியார் இலக்கணம் அறியாக் கவிஞன் என்று பண்டிதர்கள் ஆதாரமும் பொருளுமின்றிப் பேசினார்கள்.  பாரதியார் வெறும் தேசியக் கவி என்று பலர் பேசிக் கொண்டார்கள்.  பாரதியார் பெண் விடுதலை நண்பன் என்று சிலர் ஆத்திரப்பட்டார்கள்.  மற்றும் பலர் ஆர்வத்துடன் பேசினார்கள். 
 பாரதியார் வெறுங்கஞ்சாப் புலவர் என்று ஏசினதையும் என் காதால் கேட்டிருக்கிறேன்.  மார்க்கெட்டில் ஒன்றும் வாங்கத் தெரியாமல் ஒரு கூடைக் கீரையை வாங்கின பாரதிதானே என்று சிலர் புரளி செய்வதைக் கேட்கும் துர்பாக்கியமும் நான் பெற்றதுண்டு.  ஆனால், இவைகளெல்லாம் யோசிக்காமல் ருசுவில்லாமல் எதையும் பேச முடியும் என்பதற்கு அத்தாட்சிகள் ஆகின்றன அல்லாமல், பாரதியாரைப் பற்றிய விமர்சனம் ஆகமாட்டா.”
வரலாறை திரும்பிப் பார்க்கும்போது பாரதியாரை சரியாக அந்தக் காலத்தில் புரிந்துகொள்ள வில்லை என்றே தோன்றுகிறது.  இது எல்லோருக்கும் ஏறபடுகிற ஒன்று.  ஒருமுறை சென்னைக்கு வந்திருந்த காந்தியைச் சந்தித்து ஒரு கூட்டத்தில் பேச அவரை அழைத்தார்.  அந்தத் தருணத்தில் காந்தியைப் பார்க்க வந்த பாரதியை யாரும் பொருட்படுத்தத் தயாராய் இல்லை.  முதலில் பாரதியை காந்திக்கு யாரும் அறிமுகப்படுத்தவே இல்லை.  நேராக காந்தியிடம் பாரதி சென்று அவர் முன் இருக்கையில் அமர்ந்து, “மிஸ்டர் காந்தி, இன்றைக்கு சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவலலிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?” என்று கேட்கிறார்.
காந்தி அவருடைய உதவியாளர் மகாதோவபாய் அவர்களைக் கூப்பிட்டு மாலையில் அவருடைய அலுவலகள் என்ன என்று கேட்கிறார்.அவர் முடியாது என்று சொன்னவுடன், காந்தியும் பாரதியாரிடம் வர முடியாது என்று மறுத்து விடுகிறார். பாரதி காந்தியை ஆசிர்வாதம் செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறார்.
பாரதியார் அங்கிருந்து போனவுடன், காந்தி பாரதியாரைப் பற்றி விஜாரிக்கிறார்.  அவரைப் பற்றி தெரிந்து கொண்டு, காந்தி பாரதியாரைப் பற்றி இப்படி சொல்கிறார் : üüஇவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.  இதற்கு தமிழ் நாட்டில் ஒருவரும் இல்லையா?ýý என்கிறார்.
உண்மையில் பாரதியாரைப் பற்றி மிகக் குறைவாகவே பலருக்குத் தெரிகிறது.  காந்தியின் பக்கத்தில் வீற்றிருந்த ராஜாஜியோ சத்தியமூர்த்தியோ பாரதியாரை காந்தியிடம் சரியாக அறிமுகப் படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.  
இதேபோல் திருவண்ணாமலையில் உள்ள ரமணரை பாரதியாரைப் பார்க்கப் போயிருக்கிறார்.  ரமணர் முன்னால் பாரதி ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.  பின் எழுந்து போய்விட்டார். அங்குள்ளவர்கள் பாரதியாரைப் பற்றி அவர் போனபின்தான் ரமணரிடம் சொல்லியிருக்கிறார்களாம்.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடும் பாரதி பார்த்தசாரதி கோயில் யானையை தன் சகோதரனாக எண்ணி பழகினார்.  எப்போதும் தேங்காய் பழம் கொண்டு போவார்.  இவைகள் சாமிக்காக இல்லை. யானைக்காக.  எப்போதும் யானையின் துதிக்கையில் கொடுத்துவிட்டு அதை வருடிக் கொடுப்பார்.  ஒரு முறை இதுமாதிரி நடந்து கொண்டிருக்கும்போது யானை எதிர்பாராதவிதமாக வெறிகொண்டு அவரை சேர்த்து பிடித்து இழுத்துத் தான் இருக்கும் கொட்டத்துக்குள் கொண்டு விட்டது.  யானை மேலும் அவரை காலால் மிதிப்பதற்கு முன் பாரதியாரிடம் உயிராக இருந்த குவளைக் கண்ணன் என்ற அன்பர் தான் பாரதியாரைக் காப்பாற்றினார்.
ஏன் இதுமாதிரியான ஒரு நிகழ்ச்சி பாரதியார் வாழ்வில் நடைபெற வேண்டும்.
இது ஒரு விபத்தாக இருந்தாலும், இந்த விபத்தால் அவர் மரணம் அடையாவிட்டாலும், மரணம் பாரதியாரை கவர்ந்து செல்ல ஒத்திகை செய்ததா?
நம்மைப் பொறுத்தவரை பாரதியார் ஒரு அடையாளம்.  அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவோம், அவர் நினைவுநாளை கொண்டாடுவோம்.  அவர் எழுத்துக்களை படிப்போம்.
விருட்சம் வெளியீடாக பாரதி நினைவாக பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  100 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.80 தான்.  விரும்புவர்கள்
navina.virutcham@gmail.com என்ற இ மெயிலில் தொடர்பு கொள்ளவும். தொலை பேசி எண் : 9444113205.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன