எதையாவது சொல்லட்டுமா……….99



அழகியசிங்கர் 
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன், நான் என் அப்பாவின் மேட் இன் இங்கிலாந்த் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஒரு குதிரை மேல் ஏறி ஓட்டுவதுபோல் மேற்கு மாம்பலத்திலிருந்து மயிலாப்பூர் வரை ஒரு நண்பரின் வீட்டிற்கு வாரம் ஒரு முறை தவறாமல் போவேன்.  பின் நானும் அந்த நண்பரும் கடற்கரைக்குச் செல்வோம்.  அங்கு வேறு சில நண்பர்கள் வந்திருப்பார்கள்.  நாங்கள் இலக்கியத்தைப் பற்றி பேசுவோம்.  இதெல்லாம் ஒரு காலத்தில் ஆத்மாநாம் நண்பர்களைச் சந்தித்த இடத்தில்தான் சந்திப்போம்.  
நான் என் நண்பரைப் பார்த்தபோது, ஆத்மாநாம் உயிரோடு இல்லை.  ஆனால் மற்ற நண்பர்களுடன் சந்திப்பு நிகழாமல் இல்லை.  எங்கள் கூட்டத்திற்கு ஞானக்கூத்தன்தான் எப்போதும் தலைமை.  என்றாவது கூட்டத்திற்கு அவர் வராவிட்டால் கூட்டம் களை இழந்ததுபோல் இருக்கும். 
நான் முதலில் சைக்கிளிலும் பின் லாம்பி ஸ்கூட்டரிலும் வாரத்தில் ஒருநாள் மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்கு பறந்து பறந்து வருவேன்.  பின் திருவல்லிக்கேணிக்கும் அடிக்கடி போவேன்.  பஸ்ஸில் போக எனக்குப் பிடிக்காது.  சைக்கிள், ஸ்கூட்டர்தான்.  
என் நண்பருக்கு நான் இப்படி வருவது ஆச்சரியமாக இருக்கும்.  அவரால் அதைக் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால் அந்த நண்பர் ஒருமுறை கூட மயிலாப்பூரிலிருந்து மேற்கு மாம்பலம் வர முயற்சி செய்ததில்லை.  ஏன் என்று காரணம் புரியாது?
இப்படி பல ஆண்டுகள் சந்திப்பது என்பது, கொஞ்சம் கொஞ்சமாக நின்றே விட்டது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  கூட்ட நெரிசல். இப்போது லாம்பி ஸ்கூட்டரை விட பிரமாதமான ஹ÷ரோ ஹோன்டாவும், காரும் இருக்கின்றன. ஆனால் நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை.  சந்திக்கவும் ஆர்வம் இருப்பதில்லை.  பரஸ்பரம் பேசுவதற்குக் கூட ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.  
ஏன் போனில் கூட பேச முடியாமல் போய்விட்டது.  ஒருவிதத்தில் பேசுவதெல்லாம் பேசி தீர்த்தாகி விட்டது போல் தோன்றுகிறது.  ஆனால் சில தினங்களுக்கு முன், பாகுபலி என்ற சினிமா படத்தை தேவி தியேட்டரில் 4மணிக்குப் பார்த்துவிட்டு, அண்ணாசாலையிலிருந்து, மாம்பலம் வந்து கொண்டிருந்தேன்.  பெரிய ஹோன்டா வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன்.  பின்னால் என் உறவினர் பையன்.  அவன் என்னை விட வெயிட்.  அதனால் கூட்ட நெரிசலில் வரும்போது, என் கை சுவாதீனமாக செயல் படவில்லை.  அதனால்,  வண்டியை குலுக்கி குலுக்கி ஓட்டியபடி சமாளித்தபடி வந்தேன்.   வீட்டிற்கு வந்தவுடன் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  மாம்பலத்திலேயே இருக்கும் நான் தேவி தியேட்டரில் படம் பார்த்தே ரொம்ப வருஷம் ஆகிவிட்டது.
நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போய் ஒருவரை சந்திப்பதே முடியாத விஷயமாக இப்போது மாறிவிட்டது.  என் நண்பர் தாம்பரத்தில் புதியதாக வ்ளாட் வாங்கியிருக்கிறார், புதிய இடத்திற்கு அவரைப் பார்க்கக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்.  என்னால் போகவே முடியவில்லை.  கூட்டம்.  நெரிசல்.  போக்குவரத்து பயம்தான். 
அதேபோல் என்னைப் பார்க்க வருகிற நண்பர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.  அவர்களை என் வீட்டிற்குக் கூப்பிட்டால் வரவே பயப்படுகிறார்கள்.   ஒரு எழுத்தாள நண்பரின் சிறுகதைத் தொகுதியை நான் புத்தகமாக பல ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு வந்துள்ளேன். அற்புதமான சிறுகதைத் தொகுதி அது.  ஆனால் அப் புத்தகம் என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்,  அப்படியே என்னிடம் இருந்துகொண்டு இருக்கிறது.   ஒவ்வாரு புத்தகக் கண்காட்சியின்போது ஒரு சில பிரதிகள்தான் விற்கும்.   ஐந்நூறு ரூபாய்க்குப் புத்தகம் விற்கும் காலத்தில், அப் புத்தகம் விலை வெறும் ஐம்பது ரூபாய்தான்.  ஆனால் மக்களுக்கு எது நல்ல இலக்கியம் என்று தெரிவதில்லை.  அப்புத்தகத்தை நண்பர் அவ்வப்போது 25 பிரதிகள் 50 பிரதிகள் கேட்டு என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு  இருப்பார்.  அவர் புத்தகம் கேட்கும்போது ஒவ்வொருமுறை பக்கத்தில் இருக்கும் அவருடைய உறவினர் வீட்டில் கொடுத்து அவரிடம் சேர்க்கச் செய்வேன்.  
இந்த முறை அவர் கேட்டபோது, அவரை வீட்டிற்கு வரச் சொன்னேன். அதுவும் அந்த நண்பர் அடுத்தநாள் கே கே நகரில் உள்ள அவர் உறவினர் வீட்டிற்கு வரப்போவதை அறிந்து அவரை அழைத்தேன்.  மேலும் நானும் ரிட்டையர்ட் ஆகி வீட்டில் இருப்பதால் அவரை வரச் சொன்னேன்.  அவர் கடுமையாக என் வீட்டிற்கு வர முடியாது என்று சொன்னது எனக்கு சற்று வருத்தமாக இருந்தது.  
அதன்பின் எனக்கு ஒன்று தோன்றியது.   நண்பர்கள் யாரையும் அவர்கள் வீட்டிற்குப் போய்ப் பார்க்கக் கூடாது என்றும், அதேபோல் நண்பர்கள் யாரையும் வீட்டிற்குக் கூப்பிடக் கூடாது என்றும், அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால், பொதுவான இடத்தில் அதாவது பூங்கா, ரயில் நிலையம், ஓட்டல், தெரு, அல்லது எதாவது இலக்கியக் கூட்டத்தில் சந்திப்பது என்றும் தோன்றியது.  அறுபது வயதில் நண்பர்கள் என்று யாரும் கிடையாது என்று புதிய தத்துவம் வேறு தோன்றியது.  நான் சொல்வது சரியா?

“எதையாவது சொல்லட்டுமா……….99” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன