புத்தக விமர்சனம் 4

அழகியசிங்கர்




நடைவெளிப் பயணம் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  40 வாரங்கள் குங்குமம் இதழில் தொடராக வந்திருந்த கட்டுரைத் தொகுப்பு இது. பலவிதங்களில் இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாராகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான்.
பொதுவாக புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது.  பெரும்பாலோருக்கு இது பிடிபடுவதில்லை.  புத்தகம் படிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அடுத்தப் புத்தகத்திற்கு அவர்களுடைய மனம் தாவிவிடும்.  முதல் புத்தகம் என்ன என்பதுகூட அவர்கள் முழுவதும் மறந்து விடுவார்கள்.
ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் திரும்பவும் படிக்கும்போது அப் புத்தகத்தின் நுன்ணுணர்வு நம்மிடம் வந்து சேரும்.
  எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியாகவே எனக்கு இப் புத்தகம் தோன்றுகிறது.  இதில் பலதரப்பட்ட மனிதர்கள், பலதரப்பட்ட இடங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டே போகிறார் அசோகமித்திரன்.
‘மேலும் படிக்க’ என்ற தலைப்பில் அமி அவர்கள் என்னன்ன புத்தகங்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.  அவர் குறிப்பிடும் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை படிப்வர்களுக்கு உண்டாக்குகிறார்.
இப்படி படிக்க என்ற பகுதியில் புத்தகங்களின் மேன்மையைப் பற்றிக் கூறும் போது, அசோகமித்திரன் இப்படியும் எழுதுகிறார் :
   `இந்தப் பகுதி வந்ததிலிருந்து நெருங்கிய நண்பர் முதல், என்னைத் துச்சமாகக் கருதுபவர்கள் வரை, அவர்கள் நூல்களைச் சிலாகித்து எழுத வற்புறுத்துகிறார்கள்.  நம்பகத்தன்மை என்று ஒன்று இருக்கிறது.  நான் மட்டுமே பாராட்டினால் போதுமா?  வெறும் புகழ்ச்சி நம்பகத்தன்மை இல்லாதது.  |  அவர் குறிப்பிடுவது எவ்வளவு உண்மை.
பல ஆண்டுகளாக நான் மேற்கு மாம்பலவாசி.  ஆனால் என் வீட்டில்அருகில் இருக்கும் பப்ளிக் ஹெல்த் சென்டரைப் பற்றிய விபரம் எனக்குத் தெரியாது. அதென்ன பழைய மாம்பலம் என்ற கட்டுரையில்  எம் சி சுப்பிரமணியன் மூலம் உருவான மருத்துவமனையைப் பற்றியும் குறிப்பிட்டு அசோகமித்திரன் எழுதி உள்ளார்.
  
`இன்று ஆஸ்பத்திரி என்பது ஓர் வாணிபச் சாதனம்.  ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் அதைக் கலப்படமற்ற தொண்டாகச் செய்யலாம் என்பதை எம்.சி நிரூபித்துக் காட்டினார்.  கடைசிவரை கதர் உடுத்தி முதிர்ந்த வயதில் தொண்டனாகவே உயிரைத் துறந்தார்.  என் அனுமானம், அவருடைய புகைப்படம் கூடக் கிடையாது.  அவரைப் பாரத்துநானும் பல ஆண்டுகள் கதரே அணிந்தேன்.’  என்று அவர் விவரித்துக் கொண்டு போகிறார்.  
இப்புத்தகம் இன்னொரு விதத்திலும் கவனம் பெறுகிறது. எந்தக் கட்டுரையை எடுத்துப் படித்தாலும், படிப்பவருக்கு பயனுள்ள கருத்து கிடைக்காமல் இருக்காது.
என்னை நெகிழ வைத்த கட்டுரை ஒன்று உள்ளது.  ‘ஜனதா  அடுப்பு’ என்ற கட்டுரை.  அதை வாங்கி வர டில்லியிலிருந்து ஆதவன் என்ற எழுத்தளரைக் கேட்டுக்கொள்கிறார்.  அவருக்கு சிரமம் தரக் கூடாது என்று சென்னை சென்டரலில் தில்லி ரயிலுக்காக அமி காத்துக் கொண்டிருக்கிறார்.  வண்டி அன்று பார்த்து மூன்று மணிநேரம் தாமதமாக வந்தது.  அதைவிட வருத்தம் ஆதவன் ஜனதா அடுப்பு வாங்கி வரவில்லை என்பதுதான்.  இக் கட்டுரையில் எந்த இடத்திலும் ஆதவனை குறை கூற வில்லை.  தன் விதியை நினைத்து வருந்தவுமில்லை.  
அசோகமித்திரரன் கட்டுரையில் அவ்வப்போது நகைக்சுவை தன்மையும் வெளிப்பட்டுக் கொணடிருக்கும்.  தி.க.சியின் தங்கத் தாமரை நாட்கள் என்ற கட்டுரையில், ‘என் பக்கத்து வீட்டுக்காரர், “உங்களுக்குத் தினம் இவ்வளவு தபால்கள் வருகின்றனவே, என்னிடமும் ஒரு பத்திரிகையைத் தாருங்களேன்,” என்று கேட்டார்.  நான் அவரிடம் ‘சோவியத் பலகனி’ சில இதழ்கள் கொடுத்தேன்.  அவர் என்னோடு பேசுவதையே விட்டுவிட்டார்’  இப்படி எழுதுவதுதான் அசோகமித்திரன்.  
அசோகமித்திரனின் கதைப் புத்தகத்தைப் படித்தாலும், கட்டுரைப் புத்தகத்தைப்படித்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. 
கட்டுரைகளைக் கூட கதைகள் மாதிரிதான் அவர் எழுதுவார். வாசகனைக் கவர்ந்திழுக்கும் திறமையை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
நடைவெளிப் பயணம் – கட்டுரைத் தொகுதி – அசோகமித்திரன் – பக்கம் : 168 – விலை ரூ. 130 – வெளியீடு : சூரியன் பதிப்பகம், 229 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600 004 
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன