அழகியசிங்கர்
இந்த அக்டோபர் மாதத்தின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ரொம்ப தாமதமாகி விட்டது. அந்த மாதம் தீபாவளி மாதம். தீபாவளி வருவதால் பத்திரிகைகளில் ஏராளமான கதைகள். மேலும் தீபாவளி மலர்கள் வெளியிட்ட கதைகள் வேறு.
நான் தீபாவளி மலர்களில் வெளியிட்ட கதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு மாதமும் சிறுகதைகளைப் படிக்கும்போது உற்சாகம் அடைகிறேன். நல்ல தரமான கதைகளை சில பத்திரிகைகளில் தொடர்ந்து வாசிக்க முடிகிறது.
இப்படி வாசிக்கிற கதைகளில் பத்திரிகை கதைகளிலிருந்து இலக்கியத் தரமான கதைகளைப் பிரித்து எடுக்க வேண்டி உள்ளது. சில பத்திரிகைகளில் இலக்கியக் கதைகளே வர வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இதை நான் தவறாகக் கருதவில்லை. அப்படிப்பட்ட கதைகளையும் வாசிகக வேண்டும். அப்படிப்பட்ட கதைகளிலும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்த வெகு ஜன வாசகர்கள் விரும்பிப் படிக்கும் கதைகள் என்று தனிப் புத்தகமாகக் கொண்டு வரலாம்.
பொதுவாக கதைகள் என்ற அம்சம் குறைந்து போவதற்கு வெகுஜன இதழ்கள்தான் காரணம். சில பத்திரிகைகள் ஒரு பக்கத்திற்கு கதைகளை வெளியிடுகின்றன. இதை அறவே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இது மாதிரி ஒரு பக்கக் கதைகளை நாம் வளரவிட்டால், கதைகள் என்றால் ஒரு பக்கத்துக்குமேல் படிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ள வேண்டி வரும்.
இந்த அக்டோபர் மாதம் பல அருமையான கதைகளை நான் படிக்க நேர்ந்தது. நான் ஒரு கதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைத்தாலும், நான் ரசித்த பல கதைகளை தேர்ந்தெடுக்க முடியாமல் போவதற்கு சற்று வருத்தம்தான் எனக்கு.
பாவண்ணன் என்ற எழுத்தாளர் இரண்டு அருமையான கதைகளை எழுதி உள்ளார். 15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் எழுதிய üஅப்பாவின் சைக்கிள்ý என்ற கதை, இன்னொரு கதை உயிர்மை அக்டோபர் இதழில் வெளிவந்த üபள்ளிக்கூடம்ý என்ற கதை. இரண்டு கதைகளும் உருக்கமான கதைகள். சைக்கிளே ஓட்டத் தெரியாத முத்துசாமி. அவனுடைய அப்பா அவனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்க முடியாமல் தோல்வி அடைகிறார். அவர் சைக்கிள் கற்றுத் தருகிறேன் என்று அவனை அடித்தது அவன் ஞாபகத்தில் எப்போதும் இருக்கிறது என்று தோன்றுகிறது. அவன் அப்பா அவன் அம்மாவுடன் சண்டைப்போட்டு அடிக்கடி ஓடிப் போகிறார். ஒரு முறை திரும்பி வராமலே ஓடிப் போகிறார். அந்தக் குடும்பம் அவன் அப்பா இல்லாமலே முன்னேறுகிறது. அவன் மேலே படிக்க சைக்கிளை விற்றுத்தான் பணம் ஏற்பாடு செய்கிறாள் அவள் அம்மா.
அவருடைய இரண்டாவது கதை பள்ளிக்கூடம். அக்டோபர் மாதம் உயிர்மையில் வெளிவந்த கதை. இதுவும் உருக்கமான கதை. எப்படி பள்ளிக்கூடம் ஒரு சின்ன ஊரைவிட்டு உருமாறிப் போய்விடுகிறது என்பதுதன் கதை. ஆங்கிலக் கல்வி வந்தவுடன், தமிழில் பாடம் நடத்தியப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மாறிப் போய்விடுகின்றன. கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்க யாரும் தயாராய் இல்லை. அதனால் வேறு பல விஷயங்கள் கிராமத்தில் வந்தாலும், பழைய பள்ளிக்கூடங்களை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. பாவண்ணன் எழுதிய இரண்டு கதைகளும் சிறப்பாக எழுதப்பட்ட கதைகள்தான்.
அதே உயிர்மையில வெளிவந்த இமையம் எழுதிய பரிசு என்ற கதை. ரொம்பவும் நீளமான கதை. உருக்கமான கதை. படிப்பவர்ளின் கண் கலங்க வைத்துவிடும்.
தீராநதி அக்டோபர் மாத இதழில் அபிமானியின் சரண் என்கிற கதை. பெருங்கொளத்தைச் சேர்ந்த சேது என்பவன் சரோஜா வீடு தேடி வந்திருந்தான். குடித்திருந்தான். அவனுக்குத் தேவை ஒரு நூறு ரூபாய்தான். சண்டியத்தனம் பண்ணி அலைபவன். சரோஜா தெருவில் உள்ளவர்களை மிரட்டி பணம் வாங்குவான். அவனுக்குக் கொடுக்க நூறு ரூபாய்க் கூட இல்லை என்று மறுத்துவிடுகிறாள் சரோஜா. சாப்பிட சோறுதான் இருக்கிறது என்கிறாள். அதையாவது போடு என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான். ஜாதி வேறுபாடால் பச்சைத் தண்ணீக் கூட குடிக்காத சேது, வேற வழியில்லாமல் சரோஜா வீட்டில் சோறு சாப்பிடுகிறான். இக் கதையை நுணுக்கமாக எழுதி உள்ளார் அபிமானி.
காக்கைச் சிறகினிலே என்ற அக்டோபர் இதழில் அபிமானியின் இன்னொரு கதை. üஉறவுý என்கிற கதை. இந்தக் கதையும் ஏற்கனவே எழுதிய சரண் கதை மாதிரி உள்ளது. ஜாதி பிரச்சினையைப் பிரதானப்படுத்தி இருகதைகளையும் எழுதி உள்ளார்.
ஆனந்தவிகடன் 22.10.2014 இதழில் வெளிவந்த அகஸ்தியம் என்கிற வண்ணதாசன் கதை. உறவு முறைகளைப் பற்றி தனுஷ்கோடி என்பவரைப் பற்றி சுற்றி சுற்றி வருகிறது கதை. ரொம்பவும் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை. அகஸ்தியர் அத்கையைப் பற்றி எழுதும்போது, ஏன் தனுஷ்கொடியுடன் அவளுடைய உறவு முறிந்து போயிற்று என்பதை வெளிப்படுத்தாமல் வெளிப்படுத்துகிற கதையாக இருககிறது.
நான் மேலே குறிப்பிட்ட கதைகள் எல்லாம் எனக்குப் பிடித்த கதைகள்தான். ஒரு மாதத்தில் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும்போது, மற்ற கதைகளும் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கு சளைத்தது இல்லை என்பதுபோல் தோன்றுகிறது.
29.10.2014 ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த பெருமாள் முருகனின் üஆசை முகம்ý என்ற கதையை அக்டோபர் மாதச் சிறந்த சிறுகதையாகத்தான தேர்ந்தெடுத்துள்ளேன்.
சகிக்கமுடியாமல் நிஜமான வாழ்க்கை இருந்தாலும் மானசீகமான ஒரு வாழ்க்கையை ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். சரஸ்வதி தனக்குப் பிடித்த அரவிந்த சாமி என்ற நடிகருடன் இருப்பதுபோல் கற்பனை செய்கிறாள். மற்றவர்கள் கிண்டலுக்கு ஆளாகிறாள். அரவிந்தசாமியை நினைத்து திருமணம் செய்துகொள்ள மறுக்கிறாள். யாரையும் அவள் ஏற்றெடுத்துப் பார்ப்பதில்லை. அவள் மனதில் அரவிந்தசாமி குறித்து உருவம் சிதையும்போது, அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான நிலைக்கு மாறுகிறாள்.
சிறப்பான சிறுகதையை எழுதிய பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்.