கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்
ஐராவதம்
கரகரத்த உன் குரல்
கதிரியக்கத் தாது எனக்
காதில் பாயும்;
ஊர்ந்து உதறும் உன் உடல்
உயிரியக்க வேகமென
மனசில் படும்.
ஆத்மாவின் அழுகுரலாய்
அனாசாரத் தீங் கொலியாய்
வறண்ட சில வயோதிகர்
வர்ணிப்பர் உன் பாட்டை.
சாத்திரம் கெட்ட நாம்
உன் நாதக் குலைவினை
சாதனையாய் ஏற்றிடுவோம்.
நாதம் பிரம்மம் எனில்
நாதக்குலைவுதான் என்ன?