அழகியசிங்கர்
ஆகஸ்ட் மாதத்தில் வெளியான கதைகளில் என் மனதுக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன். அவற்றில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் தோன்றியது. கதைகளைப் படிக்க நான் தேர்ந்தெடுத்தப் பத்திரிகைகளின் விபரத்தையும் இங்கே கொடுக்க விரும்புகிறேன்.
1. தினமணி கதிர் 2. தினமலரின் வாரமலர் 3. கல்கி 4. அமுதசுரபி 5. ஆனந்தவிகடன் 6. கணையாழி 7. தீராநதி 8. உயர்மை 9. காலச்சுவடு 10. உயிர் எழுத்து 11. அந்தி மழை 12. அமிருதா
என் கண்ணில் பட்ட சிறுகதைகளை வெளியிடும் பத்திரிகைகள்தாம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகைகள். முதலில் ஆனந்தவிகடனில் வெளிவந்த கதைகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கதை விதம் ஒரு மாதத்தில் வரும் ஐந்து வாரங்களில் ஐந்து கதைகளைப் படித்தேன். நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை வரிசை என்ற பெயரில் சில இதழ்களில் ஒரு சிறுகதை வெளியிடுகிறார்கள். ஆனால் ஒரு இதழில் ஒரு கதைக்கு மேல் வெளியிடுவதில்லை. முதலில் இக்கதைகளைப் படிக்க அலாதியான பொறுமை அவசியம். திறந்த மனத்துடன் கதைகளைப் படிக்க உட்கார வேண்டும்.
இன்றைய காலக்கட்டம் சிறுகதைகளை வரவேற்காத காலகட்டமாகத் தோன்றுகிறது. இன்னும் சில பத்திரிகைகள் ஆன குமுதம், குங்குமம் சிறுகதைகளையே வெளியிடுவதில்லை. அதனால் சிறுகதைகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு என் வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நானே இதுமாதிரி அமர்ந்து கொண்டு இத்தனைக் கதைகளைப் படித்திருக்க மாட்டேன். எல்லாம் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்ற நண்பரால் ஏற்பட்டதுதான் இது. இவர் சிறுகதைகளையே படித்துக் கொண்டிருப்பார். சதா சர்வக்காலமும் பல சிறுகதைகளைப் படித்துவிட்டு அது குறித்துப் பேசிக் கொண்டிருப்பார். அவர்தான் ஒரு நாள் திடீரென்று போன் செய்தார். “சார், நாம எதாவது செய்ய வேண்டும்?” என்றார்.
“அதான் கூட்டம் போடறோமே…அது எவ்வளவு மாதம் ஓடறதுன்னு பார்ப்போம்,”என்றேன்.
“இல்ல சார்..எதாவது பரிசு கொடுக்க வேண்டும்,” என்றார்
“அப்படின்னா சிறுகதைக்குக் கொடுப்போம். அதைத்தான் யாரும் சரியா கவனிக்க மாட்டேங்கிறார்கள்,”என்றேன்.
ஒவ்வொரு மாதமும் எங்களுக்குத் தெரிந்த சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து எங்களால் முடிந்த ஒரு பரிசுத் தொகையைக் கொடுப்பதாக முடிவு எடுத்தோம். ஆடிட்டர்தான் இந்தப் பொறுப்பைஏற்றுக் கொண்டார். இலக்கியச் சிந்தனை ஏற்கனவே செய்யறதுதான். அந்தக் காலத்தில் இலக்கியச் சிந்தனை சிறு பத்திரிகைகளில் வருகிற கதைகளைத் தேர்ந்தெடுக்காது. நான் சிறுபத்திரிகைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று நினைக்கிறவன்.
கொஞ்சம் யோசித்துப் பாரத்தால், பெரும் பத்திரிகையும் இல்லாமல் சிறுபத்திரிகையும் இல்லாமல் இயங்கிகக் கொண்டு வருகிற நடுத்தரப் பத்திரிகைகள் சிறுகதைகளை முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரம் செய்து வருகின்றன. அதேபோல் தினமணி கதிர், தினமலர் போன்ற பத்திரிகைகளும் சிறுகதைகளைப் பிரசுரம் செய்கின்றன.
இந்த முறையில் ஜøலை மாதம் 16.07.2014ல் வெளிவந்த ஆனந்தவிகடன் கதைக்குப் பரிசு கொடுத்தோம். எஸ் செந்தில்குமார் என்பவர் காணும் முகம் தோறும் என்ற கதையை எழுதி இருந்தார். அது சிறப்பான கதையாகத் தோன்றியது. அதற்கு எங்களால் முடிந்த கதைக்கான பரிசை அவர் கணக்கிற்கு போய்ச் சேரும்படி அனுப்பி விட்டோம். அவர் மதுரையில் இருப்பவர். சென்னையில் இருக்கும் எழுத்தாளராக இருந்தால் இந்த மேடையில் அவரை அழைத்துக் கொடுக்க உத்தேசமாக இருந்திருக்கும்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் எனக்குப் பல கதைகளைப் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. பலர் திறமையாக பல கதைகளை எழுதிஇருந்தார்கள். அதை முடிந்தவரை வரிசைப் படுத்த விரும்புகிறேன்.
24.08.2014 தினமணிகதிர் இதழில் செல்வ கதிரவன் எழுதிய ச(த)ன்மானம்
06.08.2014 ல் ஆனந்தவிகடனில் எழுதிய போப்பு அவர்களின் நான்காமமுறைப் பயணம் என்ற கதை
அம்ருதா ஆகஸ்ட் மாதம்இதழில் வெளிவந்த றெமிலா ஜெயன் எழுதிய சுதர்சினி என்ற கதை. அதே இதழில் வெளிவந்த பாவண்ணனின் இரு வழிகள் என்ற கதை.
உயிர் எழுத்து ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த அபிமானியின் இடைச்செருகல் என்ற கதை.
காலச்சுவடு ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த அ முத்துலிங்கம் எழுதிய நான்தான் அடுத்த கணவன் என்ற கதை.
உயிர்மை ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த எம்பாவாய் என்கிற எஸ் ராமகிருஷ்ணன் கதை.
தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2014 பரிசுப் பெற்ற கதை. தினமணியில் எதிர்பார்த்தபடி கதையும் இருக்கிறது. நகைச்சுவை உரை நிகழ்த்த பணம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்த நன்மாறன். அதற்கான ஒத்திகையை பார்க்கிறான். தனியார் நிறுவன மனமகிழ் மன்றத்தின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள செல்கிறான். அங்கு கூடிஉள்ளவர்கள் இவன் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பொருட்படுத்தாமல் அங்குள்ளவர்கள் குடிக்கச் சென்று விடுகிறார்கள். அவர்கள் சன்மானமாய்க் கொடுக்கும் தொகை அதிகமாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் வந்து விடுகிறான். அவனுக்கு பணத் தேவை இருந்தாலும், யாரும் அவனுடைய நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கப் போவதில்லை என்ற எண்ணம் அவனை அந்த இடத்திலிருந்து வரவழைத்து விடுகிறது.
06.08.2014 ஆனந்தவிகடனில் வெளிவந்த போப்பின் நான்காம்முறைப் பயணம் என்ற கதை. இதன் அர்த்தம் என்ன என்பது புரியவில்லை. மீராவுடன் உள்ள உறவு முறிந்துவிடுகிறது. விவாகரத்து நடந்தபின்னும் அவள் பெயரில் உள்ள கடைப் பெயரை மாற்ற மனம் வரவில்லை. அனிதா என்கிற காதலி நண்பனாக மாறியபின் அவளுடன் உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை. அவளைத் திருமணம் செய்துகொள்ள இரண்டு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. கதையை நுணுக்கமாக நகர்த்திக்கொண்டு போகிறார் போப்பு. படிக்க சற்று வித்தியாசமாக எனக்குப் பிடித்த கதை இது.
அம்ருதா ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த சுதர்சினி என்ற றொமிலா ஜெயன் எழுதிய கதை. இது மொழிபெயர்ப்பு கதையா அல்லது இந்தப் பெயரில் யாராவது தமிழில் கதை எழுதி உள்ளார்களா என்பது தெரியவில்லை. சுதர்சின் என்ற பெண் ஜெயிலில் தண்டனை அனுபவத்திக் கொண்டிருக்கிறாள். பெண் கைதிகளின் தாதாக்களுக்கு உதவி செய்பவளாக இருக்கிறாள். தளுக்குமொளுக்கு முதலாளி அக்கா குளிப்புக்கு ஆயத்தமாக வருவாள். ஜெயிலை விட்டு விடுதலை ஆகி வெளியே போனாலும் திரும்பவும் ஜெயிலுக்குள் வருவதையே இந்த சுதர்சினி. சிறைச்சாலைப் பற்றியும், பெண்கள் சிறையில் படும் அவதிகளையும் விவரிக்கும் இந்தக் கதை வித்தியாசமான கதைதான். கதை முடிவில் எழுத்தாளர் ‘அவளின் ஆத்மாவின் ஓலம் ஒரு பிரளயம் போல’ என்று முடிக்கிறார்.
அதே இதழில் வெளியான பாவண்ணனின் இரு வழிகள் என்ற கதை. பெண்ணிற்கும் அம்மாவிற்கும் இடையே ஆன போராட்டம். அம்மா பெண்ணை தன் வழியில் திருப்ப முயற்சி செய்கிறாள். பெண் படித்திருப்பதால் ஒரு கௌரவமான வேலையைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாள். இதனால் பண வரவு குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாள். பெண் பிடிவாதமாக இருக்கிறாள். அம்மாவிற்கு அவள் மீது உள்ள கோபம் தீரவில்லை. சரளமான நடையில் பாவண்ணன் இக் கதையை எழுதிக்கொண்டு போகிறார்.
உயிர் எழுத்து ஆகஸ்ட் மாத இதழில் அபிமானியின் இடைச்செருகல் என்ற கதை. சனங்கள் நிரம்பிய ஒரு பேரூந்தில் பயணச் செய்யும் ஒரு பெண்ணின் கதை இது. வெறும் காய்கறிகளை வாங்கிக்கொண்டு அவள் ஊருக்குச் செல்லும் வெள்ளையம்மாள், கால் வலியுடன் அவதிப்படுகிறாள். உட்கார இடம் கிடைக்காத பஸ்ஸில் நின்றுகொண்டு வருகிறாள். பஸ்ஸிற்குள் நடக்கும் போராட்டம்தான் இந்தக் கதை. ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தையை மடியில் வைத்துக்கொள்ளாமல், ஒரு சீட்டில் படுக்க வைத்து விடுகிறாள். வெள்ளையம்மாள் ஒரு வயதான கிழவி உட்கார சீட்டு கிடைக்காதா என்று பார்த்துக்கொண்டிருந்தவள், குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு இன்னொருவருக்கு இடம் கொடு என்று குழந்தையை வைத்துக்கொண்டிருந்தவளுடன் சண்டை போடுகிறாள். சண்டையில் வெற்றி அடைந்தாலும், அந்த இடத்தில் தடுமாறி விழுந்த கிழவியை உட்கார வைக்க முடியவில்லை. பஸ் பயணத்தில் ஏற்படுகிற போராட்டத்தை கதை விவரித்துக்கொண்டு போகிறது. திறமையாக எழுதப்பட்ட கதை.
காலச்சுவடு ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த அ முத்துலிங்கம் அவர்களின் நான்தான் அடுத்த கணவன் என்ற கதை. பத்மப்ரியா என்ற பெண்ணிற்காக ஏங்கும் இளைஞன். அவள் யாருக்காகவும் ஏங்கவில்லை. கூடா நட்புதான் இந்தக் கதை. இக் கதையிலும் தீகார் ஜெயிலைப் பற்றிய விபரசம் வருகிறது. பாஸ்போர்ட்டில் தப்பு செய்யற கதை.
அந்திமழை ஆகஸ்ட் மாத இதழில் வெளிவந்த சீனிக் கொய்யா என்கிற மேலாண்மை பொன்னுசாமி எழுதிய கதை. சீமை கொய்யாவை முன்னிட்டு நல்ல குருசாமிக்கும் ஏவார குருசாமிக்கும் மனப் போராட்டமே கதை. சமீபத்தில எழுதப்படுகிற பெரும்பாலான கதைகளில் மேலாண்மை பொன்னுசாமி ஏமாற்றுபவர் ஏமாந்து போகிறவர் என்ற தொனியில் எழுதிக்கொண்டு போவதாக தோன்றுகிறது.
மேலே குறிப்பிட்ட கதைகள் எல்லாம் என் மனதிற்கு பிடித்தக் கதைகள்தான். உள்ளுக்குள் நுழைந்த கதைகள். ஆனால் இன்னும் சில பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை என்னால் முழுவதுமாக உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னும் சில கதைகளோ மேலோட்டமாக தெரிந்தன.
இக் கதைகளையெல்லாம் தாண்டி உயிர்மை ஆகஸ்ட் மாதம் வெளிவந்த üஎம்பாவாய்ý என்ற எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய கதை என் மனதை வெகுவாக பிடித்தது. ரொம்பவும் வித்தியாசமாய் எழுதப்பட்ட கதை. ஆகஸ்ட் மாதம் வெளிவந்த கதைகளில் இக் கதைதான் சிறப்பான கதையாக நான் கருதுகிறேன்.
மேலே குறிப்பிடப்பட்ட அத்தனைக் கதைகளையும் சிறப்பாக எழுதப் பட்டவை. இக் கதைகளில் ரொம்பவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை ராமகிருஷ்ணனின் எம்பாவாய் என்ற கதை.
ராமகிருஷ்ணன் கதைகள் எழுதுவதில் ரொம்பவும் நிபுணத்துவம் உள்ளவர். எளிதான முறையில் எல்லோரும் வாசிக்கும்படி அற்புதமாக கதைகளை எழுதி விடுகிறார்.
ஆகஸ்ட் மாத சிறந்த கதையாக ராமகிருஷ்ணனின் எம்பாவாய் என்கிற கதையை விருட்சம் சார்பில் தேர்ந்தெடுத்துள்ளோம். நன்றி.
நல்ல தேர்வு .
– சுப்ரா .
http://subra56.blogspot.in/