மூன்று கவிதைகள்

நவம்பர் 1970   –  கசடதபற இரண்டாவது இதழ்

நகுலன்

வட்டம் 1

வாழ மனமில்லை
சாக இடமில்லை

வானில் மேகமில்லை
ஆனால்
வெயிலும் மடிக்கவில்லை

கந்தைக் குடைத் துணியெனக்
கிடக்கும்
தன்னினமொன்றைச்
சுற்றிச் சுற்றி வருமிக்
கறுப்பின் ஓலம் போல்

செத்துக் கிடக்கும்
சுசீலாவை
வட்டமிட்டு
வட்டமிட்டு
வட்டமிட்டு…..

வட்டம் 2

பேனாவுக்கு மையிட்டு
அதன் முனைதீட்டி
வெள்ளைக் காகிதத்தை
மேசை மீது விரித்து
எழுத வருங்
கால்
பேனாவின் முனை
மூளையின் மண்டைக்
கனத்தில்
குடை சாயும்
வெள்ளைக் காகிதத்தின்
வைரத் திண்மையில்
அதன்
கூர் மழுங்கும்;

சேலை அவிழ்க்
கலாமென்றா
லோ
சுசீலாவும்
செத்துக் கிடக்கிறாள்

வட்டம்  3

என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை
ஏதோ நாவல்
ஏதோ கவதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையின்
ஏக வாரிசு;
என்றாலும் என்ன?
சுசீலாவே
செத்துவிட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இல்லாமல் போனால்
தான்
                           என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன