கைகளில் பிசுபிசுக்கும் இனிப்பின் நிறம்

  தேனு
இனிப்பு வாங்கி உள்நுழையும் எதிர்பார்ப்பை
உடைக்க ஓரிரு சொற்களையோ கற்களையோ
என்னுள் எப்பொழுதுமே தேக்கி வைத்திருக்கிறாய்..
போதும் என்ற சொல் பந்து
மீண்டும் மீண்டும் சுவர்களில் விழுந்து தெறிக்கிறது,
படியும் காவி நிற வட்டங்கள்
அச்சொல்லின் கூட்டு எண்ணிக்கையென
பறைசாற்றிக் கொள்ள..
ஒவ்வொரு சொல்லாய்
ஒவ்வொரு சொல்லடுக்காய்
மென்மேலும் பரவி மெல்லியதொரு அறையென உருவாகும்
சொல்வன்மம் உச்சத்தை உணர மட்டும் இல்லை..
ஒரு வனத்தின் அடர்த்தியைக் கொண்ட
சொல்லறையின் கதவுகள்
யாருக்கெனவும் திறவாது என்றபடி
சொற்களைத் தின்ன துவங்குகிறது அகலவாய் கொண்ட இனிப்பு..
கதவிடுக்கு திறவும் தருணத்தில்,
தேக்கி வைத்த சொற்களையும் உண்டபடி

கை நிறைய படிந்திருக்கிறது
இனிப்பின் பிசுபிசுப்பு நிறம் மட்டும்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன