அழகியசிங்கர்
கோவிந்தன் ரோடில் நானும் மனைவியும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம். ஒரு கடையின் முன் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருந்தது. அது ஒரு டாஸ்மாக் கடை எல்லோரும் குடிக்க காத்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் பழக்கத்தை எல்லோராலும் ஏன் விடமுடியவில்லை. ஒரு விருந்து என்றால் ஒரு கூட்டம் என்றால் நான்கைந்து பேர்கள் சேர்கிறார்கள் என்றால் புகையும் மதுவும் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை.
நான் கல்லூரி படித்தக் காலத்தில் ஒரு முறை ஐஐடியில் படிக்கும் சில மாணவர்களைச் சந்திக்கச் சென்றேன். எல்லோரும் பாட்டில்களோடு இருந்தார்கள். எல்லோரும் புகைத்தார்கள், குடித்தார்கள். நானும் குடித்தேன். எனக்கு அது முதல் அனுபவம். எல்லோரும் ஏன் இப்படி குடிக்கிறார்கள் என்றுதான் குடித்தேன். நான் வீடு திரும்பும்போது இரவு பதினொரு மணி மேல் ஆகிவிட்டது. வீட்டு மொட்டை மாடியில் உள்ள அறையில் படுத்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் வயிற்றைப் புரட்டியது. நான் குடித்ததை எல்லாம் வாந்தி எடுத்தேன். அன்றிலிருந்து நான் குடிப்பதையே நிறுத்தி விட்டேன்.
என் அலுவலக நண்பர்கள் பலரும் குடிப்பார்கள். புகை பிடிப்பார்கள். அவர்கள் முன் நான் அமர்ந்திருக்கிறேன். ஒருமுறை ஒரு அலுவலக நண்பனுடன் குற்றாலம் போகும்போது, அவன் அதிகப் போதையில் இருந்தான். அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்ணை அதிகமாக நேசிப்பதாகவும், அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னான். குடியில் அவன் கண்கலங்கிப் பேசினான். அந்தப் பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்தபோது அவன் சொன்ன வார்த்தை இன்னும் ஞாபகத்திலிருந்து நீங்கவில்லை. ‘என் தலையில் கட்டிட்டுப் போயிட்டாங்கப்பா,’ என்றான். அவன் குடியில் உளறியது திரும்பவும் ஞாபகத்தில் வந்தது.
என் மனைவியுடன் நான் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தேன். மனைவியிடம் சொன்னேன். “நான் சிகரெட் பிடிப்பேன்.” என்று. அவள் நம்ப மறுத்தாள். நான் வேண்டுமென்றே ஒரு கடைக்குச் சென்று ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டேன். நான் சிகரெட் பிடித்து காட்டியபிறகும் அவள் நம்பவில்லை. நான் சிகரெட் பிடிப்பவன் என்று.
பிரமிள் அடிக்கடி என்னைச் சந்திப்பார். நானும் அவரும் பல இடங்களுக்குச் சுற்றிக் கொண்டிருப்போம். ஒருமுறை கூட அவர் சிகரெட் பிடித்து, மது அருந்தி நான் பார்த்ததில்லை. ஆனால் அவருடன் ஆரம்ப காலத்தில் பழகிய இலக்கிய நண்பர் ஒருவர், ‘அவர் கஞ்சா அடிப்பார்,’ என்று என்னிடம் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை.லாகிரி வஸ்துகளுக்கு மயங்காதவர்கள் இல்லை. பிரமிள் விதிவிலக்காக தென்பட்டார்.
ஆத்மாநாமின் ஒரு கவிதை வெளியேற்றம். அக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.
சிகரெட்டிலிருந்து
வெளியே தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே
ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் இக் கவிதையைப் படித்து
பிரமிள் எல்லோர் முன் விம்ம ஆரம்பித்தார். பிரமிளின் இந்தச் செய்கை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் அவ்வளவு எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர் அல்லர். எதிராளியை பார்த்தவுடன் மிரட்டும் தன்மையைக் கொண்டவர். நான் அறிமுகப் படுத்தும் பல நண்பர்களை அவர் கிண்டல் செய்யாமல் இருக்க மாட்டார்.
ஆத்மாநாம் பல பழக்கங்களுக்கு அடிமை ஆனதால்தான் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குப் போய்விட்டார். ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு வந்த ஆத்மாநாம் கையை ஒரு முறை குலுக்கினேன். அவர் கை இயல்பாய் இல்லை. நடுங்கிக் கொண்டிருந்தது. பிரமிளிடம் கேட்டேன், üஏன் ஆத்மாநாம் கைகள் நடுங்குகின்றன,ýஎன்று. üஅவர் டிரக் அடிக்கிறார்,ý என்றார் பிரமிள்.
திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத் குமாரைப் பார்க்க நானும் பிரமிளும் ஒருமுறை போயிருந்தோம். யோகி ராம் சுரத் குமார் பாஸிங்ஷோ என்ற சிகரெட்டை பிடித்துக்கொண்டே இருந்தார். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு யோகியார் சிகரெட் பிடிக்கலாமா என்பதுதான் என் சிந்தனை. சிகரெட் தீர்ந்தவுடன், யோகி ராம்சுரத் குமார் அவருக்கு உதவியாய் இருந்த பையனிடம் ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு வரச் சொன்னார். பிரமிள் உடனே என்னைப் பார்த்து, ‘நீங்கள் சிகரெட் வாங்க பணம் கொடுங்கள்,’ என்று கட்டளை இட்டார். நானும் பணம் எடுத்து யோகியாரிடம் நீட்டினேன். யோகி ராம்சுரத்குமார் பணத்தை என்னிடமிருந்து வாங்கிக்கொள்ள வில்லை. பிரமிள் கையில் கொடுக்கச் சொல்லி அவர் மூலம் வாங்கிக்கொண்டார். அந்தச் சந்திப்பில் இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் யோகியார் நான் கொடுத்த பணத்தை வாங்க மறுத்தார்? என்ற கேள்வி இன்று வரை என்னைக் குடைந்துகொண்டே இருக்கிறது. இதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
நகுலன் ஒருமுறை அவருடைய சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார். அவரை என் வீட்டிற்கு அவர் சகோதரர் கொண்டு விட்டு சென்று விட்டார். எங்கள் வீட்டில் கொஞ்ச நேரம் இருந்தபிறகு அவரை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றேன். போகும் வழியில் ஒரு மதுபானம் விற்கும் கடையில் நின்று பிராந்தி ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டார். அந்தக் கடையில் முன் நிற்கும் வாடிக்காளர்களைப் பார்க்கும்போது நகுலன் வித்தியாசமாகத் தெரிந்தார். நகுலனால் குடிக்காமல் இருக்க முடியாது. இரவு முழுவதும் குடித்துவிட்டு தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பார். நகுலனால் கடைசிவரை இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. உண்மையில் அவர் குடிப்பதை நிறுத்தியிருந்தால்தான் ஆபத்து ஏற்பட்டிருக்கும். அவரைப் பார்க்கச் செல்லும் நண்பர்கள் ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டு போகாமல் இருக்க மாட்டார்கள்.
மது அருந்துவதும், சிகரெட் பிடிப்பதும் தவறா? அப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் பார்க்கும் பலர் இந்தப் பழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமல் அவதிப் படுகிறார்கள் என்று தோன்றும். உண்மையில் ஒவ்வொருவருக்கும் எதாவது பழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும். என் நண்பர் ஒருவர் ஜர்தா பீடா போடாமல் இருக்க முடியாது. அந்தப் பாக்கெட்டுகளை அவரால் வாங்கிக் கொள்ளாமல் போய்விட்டால் அவரால் இருக்கவே முடியாது.
தீவிர இலக்கியத்தில் ஈடுபடும் பெண்கள் கூட புகை பிடிக்க விருப்பப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் அண்ணாசாலையில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டு, வெளியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி ஊதியதைப் பார்த்திருக்கிறேன்.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் என் தந்தை தெருவில் யாராவது சிகரெட் பிடித்துக்கொண்டு போனால், கூப்பிட்டு நிறுத்தி, சிகரெட் பிடிப்பது கெடுதல் என்று கூறுவது வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசிலர் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் முறைப்பார்கள். ஒருவர் என் அப்பாவைப் பார்த்து, ‘மைன்ட் யுவர் பிஸினஸ்’ என்று ஒருமுறை சத்தம் போட்டார். ‘ஐ மைன்ட் மை பிஸினஸ். யு மைன்ட் யுவர் ஹெல்த்’ என்றார் பதிலுக்கு அப்பா. அவர் வெற்றிலைப் பாக்குக்கூட மெல்ல மாட்டார்.
தினமும் காலையில் நடைபயிற்சி செய்யும்போது என்னுடன் இன்னொரு நண்பரும் வருவார். இருவரும் பேசிக்கொண்டே நடை பயிற்சி செய்வோம். நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் ஒரு கடை முன் நண்பர் நிற்பார். ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொள்வார். பின் நடைபயிற்சி முடிந்தவுடன் இன்னொரு கடைக்குச் செல்வார். திரும்பவும் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்கொள்வார்.
‘இனிமேல் பிடி;க்கப் போவதில்லை. நாளையிலிருந்து நிறுத்தி விடப் போகிறேன்,’ என்றார் ஒருநாள்.
‘உங்களால் முடியாது. இது மாதிரி சவால் விடாதீர்கள். இந்தப் பழக்கம் இருந்து விட்டுப் போகட்டும்,’ என்றேன். ஆனால் சவால் விடுவதில் அவர் உறுதியாக இருந்தார்.
அடுத்தநாள் காலையில் நாங்கள் நடைபயிற்சி இடத்தில் சந்தித்துக்கொண்டோம். நடை ஆரம்பிக்குமுன் முதல் வேளையாக அவர் கடைக்குச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டார்.
நான் அவரைப் பார்த்து சிரித்தேன்.
(அமிர்தா ஜøன் மாத இதழில் வெளிவந்த கட்டுரை)
விருட்சம் கூட்டத்திற்கு வந்திருந்த எல்லா நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருட்சம் கூட்டத்தில் மைக் ஏற்பாடு செய்வது வழக்கமில்லை. மொத்தம் 50 பேர்களுக்குமேல் கூட்டத்திற்கு வர மாட்டார்கள். அன்றைய அசோகமித்திரன் கூட்டத்தில் அசோகமித்திரனால் சத்தமாகப் பேக முடியவில்லை. ஆனால் பேசியவற்றை ஆடியோவில் பிரமாதமான முறையில் பதிவு செய்திருக்கிறேன். வந்திருந்த நண்பர்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். எப்படி என்பதை யாராவது என் அறிவுக்குப் புரியும்படி சொல்ல முடியுமா?
https://soundcloud.com/