எம்.ரிஷான் ஷெரீப்
காலை வெயில் அலைமோதும்
பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில்
மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை
ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும்
தனித்திருந்த கொட்டகையின் கூரைகள்
பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை
வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும்
வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய
கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம்
உன் ப்ரியத்தில் உறைந்திருந்த அது
எங்கும் தப்பிப் போய்விடாது எனினும்
வேலியை இறுக்கிக் கட்டினாய் நீ
அதனையும் அறியாது அசைபோட்டபடியிருந்தது அது
மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல முடியாத அடைமழை நாட்களில்
எங்கெங்கோ அலைந்து
தீனிச் செடி குலைகளை எடுத்து வருவாய்
உன் தலை தடவலில் உயிர்த்திருக்கும் அதனுலகம்
தீனிக்கென நீ வைத்திடும் எல்லாவற்றையும்
அன்பென எண்ணிச் சுவைக்கும்
அதட்டலுக்குப் பயந்து அடிபணியும் – பிறகும்
அகலாதிருக்க இவ் வாழ்வும்
உன் பரிவும் நிலைத்திடக் கனவு காணும்
தசை, தோல், எலும்பென கூறிட்டுப் பணம்பார்க்க
அதன் எடை கூடும் காலமெண்ணிக் காத்திருக்கும் உன்
கத்தியைக் கூர் தீட்டும் நாளில்
அதன் மேனியிலிருந்து எழக் கூடும்
விடிகாலைத் தாரகையோடு
பசும்புல்வெளியில் உலர்ந்த உன் பாசத்தின் வாசம்