அழகியசிங்கர்
சி சு செல்லப்பா கூட்டம் ஒன்று ஜனவரி மாதம் நடந்தது. அதில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். சி சு செல்லப்பாவின் நெருங்கிய நண்பர். செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் எழுதியவர். அவர் நடந்து வரும்போது யாரோ ஒருவர் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வரும்படியாக இருந்தது. முறுக்கிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி அளிப்பவர். பேசும்போது தயங்கி தயங்கி பேசுவதுபோல் இருந்தாலும், யாரும் அவரது பேச்சை ரசிப்பார்கள். கிட்டத்தட்ட 75 வயதாவது அவருக்கு இருக்கும். தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர். ஆனால் அவர் தன்னை சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன். நாடகத்தில் தீவிரமாக கவனம் செலுத்துபவர். ஒவ்வொரு நடிகனும் வசனம் பேசும்போது எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் சி சு செல்லப்பாவை குறித்து தன் எண்ண ஓட்டத்தைத் தெளிவாகப் பேசினார். அவரின் கம்பீரமான குரலுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் அன்று அவர் துணையுடன் நடந்து வந்ததுதான் எனக்கு உறுத்தலாக இருந்தது.
இன்னொரு எழுத்தாள நண்பர், அவருக்கு 68 வயதாகிறது. ஆனால் வீட்டிலிருந்து தனியாக வெளியே வர பயப்படுகிறார். யாராவது ஒருவர் அவரை அழைத்துக்கொண்டு போக வேண்டும். என் வீட்டு பக்கத்திலிருக்கும் சரவணாபவன் ஓட்டலுக்கு இரண்டுமுறை அழைத்துக்கொண்டு போனேன். அங்கு இரண்டு முறையும் அவருக்குப் பிரச்சினை ஆகிவிட்டது. தலை கிறுகிறுவென்று சுற்றி ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டார். ஒரு மாத்திரை பெயரைக் குறிப்பிட்டு உடனே வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். நானும் வாங்கிக்கொண்டு வந்தேன். அதைச் சாப்பிட்ட பிறகே அவர் நிதானத்திற்கு வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனால் போதுமென்றாகி விட்டது.
நான் மேலே குறிப்பிட்ட இரண்டு இலக்கியப் படைப்பாளிகளும் வெளியே எல்லா இடங்களுக்கும் தனியாக செல்பவர்கள். பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள்.
என் அப்பாவிற்கு 91வயது. அவர் என் வீட்டு கீழ் பகுதிக்கு மாடிப்படிகளில் ஜாக்கிரதையாக இறங்கி தினமும் நடப்பார். யார் உதவியும் இன்றி. சமீப காலமாக அவரால் அப்படியெல்லாம் நடக்க முடியவில்லை. வீட்டிற்குள்ளேயே நடந்து கொண்டிருக்கிறார். வெளியே வரமுடியவில்லை. “இனிமேல் தாக்குப் பிடிப்பது சிரமம்,” என்று தினமும் சொல்லிக்கொண்டு வருகிறார். “நான் அடுத்த வருடம் பிப்பரவரி மாதம் ரிட்டையர்ட் ஆகிவிடுவேன். அதுவரை உங்களுக்கு ஒன்றும் ஆகக் கூடாது,” என்று நானும் பதிலுக்குச் சொல்வேன்.
சமீபத்தில் ‘பயோக்லிட்டசோன்’ வகை மாத்திரைகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. நீரழிவு நோயாளியான நான் ஐந்தாறு ஆண்டுகளாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது பயோக்லிட்டசோன் வகை மாத்திரை என்பதை மருந்து கடைகளில் அந்த மாத்திரை கிடைக்காமல் போனதிலிருந்து தெரிந்தது. இம் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் நோயாளிகளுக்கு புற்றுநோய் வரும் என்று ஒரு சாராரும், இன்னும் சிலர் அப்படி இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்கள். என் நிலை தர்மசங்கடமாகப் போயிற்று. நீரழிவு நோயை கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் நான் இருந்த பகுதியில் இருந்தாலும், நான் போய்ப் பார்ப்பதற்கு சங்கடப் பட்டுக்கொண்டிருந்தேன். சில நாட்கள் மாத்திரை எதுவும் சாப்பிடாமல் வேறு இருந்தேன். திடீரென்று மொட்டை மாடிக்குச் சென்று காலையில் அரை மணி நேரம் நடக்க ஆரம்பித்தேன். சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தேன். நான் இதையே யோசனை செய்து கொண்டிருந்ததால் நீரழிவு நோயும், ரத்தக் கொதிப்பும் அதிகமாகிவிட்டது.
என் வாழ்க்கையில் மூன்று பேர்களை நான் சந்திக்க வேண்டாமென்று நினைப்பதுண்டு. ஒருவர் மருத்துவர், இன்னொருவர் போலீஸ்காரர், மூன்றாமவர் வக்கீல். ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களை சந்திக்காமல் இருக்க முடியாது. இன்றைய பிரச்சினை நிறைந்த உலகத்தில் இவர்கள் தயவு இல்லாமல் வாழ முடியாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல மருத்துவர், ஒரு நல்ல போலீஸ்காரர், ஒரு நல்ல வக்கீல் கிடைக்க வேண்டும்.
ஒருமுறை பள்ளிக்கூட நண்பர்களுடன் அண்ணாதுரை மரணம் அடைந்த தருணத்தில் அவருடைய சமாதியைப் பார்க்கச் சென்றேன்.
சமாதியைப் பார்த்துவிட்டு மெரினா கடற்கரையில் கடல் நீரில் விளையாடிக் கொண்டிருந்தோம். என் சட்டை முழுவதும் கடல் நீரில் நனைந்துவிட்டதால், சட்டையைக் கழற்றி தண்ணீர் போவதற்குப் சட்டையைப் பிழிந்து கொண்டிருந்தேன். என்னுடன் வந்திருந்த சக மாணவன் என் சட்டையைக் கேட்டதால் கொடுத்தேன். அவன் வேண்டுமென்றே என் சட்டையை கடலில் வீசி எறிந்து விட்டான். நான் படித்துக்கொண்டிருந்தது துளூவ வேளாளர் பள்ளிக்கூடம். அங்கு குறும்பு செய்யும் மாணவர்கள் அதிகம் உண்டு. அந்தச் சட்டை எனக்கு திரும்பவும் கிடைக்கவில்லை எனக்கு ஒரே வருத்தம். சட்டை இல்லாமல் எப்படி வீட்டிற்குள் நுழைவது என்ற அச்சமும் கூட இருந்தது. குளிரில் வெடவெடவென்று நடுங்கியபடி நான் தங்கசாலையில் உள்ள என் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது காவலில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னைக் கூப்பிட்டார். நான் நடுங்கி விட்டேன். போலீஸ்காரர் என்கிற அச்சம்தான். என் பெயரை அவர் கேட்க, பெயரைச் சொன்னேன். எந்த வகுப்பில் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாய் என்று கேட்க, அதற்கும் பதில் சொன்னேன். அவர் என்னை வழி அனுப்பும்போது, “ஏன் இப்படி ஒல்லியாய் இருக்கிறாய்.. நல்லா சாப்பிடு…உடம்பை தேத்து,” என்று அறிவுரை கூறி அனுப்பினார். என்ன வித்தியாசமான போலீஸ்காரராக இருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன்.
நாங்கள் பவளக்காரத் தெருவில் குடியிருந்தபோது எப்போதும் நான் தெருவில்தான் காலையில் மூத்திரம் போவேன். ஒருமுறை அப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது, üதம்பி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வா,ýý என்ற குரல் கேட்டது. பின்னால் ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அவர் பின்னால் பார்த்தால் பெரிய கும்பலே அந்தப் போலீஸ்காரரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் செய்தது தவறு என்று அப்போதுதான் பட்டது. நான் போலீஸ் ஸ்டேஷன் போகிறேன் என்பதை என் வீட்டாருக்குத் தெரிவித்து விட்டு போலீஸ்காரருடன் சென்று கொண்டிருந்தேன். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நாங்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தோம். எல்லோரும் தெருவில் மூத்திரம் போன குற்றத்திற்காக நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் என் அப்பா அங்கு வந்தார். அவர் என்னை அனுப்பிவிட்டு எனக்குப் பதிலாக அவர் அங்கு நின்று கொண்டார்.
பின் நீதிபதி முன் நான் சொல்வதற்குப் பதிலாக அவர் மூத்திரம் போனதாக ஒப்புக்கொண்டு அபராதம் கட்டிவிட்டு வந்தார்.
ரெட்டியப்பட்டி சுவாமிகளின் கூட்டம் என் வீட்டில் முன்பெல்லாம் நடக்கும். ரெட்டியப்பட்டி சுவாமிகளின் முக்கியமான அறிவுரை. உடம்பில் எதாவது நோய் வந்தால் மருத்துவர்களை அணுகக் கூடாது என்பது. தானாகவே அந்த நோய் போய்விடும் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. சுவாமிகளின் பக்தர்கள் சிலர் அவர்களுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் எப்படி தானகவே விலகியது என்பதை எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சர்க்கரை நோயிலிருந்தும், இரத்த அழுத்த நோயிலிருந்தும் அப்படியெல்லாம் விடுதலை கிடைக்குமா? எனக்குத் தெரிந்த ஒருவர், சர்க்கரை நோயால் அவதிப் படுபவர், மயிலாடுதுறையில் உள்ள ராஜன் தோட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் வேகமாக நடந்து நடந்து போவார். üநான் எந்த மாத்திரையும் சாப்பிடுவதில்லை. இந்த நடைதான் எனக்கு முக்கியம்,ý என்று கூற கேட்டிருக்கிறேன்.
2011ஆம் ஆண்டு ஜøலை மாதம் நானும் மனைவியும் அமெரிக்கா செல்ல தீர்மானித்திருந்தோம். அங்கு போவதற்கு டிக்கெட்டெல்லாம் வாங்கிவிட்டோம். அடுத்தநாள் காலையில் கிளம்புவதற்குமுன் ஒரு மருத்துவரைப் பார்த்து என்னன்ன மருந்துகள் சாப்பிடுகிறேன் என்று ஒரு மருந்து சீட்டு வாங்கிக் கொண்டு வரும்படி பையன் குறிப்பிட்டிருந்தான். அமெரிக்காவில் மருத்துவச் செலவிற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டுமாம். கிளம்புவதற்கு முதல் நாள் ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். அவர் எனக்கு தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்தார். நான் ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்த மாத்திரைகளை மாற்றி எழுதினார். ”நீங்கள் அமெரிக்கா போவது, ஆபத்து,” என்றார். எனக்குப் பெரிய அதிர்ச்சியாகப் போய் விட்டது.
நான் அடுத்தநாள் பிரிட்டிஷ் ஏர்வேஸில் ஏறிப் போகவேண்டும். அந்தச் சமயத்தில் ஏன் இப்படி ஒரு மருத்துவரைப் பார்த்தோம் என்று தோன்றியது. போகாமல் இருந்து விடலாமா என்று யோசித்தேன். அது முட்டாள்தனம் என்று தோன்றியது. அமெரிக்கா போவதற்கு பல மாதங்களாக திட்டமிட்ட நிகழ்ச்சி. அவர் சொன்ன மருந்துகள் எதுவும் சாப்பிடவில்லை. வாங்கவும் இல்லை. ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்த மருந்துகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
அமெரிக்கா போய்விட்டு ஒருமாதம் இருந்துவிட்டு வந்துவிட்டேன். அங்கு இருந்தபோது, அந்த மருத்துவர் சொன்னது ஞாபகத்தில் வந்து உறுத்திக்கொண்டே இருந்தது. அங்கு காலையில் எழுந்தவுடன் நடக்க ஆரம்பிப்பேன். நான் ஒருவன்தான் அங்குள்ள வீதிகளில் நடந்து கொண்டிருப்பேன். அப்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தது ‘பயோக்லிட்டசோன்’ மாத்திரை என்று தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்ததுதான்.
சமீபத்தில் நான் அசோக்நகரில் உள்ள அனுமார் கோயில் பக்கத்திலுள்ள சர்க்கரை நோயாளிகளை பிரதானமாக கவனிக்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து வேறு மருந்துகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் தினம் தினம் நானே கருவிகள் மூலம் பரிசோதனை செய்து பார்க்கிறேன். மாத்திரைகள் மூலம் இல்லாமல் தானாகவே எல்லாம் சரியாக வேண்டும். ரெட்டியப்பட்டி சுவாமியின் ஆசிகள் வேண்டும்.
(அக்டோபர் 2013 அம்ருதா இதழில் வெளிவந்துள்ளது.)