சா.தீபா
காணக் கிடைக்காத
காவல்கள் எனக்காகவே
காவலில்லாத வாயில்களில்
காத்துக் கிடக்கும்!
தெருவில் இறங்கித்
தொடர்ந்து நடக்கத்
தொடர்பில்லாத கண்கள்
துளைத்துத் தொலைக்கும்!
ஆடைகளின் சலசலப்பும்
ஆரவாரமாய்த் தோன்றும்!
வசைமொழியில் வாய் நனைத்து
வார்த்தைகள் கேட்கும்!
பேருந்து நிறுத்தம் வந்து
பெருமூச்சு விடும் முன்பு
பெருங்கூட்டம் கழுகாகி
வெறித்துப் பார்க்கும்!
சகித்துக் கொண்டு
சட்டென்று பேருந்திலேற
சற்றுமுன் பார்த்த கூட்டம்
வேலை காட்டும்!
நிறுத்தம் வந்து
நின்றிறங்கிய பின்பு
அலுவலக வாயிலும்
அப்படியே வரவேற்கும்!
இறந்த பகலின்
இருளோடு வீடு வர
சந்தேகமாய் சில முகங்கள்
சேறிரைத்துப் போகும்
என்ன செய்ய?
பெண் என்று
பெயர் வைத்து விட்டானே???