அழகியசிங்கர்
திருவனந்தபுரம் என்ற இடத்திலிருந்து மூன்று முக்கிய படைப்பாளிகளை நான் அறிவேன். அதில் ஒருவரான நீல பத்மநாபனை எனக்கு கல்லூரி ஆண்டிலிருந்து தெரியும். அவர் புத்தகங்களை நான் விரும்பிப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவரை நேரிடையாக அறியாவிட்டாலும் அவர் மீது எனக்கு ஒருவித மதிப்பும், லயிப்பும் இருந்துகொண்டுதான் இருந்தது.
இன்னும் இரண்டு படைப்பாளிகளாக நான் அறிவது. நகுலனையும் காசியபனையும். இந்த மூன்று படைப்பாளிகளிடமும் நான் காணும் ஒரு ஒற்றுமை. மூவரும் கவிதைகள் எழுதுவார்கள். சிறுகதைகள் எழுதுவார்கள். நாவல்கள் எழுதுவார்கள். கட்டுரைகள் எழுதுவார்கள். மொழிபெயர்ப்பு செய்வார்கள்.
திருவனந்தபுரத்தில் இன்னும் இரண்டு படைப்பாளிகளைப் பற்றியும் நான் அறிவேன். அதில் ஒருவர் ஷண்முக சுப்பையா. இன்னொருவர் ஆ மாதவன். ஷண்முக சுப்பையா கவிதைகளுடன் நின்றுவிட்டார். ஆ மாதவன் சிறுகதைகள், நாவல்களுடன் நின்றுவிட்டார்.
நீல பத்மநாபனை நான் அறிந்தபோது ஒரு நாவலாசிரியராகத்தான் அறிந்தேன். உண்மையில் நான் அதிகமாக அவர் நாவல்களைப் படித்திருக்கிறேன். அவர் நாவல்களைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதேபோல் அவர் சிறுகதைகள் எழுதி உள்ளார் என்பதையும் உணரவில்லை.
இப்படி நீல பத்மநாபனை அறிந்து கொண்டிருந்தபோதுதான் காசியபனை அவருடைய அசடு என்ற நாவல் மூலம் அறிந்தேன். நகுலனை நான் அவர் கவிதைகள் மூலமாகத்தான் அறிவேன்.
நான் இங்கு இரண்டு விதமான பிரிவுகளைப் பார்க்கிறேன். ஒரு பிரிவில் உள்ளவர்கள் வெறும் கவிதைகளை மட்டும் படிப்பவர்கள். எழுதுபவர்கள். உதாரணமாக ஞானக்கூத்தன். இவர் அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையை மட்டும் சிந்திப்பவர். கவிதை எழுதிக்கொண்டிருப்பவர். கவிதையை திறனாய்வு செய்பவர். ஞானக்கூத்தனின் பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள். உதாரணமாக ஆத்மாநாம். ஏன் ஷண்முக சுப்பையா. இப்போது எழுதிக்கொண்டிருப்பவரில் தேவதச்சன். சுகுமாரன், பிரம்மராஜன். இன்னும் எத்தனையோ படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.
கவிதையை மட்டும் எழுதுபவர்களிடமிருந்து நாவல், சிறுகதைகள் போன்றவற்றுடன் கவிதைகளும் எழுதுபவர்களோடு ஒப்பிடும்போது கவிதைகள் மட்டும் எழுதுபவர்கள் சிறப்பாகவே எழுதுவதாக எனக்குத் தோன்றும்.
நாவல் எழுதுபவர்கள் கவிதை எழுதும்போது நாவலில் சாயல் கவிதையில் தெரிவதாக தோன்றுகிறது. அல்லது சிறுகதை எழுதுபவர்கள் கவிதை எழுதும்போது சிறுகதையின் சாயல் அதன் மூலம் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது.
புதுவிதமான கவிதையின் முன்னோடியான க.நா.சு கவிதையை உரைநடை வடிவத்தில் மாற்றி புதுமைப் படைத்தவர். அதிலிருந்து கவிதையில் உரைநடையும், உரைநடையில் கவிதையும் நுழையத் தொடங்கி விட்டது.
பொதுவாக நீல பத்மநாபன் அவருடைய கவிதைகளை எல்லாச் சிற்றேடுகளுக்கும் அனுப்பவரில்லை. அவர் குறைவாகவே கவிதைகள் எழுதுபவர். பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டுமென்ற நோக்கம் இல்லாதவராக எனக்குத் தோன்றுகிறது.
நீல பத்மநாபன் கிட்டத்தட்ட 200 கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியம். அவர் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கவும் விருப்பப் படுவார். அதனால்தான் வேற மொழிகளிலிருந்தும் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார்.
இத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் தனிப்பட்ட விண்ணப்பம் போல் அமைத்திருக்கிறார். குறிப்பாக விஜயதசமி நாளன்று ஒரு கவிதை எழுதி விடுவார் என்று தோன்றுகிறது.
ஓம் என்ற கவிதையில்
இன்று விஜயதசமி
மீண்டும்
எழுதுகோலை அன்னை உந்தன்
பாதத்தில் திரும்பத் தந்து
போதுமென நிறுத்திட
நினைக்கும் கணங்கள்
இல்லை உன் கடன்
பணிசெய்து கிடப்பதே…
இறுதி நேரம்வரை
இன்னும் உன்னால்..
மீண்டும்
எழுதுகோலை அன்னை உந்தன்
பாதத்தில் திரும்பத் தந்து
போதுமென நிறுத்திட
நினைக்கும் கணங்கள்
இல்லை உன் கடன்
பணிசெய்து கிடப்பதே…
இறுதி நேரம்வரை
இன்னும் உன்னால்..
என்று கூறி முடிக்கும்போது
ஓம் கணபதாயே நமக.. என்கிறார் 9.10.2008எழுதப்பட்ட கவிதை இது.
அதேபோல் 2009 ஆண்டில் இன்னுமொரு விஜயதசமி வாக்தேவதையே என்று குறிப்பிட்டு கிறுக்கியே அதே வரியை கிறுக்குகிறேன் ஓம் கணபதாயே நமஹே என்று முடிக்கிறார்..ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட விஜயதசமி முன்னிட்டு ஒரே விதமான விண்ணப்பத்தை திரும்பவும் தெரிவிக்கிறார்.
நீல பத்மநாபனின் முந்தைய கவிதைகளில் ஒருவித ஆவேசத்தை நான் பார்த்திருக்கிறேன். தன் முன்னால் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு கொதிக்கும் மன நிலையில் அவர் பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அதுமாதிரியான கவிதை இத் தொகுப்பில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்ததில் üகங்கை அன்னையே வணக்கம்ý (பக்கம் 44) என்ற கவிதை என் கண்ணில் தட்டுப்பட்டது. அக் கவிதையிலிருந்து சில வரிகள் :
சாக்கடைகளில் வீழ்ந்து
கைகால்கள் தலைகள் அடிபட்டு
குற்றியிரும் கொலை உயிருமாய்
நடைபிணங்களாய் செத்து செத்து
பிழைத்து வாழ்ந்து முடிக்கின்ற
பாவப் பிரஜைகளைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா
தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுபவரில் முக்கியப் பங்கை வகிப்பவர் ஞானக்கூத்தன். இவர் கவிதை என்று எதை எழுதினாலும் அங்கத உணர்வு தானகவே மேலோங்கி தென்படும். அதேபோல் உரைநடையில் அங்கத உணர்வுடன் எழுதுபவர் அசோகமித்திரன்.
மற்றவர்களிடம் இந்த அங்கத உணர்வே இல்லையா என்ற கேள்வி எழும். நிச்சயமாக உண்டு. நீல பத்மநாபன் கவிதைகளில் கூட அங்கத உணர்வுடன் கூடிய கவிதை உள்ளது. ஆனால் ஞானக்கூத்தனிடம், அசோகமித்திரனிடம் உள்ள வீச்சு மற்றவர்களிடம் குறைவு என்பதே என் எண்ணம். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் ஒருசில கவிதைகள் மட்டுமே எழுதி உள்ளார்
அவருடைய கவிதை ஒன்றை இங்கு படிக்கிறேன் :
கவிதையின் பெயர் சொர்க்கவாசி.
உயிர்வதை ஒழிந்தது
சாக்ரடீஸ் வந்தார்
மூடச் சிந்ததை ஒழிந்தது
மார்க்ஸ் வந்தார்
ஆதிக்க வர்க்ம் ஒழிந்தது
டால்ஸ்டாய் வந்தார்யேசு வந்தார்
பாவம் ஒழிந்தது
காந்தி வந்தார்
தீண்டாமை ஒழிந்தது
புத்தர் வந்தார்
வேறுபாடுள்ள சமுதாயம் ஒழிந்தது
லிங்கன் வந்தார்
அடிமைத்தனம் ஒழிந்தது
பெரியார் வந்தார்
அறிவிலித்தனம் ஒழிந்தது
வேறு யாரோ வந்தார்
தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது
உல்லாசமாக இருக்கிறேன்
காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு
யார் வருகைக்கோ காத்துக்கொண்டு
அங்கத உணர்வுடன் எழுதுபவர்கள் வாழ்க்கையை கிண்டலாகப் பார்க்கிறார்கள். ஒருவிதத்தில் எளிமையாக வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் இந்த அங்கத தன்மை உதவும் என்று நினைக்கிறேன். நீல பத்மநாபன் எல்லாவற்றையும் கொஞ்சம் கோபமாகப் பார்ப்பவராக எனக்குத் தோன்றுகிறது. இருந்தாலும் அவரும் அங்கத உணர்வுடன் கவிதைகள் எழுதி இருக்கிறார்.
இத் தொகுதியில் நான் பார்த்த ஒரு கவிதை. மாறாட்டம் என்ற கவிதை. பக்க எண் 13.
யாராரும் அறியாது
கடைசி வரிசையில்
கூட்டத்துடன் கூட்டமாய்
நின்று செல்ல வந்தவனை
கைப் பிடித்தழைத்து
மேடைக்கு இட்டு வந்ததும்
உள்ளுக்குள்
ரீங்கரித்த
அதே கேள்வி
ஆள் மாறிப்போச்சோ (2004)
அதேபோல் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துவதுபோல் கவிதை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை. ஆன்மிக உணர்வு என்பது கடவுளைத் தொழுவது என்பதில்லை. என்னுடைய பல நண்பர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களைப் பார்த்து நான் கேட்பது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது. அதற்கு அவர்களுடைய பதிலைக் கேட்கும்போது, எனக்கு சிரிப்பு வரும். ஆன்மிகத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிடுவார்கள். என்ன ஆன்மிகம்? என்ன ஈடுபடுகிறாரகள் என்றெல்லாம் கேள்விகள் எழும். இன்னும் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். காலையில் எழுந்தவுடன் பூஜை அறைக்குச் சென்றால் வர 2 அல்லது 3 மணி நேரமாகும் என்பது. நான் பேசாமல் இருப்பேன். ஆன்மிகம் என்பது அது அல்ல.
ஆன்மிகம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு தத்துவ வாழ்க்கை முறை. இது எளிதில் சாத்தியமாகுமா என்பதை நான் அறியேன்.
நீல பத்மநாபன் அவர் தொகுப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். பேரானந்தம் என்பது அதன் பெயர். பக்கம் 38ல் அக் கவிதை உள்ளது.
ஒரு வாசல்
அடைத்துவிட்டதென்று
ஓய்ந்துவிடாதே
உனக்குள்ளே
ஒளிந்திருக்கும்
ஒன்பது வாசல்கள்
ஒவ்வொன்றாய்
திறந்திட
முயற்சி செய்வாய்
பேரானந்தம்
பெருகிடக் காண்பாய்…
இப்படி எழுதுவதுதான் ஆன்மிகமாக கருதுகிறேன். இது மாதிரியான ஆன்மிகத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
(26.04.2013 அன்று நீல பத்மநாபன் பவள விழா கருத்தரங்கத்தில் வாசித்த கட்டுரை)