எம்.ரிஷான் ஷெரீப்
தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது
காலையில் பறக்கும் கிளைகளை
தலையில் கொண்ட பெரு விருட்சம்
ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய்
நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை
அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும்
வெள்ளைப் பூக்களென
வந்து தங்கிச் செல்லும்
கொக்குகள்
இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால்
கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும்
இரை தேடி விடிகாலையில்
தமதிரு நெடிய கிளைகளையும்
வயிற்றில் பதித்துப் பறப்பவை
விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள
வெண்ணிறகுகளை அன்பாய்க் கொடுத்துச் செல்லும்
அவற்றைச் சேமிக்கும் மரம்
காற்றைத் தொட்டு
இறகுத் தூரிகையால்
ஓடும் ஆற்றில் கவியெழுதும்