எதையாவது சொல்லட்டுமா….83

அழகியசிங்கர்
பந்தநல்லூர் கிராமத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது, என் அலுவலக நண்பர் ஒருவர் நடிகர் நீலு மாதிரி இருப்பார்.  அவரும் நானும் உதவி மேலாளர்கள்.  இது பெரிய பதவி இல்லை.  மேலே உள்ளவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள்.  கீழே பணிபுரிபவர்களும் நம்மை மதிக்க மாட்டார்கள்.  நாங்கள் இருவரும் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தோம்.  வங்கிக் கிளை அலுவலகத்தை காலையில் போய் திறப்பது முதல், இரவு மூடும் வரை நாங்கள் படுகிற அவஸ்தையை எந்த மாதிரியும் விளக்க முடியாது.  மேலும் அந்தக் கிராமத்தில் சரியான ஓட்டல் இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் தங்குவது என்பது  முடியாத காரியம்.  நானும், அந்த நண்பரும் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள்.
நான் அந்த நண்பரை நடிகர் நீலு மாதிரி இருப்பார் என்று சொன்னது அடையாளத்திற்குத்தான்.  நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்களை தமிழ் சினிமா உலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றும்.  அதில் நீலு என்ற நடிகரும் ஒருவர்.  அவரை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் நடிக்க வைத்துவிட்டு அம்போ என்று தமிழ் சினிமா உலகம் விட்டுவிட்டது.  அவர் உருவத்திற்கு ஏற்ற ஒரு கதையை பிரமாதமாக தயாரித்து அவரை நடிக்க வைத்திருக்கலாம்.  ஆனால் தமிழ் சினிமா உலகத்தில் கதாநாயகர்கள்தான் முக்கியமானவர்கள்.  நடிகர் நம்பியாரை வெறும் வில்லன் நடிகராகவே நடிக்க வைத்து வீணடித்துவிட்டோம்.  அதேபோல் எம் ஆர் ராதா என்ற நடிகர்.  
எதாவதாக ஆக வேண்டுமென்று நாம் எல்லோரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.  என் சின்ன வயதில் என்னையும், என் இளைய சகோதரனையும் பாட்டு சொல்லிக் கொடுக்க என் குடும்பம் முயற்சி செய்தது. என் பெற்றோர்கள் ஆசைப் பட்டதில் எந்தத் தவறும் இல்லை.  பாட்டு எங்களுக்கு வந்தால்தானே.. =பெரியவனுக்கு (நான்) உச்சரிப்பு நன்றாக வருகிறது.. குரல் வளம் இல்லை.. சின்னவனுக்கு குரல் வளம் நன்றாக உள்ளது.  ஆனால் உச்சரிப்பு போதாது..+ என்று எங்களுக்கு பாட்டு சொல்லி கொடுத்தவர் சொல்லி எங்கள் குடும்பத்தினரிடமிருந்து சில மாதங்கள் பணம் பறித்தார்.  அதன்பின் எனக்கும் பாட்டிற்கும் காத தூரம் ஆகிவிட்டது.  இப்போதுகூட நான் பாட்டை கேட்கத்தான் முடியும்.  அது என்ன ராகம் என்பது தெரியாது.  
மேலும் ஒரு கச்சேரியை பல மணிநேரம் மெய்மறந்து என்னால் ரசிக்க முடியாது.  சிலர் மெய்மறந்து போனேன் என்பார்கள்.  பரவசம் அடைந்து விட்டேன் என்பார்கள்.  இரண்டு மூன்று நாட்கள் அந்தப் பாட்டு மனதில் நிற்கிறது என்பார்கள்.  எனக்கு அதெல்லாம் புரியாது.  அயோத்தியா மண்டபத்தில் அத்தனைக் கூட்ட நெரிசலில் என் மனைவி சுதா ரகுநாதன் கச்சேரியைக் கேட்டு மெய் மற்நது போனேன் என்பாள்..  நானோ அங்கு நிற்க முடியாமல் ஓடி வந்து விடுவேன்.
என்னால் பெரிய பாடகனாக வரமுடியவில்லை.  பாட்டையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை.  என்னால் முடியாததை என் பெண் மூலம் நிறைவேற்ற நானும் என் பெண்ணை இரண்டாவது   படிக்கும்போது பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஒருவரிடம் பாட்டு கற்றுத்தர அனுப்பினேன்.  அதுவும் சில மாதங்கள்தான்.  பெண்ணிற்கும் பாட்டு வரவில்லை.  இப்போது பெண் அவள் பெண்ணிற்கு   பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.  
என் அலுவலக நண்பரின் பெண் நன்றாக பாட்டு கற்றுக் கொண்டிருந்தாள். கச்சேரி செய்யும் அளவிற்குப் போய்விட்டாள். ஒருமுறை பணம்கொடுத்து  அவள் பாட்டு கச்சேரியை நண்பர் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்.  கும்பகோணத்தில் காந்தி பூங்கா எதிரில் உள்ள ஒரு இடத்தில் பாட்டுக் கச்சேரி நடத்த ஏற்பாடு ஆயிற்று.  அவள் பாட்டுக் கச்சேரியைப் பாராட்ட 85 வயதுக்குமேல் உள்ள ஒரு மிருந்தங்க நிபுணரை ஏற்பாடு செய்தார்.  பின் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிற குருவை ஏற்பாடு செய்தார்.  கல்லூரியில் அந்தப் பெண்ணிற்கு பாடம் நடத்தும் ஒரு பேராசிரியரையும் ஏற்பாடு செய்தார்.  பின் பாட்டுக் கச்சேரி நடக்கப் போவதை அறிவித்து அழைப்பிதழைத் தயார் செய்து எல்லோரையும் கூப்பிட்டார்.
பாட்டுக் கச்சேரிக்கு வருபவர்களுக்கு மாலை டிபன் மற்றும் முடிந்து போவோருக்கு சாப்பாடு என்றெல்லாம் ஏற்பாடு செய்தார்.  அந்தக் கச்சேரி நடப்பதற்கு சில தினங்கள் வரை பரபரப்பாக இருந்தார்.  என்னையும் கூப்பிட்டார்.  அன்று அலுவலகம் முடிந்து பந்தநல்லூரிலிருந்து கும்பகோணம் சென்று பாட்டுக் கச்சேரியைக் கேட்டு திரும்பவும் மயிலாடுதுறையில் உள்ள என் இருப்பிடத்திற்கு வரவேண்டும்.  பயங்கர அலைச்சலாக இருக்கும்.  அலுவலக நண்பருக்காக நானும் புறப்பட்டேன்.  நான் அங்கு போனபோது பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.  எல்லோரும் வேண்டியவர்கள்.  காப்பி மட்டும்தான் கிடைத்தது.  டிபன் தீர்ந்து விட்டது.  நானும் போய் அமர்ந்தேன்.  வந்த பரபரப்பே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.  பாட்டு முடிந்த இடைவேளைக்குப் பின் விருந்தினர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொருவரும் அந்தப் பெண்ணை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள்.  அவள் கல்லூரியிலிருந்து வந்திருந்த பேராசிரியர்.  “கல்லூரியிலும் இந்தப் பெண் சிறப்பாகப் படிக்கிறாள்.  இங்கு கச்சேரியும் செய்கிறாள்.”என்றெல்லாம் பாராட்டினார்.  
எல்லோரும் பேசி முடித்தப்பின் திரும்பவும் கச்சேரி ஆரம்பித்தது.  துக்கடா மாதிரி சில பாடல்களை அந்தப் பெண் பாட ஆரம்பித்திருந்தாள்.  =சம்போ சிவ சம்போ+ என்ற பாடலை பாட ஆரம்பித்தாள்.  அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது கீழே இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண் கல்லூரியில் உள்ள பேராசிரியர் எதிர்பாராதவிதமாக கீழே சாய்ந்தார்.  கூட்டத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.  பயத்தில் அந்தப் பெண் பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டாள்.  அந்தப் பேராசிரியரை நானும் நண்பரும் இன்னும் சிலரும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கும்பகோணத்தில் பிரபலமான சுகம் மருத்துவமனைக்கு ஒரு காரில் அழைத்துச் சென்றோம்.
சுகம் மருத்துவமனையில் அவரைப் பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துபோய் சில நிமிடங்கள் ஆகிவிட்டன என்றார்கள்.  என் நண்பர் இதை என்னிடம் சாதாரணமாக சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அங்கிருந்து நான் மயிலாடுதுறைக்கு ஓட்டமாக ஓடிப் போய்விட்டேன்.  பின் வீட்டிற்கு வந்தபிறகு எனக்கு அந்தப் பாட்டு கச்சேரியை மறக்க முடியவில்லை. நான் தனியாக இருந்ததால் இரவு முழுவதும் வீட்டிலுள்ள எல்லா அறைகளிலும் விளக்கு போட்டு விட்டு தூங்க முயற்சி செய்தேன்.  எனக்கு தூக்கம் வரவில்லை.  
அடுத்தநாள் அலுவலகம் வந்தபோது நான் சுரத்தாகவே இல்லை.  என் நண்பர் அன்று வாங்கிவைத்திருந்த சாப்பாடு மீந்து விட்டது.  யாரும் சாப்பிடவில்லை  என்றார் சாதாரணமாக.  ஒரு கடை ஊழியன் கிண்டல் செய்தான்: ‘என்ன உங்கள் பெண் கச்சேரியில் பேச வந்தவரை மேலேயே அனுப்பிவிட்டீர்கள் போலிருக்கு.’
எதாவது ஆக வேண்டுமென்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  கிரிக்கெட்டைப் பார்க்கும்போது கிரிக்கெட் வீரராக வர வேண்டுமென்று நினைக்கிறோம். அதற்கான முயற்சி தெருவிலேயே நின்று விடுகிறது.  சினிமா பார்க்கும்போது நாமும் நடித்தால் என்ன என்று தோன்றும்.ஆனால் நடப்பதில்லை.  இப்படி எத்தனையோ முடியவில்லை தொடரத்தான் செய்கிறது. யோசித்துப் பார்க்கும்போது நாம் ஏன் எதாவது ஆக வேண்டுமென்று நினைக்க வேண்டும்.  சாதாரணமான இந்த வாழ்க்கையே போதுமானதாக தோன்றுகிறது.  ஏன் இப்படி சொல்கிறேனென்றால் எதாவது ஆக வேண்டுமென்றாலே பிரச்சினை.  
(APPEARED IN AMIRTHA TAMIL MAGAZINE APRIL ISSUE)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன