பயணீ கவிதைகள்

If there are images in this attachment, they will not be displayed.  Download the original attachment
 
 

அமுதாக்கா இறந்துவிட்டாள்

 
காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்து
வெளியே வந்து பார்த்தபோது வானம் இருண்டிருந்தது
மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது
எதிரே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில்
27.09.2009 அன்று அமுதாக்கா இறந்துவிட்டதாகச் செய்தி இருந்தது
ஆம் அமுதாக்கா இறந்துவிட்டாள்
27.09.2009 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில்
அமுதாக்கா தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனாள்
அவள் சாவுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன
பல ஊகங்களும் உலவுகின்றன
அமுதாக்காவை எனக்கு நன்றாகத் தெரியும்
அவள் ஒரு பெண் குழந்தையின் தாய்
முருகனின் அழகு மனைவி
சுந்தர பெருமாளின் அன்பான கள்ளக்காதலி
எங்கள் தெருவின் சிறந்த அழகி
அமுதாக்காவை முதன்முதலில் தேநீர் கடையில்
நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பார்த்தது
இடுப்பில் குழந்தையுடன் சொம்பில் தேநீர் வாங்க வந்தவளை
நண்பர்கள் நமட்டுச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க
நான் மட்டும் வைத்த கண் வாங்காமல்
அமுதாக்கா திரும்புவரை பார்த்துக் கொண்டேயிருந்தேன்
அன்று ஒற்றைச் சாமந்திப்பூ சூடி வந்த அமுதாக்கா
இடத்தை விட்டு அகன்ற பின்பும்
சாமந்திப் பூவின் மணம் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது
அது அமுதாக்காவின் மாயமாக இருக்கலாம்
எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளியிருக்கும்
அமுதாக்காவின் இல்லத்திலிருந்து
இப்பொழுது மரண ஓலமும் செண்டை மேளமும் ஒலித்துக் கொண்டிருந்தன
சாமந்திப் பூவின் மணமும் கொஞ்சம் தூக்கலாக வீசிக் கொண்டிருந்தது
இதுவும் அமுதாக்காவின் மாயமாக இருக்கலாம்
மேலும் மழை வலுத்துப் பெய்யத் தொடங்கியிருந்தது
 
ஆற்றுப்பாலத்தைக் கடக்கும் மண்புழு
 
அதுவொரு கிழக்கு மேற்காக அமைந்த நெடிய ஆற்றுப்பாலம்
மண்புழுவொன்று ஆற்றுப்பாலத்தைத் தெற்கிலிருந்து வடக்காக
கடந்து செல்ல நீண்ட நேரமாக முயன்று கொண்டிருக்கிறது
லாரிகளும் பேருந்துகளும் கார்களும் இருசக்கர வாகனங்களும்
ஆற்றுப்பாலத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதால்
மண்புழுவின் கடக்கும் காலம் தள்ளிக் கொண்டே போகிறது
அப்பொழுது சிறுமியொருத்தி வடக்கிலிருந்து ஆடிப் பாடிக் கொண்டு
ஆற்றுப்பாலத்தின் ஓரம் வந்து நிற்கிறாள்
வாகனங்களின் ராட்சத வேகத்தையும் இரைச்சலையும் கண்டு
புன்முறுவலுடன் பாலத்தை நோட்டமிடும் சிறுமி
எதிரே மண்புழுவொன்று பாலத்தைக் கடக்க எத்தனிப்பதும்
பின்பு திரும்புவதுமாக இருப்பதைக் காண்கிறாள்
ஆற்றுப்பாலத்தின் ஓரம் சிறுநீர் பெய்துவிட்டு
திடுமென வடக்கிலிருந்து தெற்காக ஆற்றுப்பாலத்தைக் கடக்கத் தொடங்குகிறாள் சிறுமி
சிறுமியின் இந்தத் திடீர் செய்கையால்
வாகனங்கள் ஸ்தம்பித்து ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன
பேருந்தும் பேருந்தும் பேருந்தும் லாரியும் லாரியும் காரும்
காரும் இருசக்கர வாகனமும் லாரியும் லாரியும் லாரியும் இருசக்கர வாகனமும்
காரும் காரும் காரும் பேருந்தும்
இருசக்கர வாகனமும் இருசக்கர வாகனமும் இருசக்கர வாகனமும் பேருந்தும்
ஒன்றோடொன்று மோதி ஆற்றுப்பாலத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றன
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறுமி பாலத்தைக் கடக்கத் தொடங்க
மண்புழுவும் ஒருவிதத் துணிச்சலில் பாலத்தைக் கடக்கத் தொடங்குகிறது
சிறுமியும் மண்புழுவும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள்
பின்பு அவரவர் வழியில் நடக்கத் தொடங்குகிறார்கள்
ஸ்தம்பித்த ஆற்றுப்பாலத்தைக் கடந்தபடி. . . .
 
புதிய சொற்களோடு இரவுக்காகக் காத்திருப்பவர்கள்
 
நேரம்  –  காலை 4.30 மணி
இடம்  –  அயன்புரம் பேருந்து நிலையம்
அன்றைய செய்தித்தாள்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு
பின்பு பகுதி வாரியாக அடுக்கப்படுகின்றன
உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை
செய்தித்தாள்களில் குவிந்திருக்கும் சொற்களை
பொறுக்கியெடுத்துக் கொண்டு அவரவர் பகுதிகளுக்கு விரைகிறார்கள்
செய்தித்தாள் விநியோகிப்பவர்கள்
செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் இறைத்த சொற்களை
செய்திகளாகச் சேகரித்துக் கொண்டு
தங்கள் காலையைத் தொடங்குகிறார்கள் அந்தந்த பகுதிவாசிகள்
இந்த வழக்கமான சொற்களை நிராகரித்து
புதிய சொற்களோடு இரவுக்காகக் காத்திருக்கிறார்கள்
திருடர்களும் பொறுக்கிகளும் பேடிகளும் பைத்தியக்காரர்களும்
இவர்களோடு கள்ளக்காதலர்களும் வேசைகளும் காமத்தரகர்களும் காத்திருக்கிறார்கள் 
காத்திருக்கும் இவர்களைப் புன்முறுவலுடன்
கடந்து செல்கிறார்கள் செய்தித்தாள் விநியோகிப்பவர்கள்
 
பச்சைப் பட்சி
 
இன்று வெயில் அடி அடியென அடித்துக் கொண்டிருக்கிறது
நான் என் பச்சைப் பட்சியைத் தேடி கிழக்கே செல்கிறேன்
அவளைக் காண இந்த வெயில் நாள்
ஒரு நல்ல சகுனமென்றே தோன்றுகிறது
கிழக்கு ஒரு பெரும் பாலையென விரிந்திருக்கிறது
இந்தப் பரந்த மணற்பரப்பு எனக்கு எதையோ நினைவூட்டுகிறது
மேலும் பாலையின் ஊளையொலி எனக்கெதையோ சொல்கிறது
எனக்கெதுவும் புரியாமல் கிழக்கின் வழி நடக்கிறேன்
பாலையைத் தொடர்ந்து
கிழக்கு ஒரு காட்டின் வழியே என்னை அழைத்துச் செல்கிறது
நிறம் மாறிக் கொண்டேயிருக்கும் இந்தக் காடு
ஒரே நேரத்தில் வசீகரித்தும் விலகியும்
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது
நான் பச்சைப் பட்சியின் இருப்பிடம் சென்று சேர்ந்தபோது
அவள் அங்கில்லை
அவள் தன் கருத்த ட்ராகனைத் தேடி
தென்கிழக்கே சென்றிருப்பதாக அறிகிறேன்
வந்த வழியைத் திரும்பிப் பார்க்கும்போது
பாலையின் ஊளையொலி மீண்டும் எனக்கெதையோ சொல்வதாக உணர்கிறேன்
புரிந்தும் புரியாத குழப்பத்தில்
நான் இப்பொழுது தென்கிழக்கே பயணமாகிறேன்
 
வெயில் நகரம்
 
நானும் தந்தையும் எங்கள் நிலத்தைப் பிரிந்து வெகுதூரம் வந்துவிட்டோம்
மலைகளுக்கு நடுவே எங்கள் நிலத்தில்
அவரவருக்கான முட்டாள்தனத்துடன் வாழ்ந்து வந்த நாங்கள்
வேறு வழியின்றி இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தோம்
நாங்கள் இந்த நகருக்கு வந்து சேர்ந்த நாளில்
வெயில் ஓர் அரக்கியென எங்கும் வியாபித்திருந்தது
மேலும் வெயில் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டுமிருந்தது
எங்களைப் போலவே பலரும் தங்கள் நிலத்தைப் பிரிந்து
வெயில் பின்தொடர இந்த நகருக்கு வந்து கொண்டிருந்தார்கள்
எங்கள் நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நாங்கள்
இந்த நகரத்தில் வெயிலுடனும் சில புத்திசாலித்தனத்துடனும் வாழப் பழகிக் கொண்டோம்
நகரத்தில் என்னைப் போலவே வாழும்
ஒரு புத்திசாலிப் பெண்ணை காதல் புரிந்து மனைவியாக்கிக் கொண்டேன்
எப்பொழுதும்போல் வெயில் எங்களைப் பிந்தொடர்ந்து கொண்டிருந்தது
வெயில் நுரைத்துப் பொங்கி நகரமெங்கும் வழிந்து கொண்டிருந்த நாளில்
எங்களுக்கொரு செல்ல மகள் பிறந்தாள்
வெயிலின் நிறத்தோடும் அதன் மினுமினுப்போடும்
வெயில் நகரத்தின் பரிசாக. . .
 
ஒரு மகளின் கனவு
 
காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன்
தந்தையிடம் ஓடோடி வந்த சிறுமி
இரவில் தான் கண்ட கனவை விவரிக்கத் தொடங்குகிறாள்
அப்பா அதுவொரு பெரிய காடு
காடு அடர்த்தியாகவும் இருட்டாகவும் இருக்கு
அந்தக் காட்டுக்குள்ள நாம ரெண்டு பேர் மட்டும் போறோம்
நாம ஏன் அங்குப் போறோம்னு தெரியல ஆனா போறோம்
காட்டு விலங்குகள் எல்லாம் நிழல் நிழலா தெரியுது
எதையும் சரியா கண்ணால பார்க்க முடியல
திடீர்னு பார்த்தா நமக்கு முன்னால
ஒரு பெரிய யானைக்கூட்டம் நின்னுக்கிட்டு இருக்கு
நாம அன்னிக்கு டிஸ்கவரி சேனலில் பார்த்தோமே
ஒரு பெரிய யானைக்கூட்டம் அதையும்விட பெருசு
அப்புறம் இன்னொரு நாள் மிருகக்காட்சிச் சாலையில் பார்த்தோமே
அதையும்விட பெரிசு
தந்தையானவர் அப்பொழுதிருந்த காலையின் பதற்றத்தில்
கதையைப் பாதியில் நிறுத்தி மகளிடம் சொன்னார்
குட்டிம்மா காலையில அப்பாவுக்கு நிறைய வேலைகள் இருக்கு
மீதிக் கதைய அப்பா அலுவலகம் போய்ட்டு வந்து
இரவு கேட்டுக்கறேன் சரியாடா செல்லம்
மகளிடம் பதிலை எதிர்பாராமலேயே அவளைவிட்டு நீங்குகிறார்
சுவாரஸ்யத்தின் சங்கிலி அறுபட்ட கோபத்தில்
மகள் தனக்குள் எண்ணிக் கொள்கிறாள்
இனி இந்த அப்பாவை ஒருபோதும்
தன் கனவுக்குள் அழைத்துச் செல்லக்கூடாதென்று…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன