அவர்களின் கதைகள்
கதகதப்புக்காக மூட்டியத்
தீயைச் சுற்றிக்
கிழிந்த கம்பளிகள்
பழைய சாக்குகளுக்குள்
தமைக் குறுக்கிக்
குழுமியிருந்தனர்
கதை பேச.
கதகதப்புக்காக மூட்டியத்
தீயைச் சுற்றிக்
கிழிந்த கம்பளிகள்
பழைய சாக்குகளுக்குள்
தமைக் குறுக்கிக்
குழுமியிருந்தனர்
கதை பேச.
அவர்களுக்காகவே அவர்கள்
புனைந்து கொண்ட கதைகளில்
அவர்களுக்கு மட்டுமே
திறப்பதாகக்
கருவூலக் குகைகள்
தற்காலிகமாகவேனும்
வறுமையை மறக்க.
அவர்களைத் தவிர எவராலும்
விடுவிக்க முடியாத புதிர்களை
ஆலோசித்து உருவாக்கிப்
பெருமிதத்துடன்
சிரித்துக் கொண்டார்கள்
ஏளனங்களை மறக்க.
அவர்களால் மட்டுமே
அழிக்க முடிகிற அரக்கர்களையும்
அவர்களை மட்டுமே
நேசிக்கிற தேவதைகளையும்
உலவ விட்டார்கள்
ஒடுக்கப்படுவதையும்
ஒதுக்கப்படுவதையும் மறக்க.
மீளாத் துயருடன்
நாளும்
அக்கதைகளைக் கேட்டபடி
அவர்களுக்காகவே
மின்னிக் கொண்டிருந்தன..
ஆதிக்கவாதிகளால்
நலிந்து அழிந்து போன
அவர்களது உறவுகள்,
நட்சந்திரங்களாக வானத்தில்.
***
-ராமலக்ஷ்மி