மதி
வீட்டைச் சுத்தம் பண்ணி நாளாச்சு
குப்பைக்குள் கொஞ்சூண்டு
வீடு மீதமிருந்தது !
ஒரு வெள்ளிக்கிழமை
ரெண்டாம் சாமத்தில்
சடாரெனச் சுதாரித்துக் கொண்டு
மூக்கின் மேல் துணியைக் கட்டினோம்.
வீடு அதிர
விளக்குமாறு அதிர
ஆவேசமாய் என்றாவது
வீட்டைச் சுத்தம் செய்து
பழக்கம் உண்டா உங்களுக்கு ?
காலியான அரிசி மூடைச் சாக்கொன்றில்
வேண்டாத சாமானனைத்தும்
விறுவிறுவென அள்ளிப்போட்டபடி
………………
உப்பு புளி மிளகு
நவதானியச் சத்து மாவு
மூன்று மாதமாய்ப் பிரிக்காத
ஒரு கிலோ பருப்பு பாக்கெட்
கண்ணாடி பாட்டில்கள்
காலி பாட்டில்கள்
கத்தை கத்தையாய்
காகிதங்கள்
சாவி தொலைத்த பூட்டுகள்
பூட்டு தெரியாத சாவிகள்
கொஞ்சம் துணிமணி
கிழிந்த செருப்புகள்
நாலே நாலு பேர் இருந்த வீட்டில்
பதினைந்து டூத் பிரஷ்கள் !
……………
ஏழெட்டு சாக்குகளில் குப்பைச் சாமான்.
வாசலில் வைத்து விட்டு வந்து
பெருக்கி கழுவி வியர்த்து குளித்து
முடிந்ததும் பார்த்தால்
வீட்டின் விசாலம்
முதல் முறை உறைத்தது.
சுத்தம் சோறு போடும்.
…………………………………………..
காலையில் சோம்பல் முறித்துக்
கதவைத் திறந்து மாடத்தில் நிற்கிறேன்.
குப்பை அள்ளும் வண்டிக்காரி
என் வீட்டின் பிரிக்காத
பருப்பு பாக்கெட்டை
பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சுத்தம் சோறு போடும்.
Gr8 going dude !!